உயிருடன் இலங்கை செல்ல விரும்பிய சாந்தன்.. இன்று எடுத்துச் செல்லப்படும் உடல்! கண்ணீரில் தமிழர்கள்
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகளுக்கு பின் விடுதலை செய்யப்பட்டு நேற்று உடல்நலக் குறைவால் காலமான சாந்தன் உடல் இன்று இலங்கை கொண்டு செல்லப்படுகிறது.
சென்னை ஸ்ரீபெரம்புதூர் அருகே முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். தொடக்கத்தில் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, அதன்பின்னர் அவர்கள் பல ஆண்டுகாலம் சிறையில் கழித்ததை அடுத்து மனிதாபிமான அடிப்படையில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 7 பேரும் 32 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்தனர். இந்த நிலையில், அவர்களை விடுவிக்க தமிழ்நாடு சட்டசபையில் அரசு தீர்மானம் நிறைவேற்றியது.

ஆனால், இதனை ஏற்று ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்திடவில்லை. 7 தமிழர்களை விடுவிக்கக்கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 15 மாதங்களுக்கு முன் விடுதலை செய்தது. இதனை அடுத்து தமிழ்நாட்டை சேர்ந்த பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டு வீட்டுக்கு சென்றனர். ஆனால், இலங்கையை சேர்ந்த சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், முருகன் உள்ளிட்டோர் நிலை இன்னும் மோசமானது. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர்களால் இலங்கை திரும்ப முடியவில்லை.
அவர்களை தாய் நாட்டுக்கு அனுப்புவதில் சட்ட சிக்கல்கள் தொடர்ந்தன. இந்த நிலையில், திருச்சியில் உள்ள அயல் நாட்டவருக்கான சிறப்பு முகாமில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். அந்த முகாம் சிறையைவிட மோசமாக இருப்பதாகவும், காற்று வாங்குவதற்கு கூட வெளியில் செல்ல சுதந்திரம் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்து வந்தனர். தங்களை இலங்கை செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் அவர்கள் கடிதம் எழுதி இருந்தனர். சிறையை விட கொடுமையானதாக திருச்சி சிறப்பு முகாம் உள்ளது என்று வேதனை தெரிவித்து இருந்தனர்.
சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட நாளில் இருந்து பல மாதங்கள் அறையிலேயே தங்க வைக்கப்பட்டதால் பல நோய்களுக்கு உள்ளானதாக தெரிவித்தனர். மறுபக்கம் சாந்தனுக்கு உடல் நிலை மோசமானது. இதற்கிடையே அண்மையில் மத்திய அரசு சாந்தன் இலங்கை செல்வதற்கு அனுமதி அளித்தது. இந்த நிலையில் சாந்தனுக்கு உடல்நிலை மோசமானதை அடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை 7.50 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தெரிவித்து உள்ளது. சிறையில் இருந்து விடுதலையாகி 2 ஆண்டுக்குள் சாந்தன் தாய் நாடான இலங்கைக்கு செல்ல முடியாமல் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது உடல் இன்று இலங்கை யாழ்பானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன.












Click it and Unblock the Notifications