திருநெல்வேலியில் "கால்" வைத்த சசிகலா.. உடனே ஸ்டேஷனில் பஞ்சாயத்து.. நெல்லையில் இப்பவே கண்ணு கட்டுதே
சென்னை: விகே சசிகலாவின் அடுத்தக்கட்ட சுற்றுப்பயணம் இன்று துவங்கியிருக்கும் நிலையில், அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இந்த பயணத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். 2ம் கட்ட சுற்றுப்பயணம் சசிகலாவுக்கு எந்த அளவுக்கு வெற்றியை தரப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் தற்போது தென்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ளது...!!
தேர்தல்களில் அடுத்தடுத்த தோல்வியை அதிமுக சந்தித்து வருகிறது.. இந்நிலையில், அதிமுகவின் நிர்வாகிகளிடம் மாவட்டந்தோறும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

விரைவில் சட்டசபை தேர்தல் வரஉள்ள நிலையில், அதிமுகவின் தொடர் தோல்விகள், வாக்கு சதவீதம் குறைந்திருப்பது, வாக்குகள் பிரிந்து செல்வது, திமுகவின் அசுர பலம், பாஜகவின் வியூகங்கள் போன்றவை குறித்தெல்லாம் நிர்வாகிகளிடம் இந்த ஆலோசனை கூட்டங்களில் பேசப்பட்டுள்ளது.
சாத்தியமா?: அப்போது, சசிகலா + தினகரன் + ஓபிஎஸ் என பிரிந்து சென்றவர்களையெல்லாம் மீண்டும் ஒன்றிணைத்தால் மட்டுமே முக்குலத்தோர் வாக்குகளை பெற முடியும், திமுக கூட்டணிக்கு நெருக்கடி தர முடியும் என்று எடப்பாடியிடம் பெரும்பாலானோர் சொன்னார்களாம். ஆனால், எடப்பாடி இதுவரை இதுகுறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றே தெரிகிறது. எனினும், அதிமுகவை ஒன்றிணைக்க, மூத்த தலைவர்கள் பலர் முயன்றிருக்கிறார்களாம்.
இப்படிப்பட்ட சூழலில், சசிகலாவின் அரசியலில் 2வது இன்னிங்ஸ் ஆரம்பமாகியிருக்கிறது.. தன்னுடைய ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களை சந்திப்பதற்காக, கடந்த மாதம் முதல் சுற்றுப்பயணத்தை துவங்கியிருக்கிறார் சசிகலா.
மாநிலம் முழுவதும் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து அதிமுக தொண்டர்களை சந்திக்கப்போவதாக அறிவித்து, "ஜெயலலிதா வழியில் மக்கள் பயணம்" என்னும் பெயரில் கடந்த மாதம் 17-ந்தேதி தென்காசி மாவட்டத்தில் தனது பயணத்தை தொடங்கினார்.
2வது அதிரடி: இப்போது, 2-ம் கட்டமாக இன்று முதல் நெல்லை மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக சென்று சசிகலா தொண்டர்களை சந்திக்க உள்ளார். இதற்காக நேற்றிரவு நெல்லை வந்த சசிகலாவுக்கு, மாவட்ட எல்லையான கங்கைகொண்டானில் அவரது ஆதரவாளர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்... இன்று மாலை 4 மணி அளவில் நெல்லை தொகுதியில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார் சசிகலா.
இந்த பயண திட்டம் குறித்த தகவலும் வெளியாகியிருக்கிறது. அதன்படி, முதலாவதாக கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கும் சசிகலா அதனை தொடர்ந்து சந்திப்பு அண்ணா சிலை, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கிறார்.
எழுச்சியுரை: அதன் பிறகு, டவுன் எஸ்.என்.ஹைரோட்டில் வ.உ.சி. மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து விட்டு டவுன் காட்சி மண்டபத்தில் தொண்டர்கள் இடையே உரையாற்றுகிறார். பின்னர் சுத்தமல்லி விலக்கு, நடுக்கல்லூர் பகுதிகளில் தொண்டர்களை அவர் சந்திக்கிறார். அங்கிருந்து பழைய பேட்டை வழியாக ராமையன்பட்டி, மானூர், கங்கைகொகொண்டான், தாழையூத்து, தச்சநல்லூர் கரையிருப்பு பகுதிகளில் தொண்டர்கள் இடையே பேசுகிறார்.
அப்போது கரையிருப்பு பகுதியில் அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். தொடர்ந்து அவர் இன்று இரவு ஓட்டலில் ஓய்வெடுக்கிறார். நாளைய தினம் புதன்கிழமை, பாளை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பயணம் மேற்கொள்கிறார். அப்போது அவர் முருகன்குறிச்சி, நீதிமன்றம், பாளை பஸ் நிலையம், குல வணிகர்புரம், மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா ஆகிய இடங்களில் நாளை தொண்டர்களை சந்திக்கிறார்.
இதுதான் பயண திட்டம்: தொடர்ந்து நாளை மறுநாள் அதாவது, வியாழக்கிழமை 15ம் தேதி, சுதந்திர தினத்தையொட்டி அவர் எங்கும் செல்லவில்லை... மறுநாள் 16-ந்தேதி நாங்குநேரி தொகுதி, 17-ந்தேதி அம்பை தொகுதி, 18--ந்தேதி ராதாபுரம் தொகுதியிலும் சுற்றுப்பயணம் செல்கிறார்.
இந்த பயண அறிவிப்பு வெளியாகியதுமே, சம்பந்தப்பட்ட இடங்களில் சலசலப்பு தொடங்கிவிட்டது.. சசிகலாவின் வருகையையொட்டி ஆதரவாளர்கள் வண்ணார்பேட்டை பகுதியில் அதிமுக கொடியை கட்டியிருந்தனர். ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் கணேசராஜா தலைமையில் நிர்வாகிகள் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் , நேற்றைய தினம் இரவோடு, இரவாக அதிமுக கொடிகம்பங்கள் அனைத்தும் அந்த பகுதியில் இருந்து அகற்றப்பட்டன.
முக்குலத்தோர் வாக்கு: எனினும், சசிகலாவின் இந்த பயணங்கள் தென்மண்டல மக்களின் கவனத்தை திருப்பி வருவதுடன், புது தெம்பையும் அவரது ஆதரவாளர்களிடம் ஏற்படுத்தி வருகிறது.. அத்துடன், அதிமுகவில் நுழைவதற்கும், முக்குலத்தோர் வாக்குகளை முழுமையாக பெறுவதற்கும் சசிகலாவின் இந்த பயணம் கை கொடுக்குமா? என்பது தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்க்கலாம்..!!!












Click it and Unblock the Notifications