சனாதன சர்ச்சை-உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு பதவிக்கு வேட்டு வைக்கும் பாஜக- டெல்லி செல்லும் ஆளுநர் ரவி!
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லிக்கு செல்கிறார். டெல்லியில் செப்டம்பர் 15-ந் தேதி ஆளுநர் ரவி தங்கியிருப்பார் என்கின்றன ஆளுநர் மாளிகை வட்டாரங்கள்.
சனாதன தர்மம் குறித்து தமிழ்நாட்டில் பாஜக தலைவர்களை விட அதிகம் பேசுகிறவர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. தமிழ்நாட்டில் சனாதன தர்ம எதிர்ப்பு அதிகம். இதனாலேயே சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடும் நடத்தப்பட்டது.

சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு பங்கேற்றனர். இதில் சனாதனத்தை ஒழிப்போம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதால் வெடித்த சர்ச்சை இன்னமும் ஓயவில்லை.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருவருமே விரிவான அறிக்கை வெளியிட்டிருந்தனர். அதில் கூட சனாதன ஒழிப்பை நியாயப்படுத்திதான் இருந்தனர். இதனால்தான் பாஜக படு உக்கிரம் காட்டுகிறது.
அதேநேரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபுவுக்கு எதிராக ஏதாவது ஒரு வகையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பாஜகவும் முட்டி மோதுகிறது. இரு அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மனுவும் கொடுத்தது தமிழ்நாடு பாஜக. அத்துடன் தமிழ்நாடு முழுவதும் நேற்று பாஜகவினர் மறியல் போராட்டம், முற்றுகைப் போராட்டம் என தீவிரம் காட்டினர். சென்னையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. டெல்லி செல்ல இருக்கிறார். டெல்லியில் செப்டம்பர் 15-ந் தேதி வரை தங்கி இருக்கும் ஆளுநர் மத்திய அமைச்சர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார். ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி, இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சரவையில் தலையீட்டை காட்டியவர் ஆளுநர் ரவி. இதனால் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு விவகாரத்திலும் டெல்லி அனுமதியுடன் சில எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆளுநர் ரவி மேற்கொள்ளக் கூடும் எனவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications