வேதா இல்லத்திற்கு எதிரே சசிகலாவின் "ஜெயலலிதா இல்லம்"! 7 ஆண்டு கழித்து.. புயலடிக்கும் போயஸ் கார்டன்
சென்னை: சென்னை போயஸ் கார்டனில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டிற்கு எதிரே கட்டியுள்ள புதிய வீட்டிற்கு அவருடைய தோழியும் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான சசிகலா குடியேறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூர் சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த 2017ஆம் ஆண்டு பரப்பன அக்ரஹார சிறையில் இவர்கள் மூவரும் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து 2020ஆம் ஆண்டு சசிகலா சிறையிலிருந்து விடுதலை ஆனார். அப்போது முதல் அதிமுகவை கைப்பற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். அந்த வகையில் தற்போது பிரிந்துக் கிடக்கும் அதிமுகவை பழைய மாதிரி ஒருங்கிணைந்த அதிமுகவாக மாற்றுவேன் என சபதம் எடுத்துள்ளார்.
எம்ஜிஆர் உருவாக்கிய ஜெயலலிதா கட்டிக் காத்த இயக்கத்தை கட்டுக்கோப்பாகவும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் சசிகலா தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் அவர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டிற்கு சென்றார். அங்கு ஜெயலலிதாவின் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
பின்னர் அங்கு கட்டப்படும் நினைவிடத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில் சென்னை போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்கு எதிரே சசிகலாவும் ஒரு புதிய பங்களாவை கட்டியுள்ளார். இந்த பங்களாவுக்கு கடந்த மாதம் கிரகபிரவேசம் செய்திருந்தார்.
#WATCH | Tamil Nadu | Former AIADMK leader VK Sasikala pays floral tribute to former CM J Jayalalithaa's portrait placed in her newly constructed house in Chennai Poes Garden. pic.twitter.com/IIMW9omQ5A
— ANI (@ANI) February 24, 2024
ஜெயலலிதா உயிருடன் இருந்தவரையும் தான் பரப்பன அக்ரஹார சிறைக்கு செல்லும் வரையிலும் போயஸ் தோட்ட இல்லத்திலேயே தங்கியிருந்த சசிகலா, சிறையிலிருந்து வெளியே வந்ததும் சென்னை திநகரில் உள்ள இளவரசி மகள் கிருஷ்ணபிரியா வீட்டில் தங்கியிருந்தார். அங்கிருந்தபடியே போயஸ் தோட்டத்தில் வீட்டை கட்டி முடித்தார்.
இந்த புதிய இல்லத்திற்கு கடந்த மாதம் கிரகபிரவேசம் நடந்தது. இதற்கு மிக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே சென்றிருந்தனர். அந்த வீட்டில் சுமார் 7 ஆண்டுகள் கழித்து போயஸ் தோட்ட இல்லத்தில் சசிகலா குடிபெயர்ந்துள்ளார். இந்த பங்கள 24000 சதுர அடி கொண்டது. வேதா இல்லத்தை விட பெரிதாக கட்டப்பட்டுள்ளது. தரைதளம், அதற்கு மேல் இரு தளங்கள் உள்ளன.
இந்த வீட்டில் ஒரே நேரத்தில் 10 கார்களை நிறுத்தலாம். ஜெயலலிதா இருந்த வரை போயஸ் கார்டன் செல்வாக்கு மிகுந்த பகுதியாக இருந்து வந்தது. அந்த பகுதியில் வசிப்போருக்குகூட சில கெடுபிடிகள் இருந்ததாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் தற்போது சசிகலா அந்த பகுதிக்கு செல்கிறார். அங்கு இருந்து கொண்டு அவர் இனி அரசியல் களத்தில் தனது பங்களிப்பை நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications