"கோடி கோடியாக சம்பாதிக்கும் விஜய் நியாயமான ஜீவனாம்சம் வழங்க வேண்டும்”.. சங்கீதா மீண்டும் மனு!
சென்னை: நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். விவாகரத்திற்கு பிறகு வேறு வீட்டிற்கு செல்லும் வரை நீலாங்கரை வீட்டில் தங்க விஜய் தன்னை அனுமதிக்க உத்தரவிடக் கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சங்கீதா புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.
விஜய்யை திருமணம் செய்து 26 வருடங்கள் குடும்பம் நடத்தி இரண்டு குழந்தைகள் பெற்று வளர்த்துள்ளேன். திருமணத்திற்கு பிறகு பல வருடங்கள் விஜயை மிகவும் சிறப்பாக கவனித்துக் கொண்டேன். விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளதால் சென்னையில் தற்போது வசிக்க இடம் இல்லாமல் இருக்கிறேன்; விவாகரத்து வழக்கு முடியும் வரை என்னை சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் தங்கியிருக்க விஜய் அனுமதிக்க வேண்டும் என சங்கீதா கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்,கடந்த 1999ஆம் ஆண்டு சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 25 வயதில் ஒரு மகன் மற்றும் 20 வயதில் ஒரு மகள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக விஜய் சங்கீதா பிரிந்து வாழ்ந்து வந்தனர். சங்கீதா லண்டனில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், சங்கீதா விவாகரத்து கோரி டிசம்பர் மாதத்தில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். இதனை நான் 2021ஆம் ஆண்டு தான் அறிந்தேன். விஜய்யும் அந்த நடிகையுடன் வெளிநாடுகளுக்கு பலமுறை ஒன்றாக செய்துள்ளனர்.
இதுதொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பலமுறை வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் குறித்து கேட்டபோது, விஜய் அதை மறுப்போ, எதிர்ப்போ தெரிவிக்கவில்லை. என்னை மன ரீதியாக புண்படுத்தி இருக்கிறார். மன உளைச்சலையும் அவமதிப்பையும் இனி இந்த திருமண வாழ்க்கையில் தொடர முடியாது. எனவே, தனக்கு விவாகரத்து வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
விஜய் சங்கீதா விவாகரத்து விவகாரம் கடந்த சில நாட்களாக பேசுபொருளாக இருந்து வருகிறது. இந்த நிலையில், விஜய் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் விஜய் தன்னை நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்க மறுப்பதாக சங்கீதா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேலும், விவாகரத்து வழக்கு முடியும் வரை, தன்னை சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் தங்கியிருக்க விஜய் அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். "தவெக தலைவர் விஜய் தங்கியிருக்கும் வீட்டில் எனக்கும் சரிபாதி பங்கு இருக்கிறது" என சங்கீதா அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
விவாகரத்து முடிந்து வேறு வீட்டிற்கு செல்லும் வரை நீலாங்கரை வீட்டில் அனுமதிக்க வேண்டும். நீலாங்கரை வீட்டில் அனுமதிக்க கோரினால், வழக்கறிஞர் மூலமாக விஜய் தரப்பினர் மிரட்டுவதாக சங்கீதா குற்றம்சாட்டியுள்ளார். ஏற்கனவே தாக்கல் செய்த முதல் மனுவில் நியாயமான ஜீவனாம்சம் கோரியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
மனுவில், அந்த வீடு தான் தங்களது திருமண வாழ்க்கையின் முக்கியமான இல்லமாக இருப்பதாகவும், வழக்கு முடிவடையும் வரை அங்கு தங்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதற்கு மாற்றாக, சமமான வசதி கொண்ட மற்றொரு வீடு வழங்கப்பட வேண்டும் என்பதையும் கோரியுள்ளார்.
படத்தில் நடித்து கோடி கோடியாய் சம்பாதிக்கும் விஜய் தனக்கும், பிள்ளைகளுக்கும் நியாயமான ஜீவனாம்சம் வழங்க வேண்டும். விஜய் எனக்கும், என் பிள்ளைகளுக்கும் நியாயமாக சேர வேண்டியதை வழங்க வேண்டும். பலமுறை முயற்சித்தும் பரஸ்பரம் பிரிந்து செல்ல விஜய் மறுப்பு தெரிவிப்பதாக மனுவில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications