ஆதிக்க கலாச்சாரத்தை தகர்க்க முடியவில்லை...நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி பானர்ஜி உருக்கமான கடிதம்
மேகலாயவிற்கு மாற்றப்பட்ட தலைமை நீதிபதியின் இடமாற்றத்தை வழக்கறிஞர் விரும்பாமல் போராட்டம் நடத்திய நிலையில் பிரிவு உபச்சார விழாவை தவிர்த்து இன்று கொல்கொத்தா புறப்பட்டுச் சென்ற தலைமை நீதிபதி பானர்ஜி சக நீதிபதிகளுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தனிப்பட்ட முறையில் உங்களிடம் விடைபெறாமல் செல்வதற்காக மன்னியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி
கொல்கொத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி கடந்த 2021 ஜனவரி மாதம் 4 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் 50 வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். 10 மாத காலம் விரைவாக பல வழக்குகளில் தீர்ப்பு வழங்கி நேர்மையான சார்பற்ற நீதிபதி என பெயரெடுத்தார். சஞ்ஜிப் பானர்ஜியின் செயல்பாடு, வேகமாக வழக்குகளை பைசல் செய்தது, முக்கிய வழக்குகளில் சிறப்பான தீர்ப்பு தமிழகம் முழுவதும் பெரிய வீச்சை ஏற்படுத்தியது.

திடீர் இடமாற்றம்
2023 நவம்பர் 1 ஆம் தேதி இவர் ஓய்வு பெறும் நிலையில் தற்போது மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தது. அதே சமயம் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி முனேஷ்வர் பந்தாரியை நியமனம் செய்தது. இந்த இரு பரிந்துரைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு குடியரசு தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில் அவரை திடீரென 5 நீதிபதிகள் கொண்ட சிறிய மாநிலத்துக்கு மாற்ற கொலிஜியம் பரிந்துரைத்ததன் பின்னணியில் பல்வேறு சந்தேகங்களையும் மாற்றும் அவசியம் ஏன் என வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பினர்.

வழக்கறிஞர்கள் எதிர்ப்பு
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையைச் சேர்ந்த 237 வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்ற கொலிஜியத்தில் அங்கம் வகிக்கும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா உள்ளிட்ட ஐந்து நீதிபதிகளுக்கு கடிதம் அனுப்பினர். போராட்டமும் நடத்தப்பட்டது. ஆனால் தலைமை நீதிபதி பானர்ஜி எதுவும் சொல்லாமல் மாறுதலை ஏற்றுக்கொண்டார்.

சிறிய மாநிலத்துக்கு தலைமை நீதிபதியா?
75 நீதிபதிகளை கொண்ட சார்ட்டர்டு உயர் நீதிமன்றமான, சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து, 2013ம் ஆண்டு துவங்கப்பட்டு, இரு நீதிபதிகள் மட்டுமே உள்ள மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மாற்றுவது குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. ஆனாலும் இன்று காலை திடீரென தலைமை நீதிபதி யாரிடம் சொல்லாமல் குடும்பத்துடன் சென்னையிலிருந்து புறப்பட்டு கொல்கொத்தா சென்றார். பிரிவு உபச்சார விழாவையும் தவிர்த்து விட்டார்.

என்னை மன்னியுங்கள்...பானர்ஜியின் உருக்கமான கடிதம்
இந்நிலையில் கொல்கொத்தா செல்லும் முன் தன் சக நீதிபதிகளுக்கு கடிதம் ஒன்றை தலைமை நீதிபதி எழுதியுள்ளார். அதில் உருக்கமாக பல விஷயங்களை பதிவு செய்துள்ளார். இந்தியாவிலேயே சென்னை வழக்கறிஞர்கள் சிறப்பானவர்கள் எனவும் பாராட்டியுள்ளார். அவரது கடிதம் வருமாறு:

கோபம் தனிப்பட்ட முறையிலானது அல்ல
"தனிப்பட்ட முறையில் உங்களிடம் விடைபெறாமல் செல்வதற்காக மன்னியுங்கள், என்னுடைய நடவடிக்கைகள் புண்படுத்தி இருந்தால் அது தனிப்பட்ட முறையிலானது இல்லை. அது உயர் நீதிமன்ற நலனுக்கானது மட்டுமே.

சென்னை வழக்கறிஞர்கள் நாட்டிலேயே சிறப்பானவர்கள்
என் மீதான உங்களின் அளவுகடந்த அன்பினால் பூரித்து போயிருக்கிறேன். நாட்டிலேயே சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள்தான் சிறப்பானவர்கள். திறமையான நிர்வாகத்தை மேற்கொள்ள உதவியாக இருந்த பதிவுத்துறைக்கும் நன்றி. இதேபோல வெளிப்படைத்தன்மையுடன் நடவடிக்கைகளை தொடர வேண்டும்.

ஆதிக்க கலாச்சாரத்தை தகர்க்க முடியவில்லை
தனக்காக நீண்ட நேரம் காத்திருந்த நீதிமன்ற ஊழியர்களுக்கும் நன்றி. இதுநாள் வரை ஆதிக்க கலாச்சாரத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். அதை முழுமையாக தகர்த்தெரிய என்னால் இயலவில்லை.
Recommended Video

தமிழகத்தை எனது சொந்த மாநிலமாக கருதினேன்
இந்த அழகான மாநிலத்தை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் கடன் பட்டுக்கிறேன். எனது சொந்த மாநிலம் என 11 மாதங்களாக சொல்லிக் கொண்டிருந்த மகிழ்ச்சியிலேயே உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்".
இவ்வாறு அவரது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications