எவ்வளவோ பிரச்சினை இருக்கு..நயன் பிரச்சினை முக்கியமா? மக்களை திசை திருப்பும் ஊடகம்..சரத்குமார் சுளீர்
சென்னை: கடந்த இருவாரங்களில் தமிழக ஊடகங்களின் செய்திகள் ஆச்சரியம் ஊட்டுபவையாக உள்ளன எனவும், மக்கள் தமிழகத்தில் நடைபெறும் பல முக்கிய சம்பவங்களை மனதில் நிறுத்தி கேள்வி எழுப்பிவிடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, ஊடகங்கள் மக்களைத் தொடர்ந்து திசை திருப்பி வருவது ஊடக தர்மத்திற்கு முற்றிலும் எதிரானது என கூறியுள்ளார் நடிகரும் பாஜக தலைவருமான சரத்குமார்.
கடந்த சில வாரங்களாகவே தமிழக அரசியல் சினிமா என அனைத்து தளங்களும் பரபரப்பாகவே இருக்கிறது. தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து கங்குவா திரைப்படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் படம் சரியில்லை, இரைச்சலாக இருக்கிறது என ரசிகர்களின் மிகக் கடுமையான விமர்சனத்தை சந்தித்தது. இதுதொடர்பாக ஜோதிகாவே ஏன் இப்படி என கேள்வி எழுப்பினார்.
இது ஒரு புறம் இருக்க அதற்கு அடுத்த நாளே தனுஷ் நயன்தாரா விவகாரம் பெரிய அளவில் பேசுபொருளாக இருக்கிறது. இடையே திமுக அதிமுக மோதல், விஜய் கூட்டணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு என பரபரப்பாக இயங்கி வருகிறது தமிழக அரசியல் களம். இடையில் ஜாஃபர் சாதிக் இயக்குனர் அமீர் மீதான அமலாக்கத்துறை வழக்கு, லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை என பரபரப்பாகவே இருக்கிறது.
இந்நிலையில் ஊடகங்கள் மக்களைத் தொடர்ந்து திசை திருப்பி வருவது ஊடக தர்மத்திற்கு முற்றிலும் எதிரானது என கூறியுள்ளார் நடிகரும் பாஜக தலைவருமான சரத்குமார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," கடந்த இருவாரங்களில் தமிழக ஊடகங்களின் செய்திகள் ஆச்சரியம் ஊட்டுபவையாக உள்ளன.மக்கள் தமிழகத்தில் நடைபெறும் பல முக்கிய சம்பவங்களை மனதில் நிறுத்தி கேள்வி எழுப்பிவிடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, ஊடகங்கள் மக்களைத் தொடர்ந்து திசை திருப்பி வருவது ஊடக தர்மத்திற்கு முற்றிலும் எதிரானது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தனக்கு தொடர்பில்லை என்று கூறிய இயக்குநர் அமீர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. லாட்டரி மார்ட்டின் தொடர்பான அமலாக்கத்துறை சோதனைகளில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தின் இரு பெரிய கட்சிகளுக்கும் மக்கள் மீது அக்கறையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாகத் தெரிவித்துள்ளது. இந்திய பாதுகாப்புத்துறையில் அதிரடி சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு பிஎம்.வித்யாலெட்சுமி உள்ளிட்ட பல நலத்திட்டங்களுக்கான அனுமதி அளித்திருக்கிறது.
இதுபோன்று இன்னும் பலப்பல முக்கிய நிகழ்வுகளை அதிக கவனம் பெறாத வகையில் கவனமாகக் கடந்து போக விட்டு விட்டு, மேடையில் கூறிய கருத்திற்காகக் கைது செய்யப்பட்டிருக்கும் திருமதி.கஸ்தூரியைப் பற்றிய செய்திகளையும், திரைத்துறையின் தனிநபர் பிரச்சனைகளையும் தலைப்புச் செய்தியாக வெளியிட்டு, இவற்றை மட்டுமே முக்கிய செய்தியாகக் காட்டி, மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய உண்மைகளை அவர்கள் கண்களில் இருந்தும் கவனத்தில் இருந்தும் மறைத்துவிடும் ஊடகங்கள் இங்கு மிகுந்திருப்பது ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கும்.
ஊடகங்கள் தங்கள் கடமைகளைச் செய்யத்தவறினாலும், நாட்டு நிகழ்வுகளை உணர்ச்சிகரமாக மட்டுமே அணுகாமல் தெளிவாகப் புரிந்து, பல தரவுகளின் அடிப்படையில் உண்மைகளைத் தெரிந்துகொண்டு சமூக விழிப்புணர்வு பெற வேண்டியது மக்களின் கடமை என்ற கருத்தை முன்வைக்க விரும்புகிறேன்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications