மாறும் கணக்கு! வைத்திலிங்கம்- சசிகலா- டிடிவி தினகரன் திடீர் மீட்டிங்.. அதிரும் அதிமுக அரசியல் களம்!
சென்னை: ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கத்தை சசிகலா, அவரது சகோதரர் திவாகரன் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் அடுத்தடுத்து நேரில் சென்று சந்தித்துள்ளது அதிமுக மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தனது சொந்த ஊரான தெலுங்கன்குடிகாட்டில் வசித்து வருகிறார். ஒருகாலத்தில் அதிமுகவின் சோழ மண்டல தளபதியாகத் திகழ்ந்தவர். டெல்டா அதிமுகவை தனது கண்பார்வைக்கு கட்டுப்பட வைத்திருந்தனர். ஜெயலலிதாவின் நம்பிக்குரியவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர்.

வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்காமல், ஓபிஎஸ் பின்னால் சென்றார். இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமியால் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவைச் சேர்ந்த வைத்திலிங்கம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பக்க பலமாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக வைத்திலிங்கம் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தெலுங்கன்குடிகாடு பகுதியில் தனது கட்சி நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண விழாவிற்கு சென்றிருந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வைத்திலிங்கத்தை வீடு தேடிச் சென்று நலம் விசாரித்தார்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓர் அணியில் திரள வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமும். அதற்குத் தடையாக இருப்பவர்கள் வரும் காலத்தில் நிச்சயம் பதில் சொல்வது போன்ற சூழ்நிலை வரும்" எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் இஃப்தார் நோன்பு திறப்பதற்காக சென்ற சசிகலா மற்றும் அவரது சகோதரர் திவாகரன் ஆகியோரும் வைத்திலிங்கம் வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்தனர். அப்போது சசிகலா வைத்திலிங்கம் உடல்நிலை பற்றி விசாரித்ததோடு, நிச்சயம் 2026ல் பழைய மாதிரி வருவோம், ஒரத்தநாடு எம்.எல்.ஏ நீங்கள்தான் என நம்பிக்கை அளித்ததாக கூறப்படுகிறது.
வைத்திலிங்கத்திடம் நம்பிக்கையுடன் பேசிய சசிகலா, "எதற்கும் கவலைப்பட வேண்டாம். நீங்கள் வருகிற சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடப் போகிறீர்கள். ஒரத்தநாடு எம்.எல்.ஏ நீங்கதான். வேலையை ஆரம்பிங்க" என்று தெரிவித்துள்ளார்.

வைத்திலிங்கம் உடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா "அதிமுகவை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஆரம்பித்தது. இந்த கட்சி மக்களுக்காகவும், ஏழைகளுக்காகவும் ஆரம்பிக்கப்பட்டது. நல்லாட்சியை 2026ஆம் ஆண்டு கொடுப்போம். அந்த ஆட்சி மக்களாட்சியாக இருக்கும். அதிமுக ஒன்றிணைவது என்பது ஒருவர் முடிவு செய்யும் விஷயம் இல்லை.
அடிமட்ட தொண்டன் என்ன முடிவு செய்கிறார்களோ அதுதான் அ.தி.மு.கவில் நடக்கும். அதை நாங்கள் நல்லபடியாக செய்வோம். வைத்திலிங்கத்தை பார்ப்பதற்கும் உடல்நலம் பற்றி விசாரிப்பதற்கும் வந்தேன். இந்த சந்திப்பில் எல்லாமே பேசினோம். சந்திப்புக்கு அனைத்தும் காரணம் தான்" என்றும் சசிகலா தெரிவித்தார்.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க, அதிமுகவில் பல்வேறு சலசலப்புகள் ஏற்பட்டு வருகின்றன. அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கத்தை டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோர் அடுத்தடுத்து சந்தித்துப் பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications