சோஷியல் மீடியா பக்கமே போக முடியல.. கடும் மன உளைச்சலில் சசிகலா.. பழி போடுறாங்க.. என்னாச்சு?
சென்னை: அதிமுகவில் உட்கட்சி பிரச்சனையின் போதெல்லாம் "பார்த்துக்கலாம்" என்ற மனப்பான்மையுடன் உறுதியாக இருந்த சசிகலா.. கடந்த 2 நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக அவருக்கு நெருக்கமான நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.
சசிகலா கடந்த 6 வருடங்களாக சந்தித்தது எல்லாமே சறுக்கல்கள்தான். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் முதல்வராகலாம் என்று ஆசையாக இருந்தவருக்கு.. கடைசி நேரத்தில் ஓபிஎஸ் நடத்திய தர்ம யுத்தத்தால் முதல்வர் பதவி பறிபோனது.
அடுத்த சறுக்கலாக சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டதால் சசிகலா சிறைக்கு சென்றார். அதன்பின் 4 ஆண்டு முடிந்து சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா அதிமுகவில் இருந்து மொத்தமாக ஓரம்கட்டப்பட்டார்.
அதிமுகவை மீட்க அவர் கடந்த ஒன்றரை வருடமாக முயன்றும் அவரால் அதிமுகவை மீட்கமுடியவில்லை.

என்ன நடந்தது?
இப்படி தொடர்ச்சியாக சறுக்கல்களை சந்தித்து வந்த சசிகலாதான் தற்போது இன்னொரு மிகப்பெரிய சறுக்கலை, தோல்வியை சந்தித்து இருக்கிறார். அதுதான் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை. எப்படியாவது அதிமுகவை மீட்டு விடலாம், அதிமுகவிற்குள் மீண்டும் பெரிய தலைவராக வலம் வரலாம் என்று நம்பிக்கையாக இருந்த சசிகலாதான் கடந்த 2 நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக அவருக்கு நெருக்கமான நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர். ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை காரணமாக அவர் கடுமையாக உடைந்து போய் இருப்பதாக சமீபத்தில் அவரை பார்த்த நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

மன உளைச்சல்
சசிகலா கடந்த 48 மணி நேரத்தில் இரண்டு அறிக்கையை வெளியிட்டுவிட்டார். முதல் அறிக்கையில், என் மீது பழி போடுவதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இது போன்று என் மீது பழிபோடுவது ஒன்றும் புதிது இல்லை. என்றைக்கு நான் அம்மா அவர்களின் கரத்தை பிடித்தேனோ அன்று ஆரம்பமானது என் மீது இந்த பழி போடும் படலம். அது இந்த நொடிவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதைப்பற்றி கவலைப்பட்டு இருந்தால் எங்களால் அரசியலில் இந்த அளவுக்கு சாதித்து இருக்கமுடியாது. ஆனால் அதே சமயம் என் அக்கா, நம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்துவதுதான் எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது., என்று கலக்கமாக குறிப்பிட்டார்.

இரண்டாவது அறிக்கை
இந்த அறிக்கையின் சூடு தணியும் இரண்டாவது அறிக்கையையும் சசிகலா நேற்று வெளியிட்டார். அதில், தொலைக்காட்சி, சமூக ஊடக வலைத்தளங்களை பயன்படுத்தி எனக்கு எதிராக இவர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். என் மீது வீணாக பழி சுமத்துகிறார்கள். அரசுக்கு எதிராக தொடர் கேள்விகளை கேட்பதால் அவர்கள் எனக்கு எதிராக இப்படி வீண் பழி சுமத்துகிறார்கள், என்று சசிகலா கடுமையாக இரண்டாவது அறிக்கையை வெளியிட்டு உள்ளார்.

சமூக வலைத்தளம்
கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் வர கூடிய செய்திகளை பார்த்து சசிகலா அதிருப்தியில் இருப்பதாகவும். தனக்கு நெருக்கமான தலைவர்களிடம் சசிகலா தனது வருத்தத்தை தெரிவித்து வருவதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன... எனக்கு எதிராக இவர்கள் குற்றம் சாட்டுவார்கள் என்று தெரியும். அதை நான் எதிர்பார்த்துதான் இருந்தேன். ஆனால் இவர்கள் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளனர்.

சில வார்த்தைகள்
சில வார்த்தைகள் மிக கடுமையாக இருக்கின்றன. என் மீது எல்லா பழியையும் அப்படியே திருப்ப வேண்டும் என்று திட்டம் போட்டு இவர்கள் இந்த அறிக்கையை தயார் செய்து உள்ளனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு எதிராக நான் சட்ட ரீதியாக போராடுவேன் என்று சசிகலா கூறி இருக்கிறாராம். சசிகலா சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி விவாதிக்கப்படும் விஷயங்களை சுத்தமாக விரும்பவில்லை, தன் பக்கத்துக்கு நியாயங்களை வெளிப்படுத்தும் வகையில் அவர் நடவடிக்கைகளை எடுப்பார் என்று சசிகலா தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications