இது பட்ஜெட்டாங்க? கடன் ஜாஸ்தியாகுமே! பொருளாதாரத்தை மீட்க அறிகுறியே இல்லையே.. சரத்குமார் தாக்கு
சென்னை: பொருளாதாரம் மீள்வதற்கு அறிகுறி இல்லாத ஒரு பட்ஜெட்டாகவே தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை உணர்த்துகிறது என சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.
2024- 2025 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை நேற்றைய தினம் நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவால் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை திமுக கூட்டணி கட்சிகள் பாராட்டியும் எதிர்க்கட்சிகள் விமர்சித்தும் உள்ளன.

வார்த்தை ஜாலங்கள், அலங்கார வார்த்தைகள் கொண்ட பட்ஜெட் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். அது போல் இது ஒரு கனவு பட்ஜெட் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். அந்த வகையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
சரத்குமார் கருத்து: பட்ஜெட் குறித்து அவர் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் 2024- 2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு மக்களை கவர்வதற்காக வெளியிடப்பட்ட பட்ஜெட்டாகவே தெரிகிறது. ஏற்கெனவே உள்ள கடனை குறைப்பதற்கு வழிவகை செய்யாமல் கவர்ச்சிகரமாக பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது மேலும் கடன் சுமையை அதிகரிக்கும்.
தமிழக அரசின் மொத்த கடன் ரூ.8,33,361 கோடியாக உயரும் என்ற தகவல் பேரதிர்ச்சியாக இருக்கிறது. சில திட்டங்கள் வரவேற்கும் அம்சங்களை கொண்டது. மொத்தத்தில் பொருளாதாரத்தை மீள்வதற்கு இந்த பட்ஜெட்டில் எந்த அறிகுறியும் இல்லை. இவ்வாறு சரத்குமார் தெரிவித்துள்ளார்.
ஜி.கே.வாசன்: அது போல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் 2024- 2025 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் வறுமையைப் போக்கவும் வேலை வாய்ப்பை அதிகரிக்கக் கூடிய பொருளாதார நிலையை உயர்த்தக் கூடிய பட்ஜெட்டாக அமையாமல் தமிழக விவசாயிகளின், தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத பட்ஜெட்டாகவே அமைந்திருக்கிறது என விமர்சித்துள்ளார்.
தினகரன் கருத்து: அது போல் டிடிவி தினகரன் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் பட்ஜெட் ஏழை, எளிய மக்கள் தொடங்கி மாணவர்கள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏமாற்றமளிக்கும் தேர்தல் கால திமுக அரசின் விளம்பர பட்ஜெட்டாகவே அமைந்துள்ளது.
2024-25ஆம் ஆண்டில் ஒரு லட்சம் மாணவர்களுக்கு ரூ.2,500 கோடி அளவு கல்விக் கடன் வழங்கப்படும் என அறிவித்திருக்கும் திமுக அரசு, தனது தேர்தல் வாக்குறுதியான கல்வி கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை வெளியிடாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்றி திமுக ஆட்சிக்கு வந்தது என்றும், அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் அரசு பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என அறிவித்திருப்பதன் மூலம் 3 லட்சத்து 50 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற முடியாத பகல் கனவாக மாறியிருக்கிறது.
கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றிருந்த 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்ற அறிவிப்பே தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை என்றும், நடப்பாண்டில் 3,500 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என அறிவித்திருப்பது மக்களை ஏமாற்றும் செயல்.
மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவது தொடர்பாகவும் எந்தவிதமான அறிவிப்புகளையும் பட்ஜெட்டில் இடம்பெற செய்யவில்லை. அனைத்து தரப்பினருக்கும் ஏமாற்றத்தை மட்டுமே பரிசாக தந்திருக்கிறது திமுக அரசு என்றும் தினகரன் காட்டமாக குற்றம் சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications