டிடிவி தினகரன் எடுத்த முடிவால் வந்த வினை! சசிகலாவின் அந்த 30 ஓட்டு தொகுதிகள்.. இதுதான் கடைசி ஆயுதம்
சென்னை: ஜெயலலிதாவின் நிழலாக இருந்து தமிழக அரசியலின் அதிகார மையமாகத் திகழ்ந்த சசிகலா, இன்று பசும்பொன்னில் தனது புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.. அதிமுகவிலிருந்து முழுமையாக ஓரங்கட்டப்பட்ட நிலையில், தனது அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கவும், ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கவும் இந்த அதிரடி முடிவை அவர் எடுத்துள்ளதாக தெரிகிறது.. எனினும் இந்த முடிவானது, தென்மண்டல அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது..
தமிழக அரசியலில் ஜெயலலிதாவிற்கு பிறகு ஒரு அதிகார மையமாக உருவெடுக்க முயன்ற சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றது அவரது அரசியல் வாழ்வில் மிகப்பெரிய முட்டுக்கட்டையாக அமைந்தது..

சசிகலா - எடப்பாடி பழனிசாமி
அவர் ஜெயிலுக்கு சென்றபோது எடப்பாடி பழனிசாமியை முதல்வராக முன்மொழிந்துவிட்டுச் சென்றார்.. ஆனால், 4 ஆண்டுகள் கழித்து அவர் விடுதலையாகி வரும்போது, அதிமுகவின் முழுக் கட்டுப்பாடும் எடப்பாடி பழனிசாமியின் கரங்களுக்குச் சென்றிருந்தது..
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, கடந்த சில ஆண்டுகளாக அதிமுகவை ஒன்றிணைக்கப் போவதாகக் கூறி வந்தாலும், கட்சித் தலைமை அவருக்குச் சாதகமான எந்த ஒரு வாசலையும் திறக்கவில்லை.. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி அவரை மீண்டும் சேர்ப்பதில் காட்டிய கடும் உறுதி, சசிகலாவை ஒரு முட்டுச் சந்தில் நிறுத்தியது..
இந்த நிலையில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தனது அடுத்தகட்ட நகர்வை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் சசிகலா இருக்கிறார்.. கடந்த சில மாதங்களாக தனது ஆதரவாளர்களையும், அதிமுகவிலிருந்து அதிருப்தியில் வெளியேறியவர்களையும் தொடர்ந்து சந்தித்து வந்த சசிகலா, தற்போது ஒரு முக்கிய முடிவை எடுக்கத் தயாராகிவிட்டார்..
பசும்பொன் - முக்கிய அறிவிப்பு
ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று பசும்பொன்னில் அவர் நிகழ்த்த உள்ள உரையில், புதிய அரசியல் இயக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் நேற்று முதலே தெரிவிக்க துவங்கிவிட்டன.. டிடிவி தினகரன் ஏற்கனவே ஒரு கட்சியை நடத்தி வரும் நிலையில், சசிகலா தனியாக ஒரு அமைப்பை தொடங்குவது என்பது தென் மாவட்ட அரசியலில் கண்டிப்பாக பெரும் அதிர்வுகளையே ஏற்படுத்தும்..
தென் மண்டலத்தை பொறுத்தவரை முக்குலத்தோர் சமூகத்தின் வாக்குகள் அதிமுகவின் மிகப்பெரிய பலமாக இருந்து வந்தன.. ஆனால், தற்போது அந்த வாக்குகள் பலமுனைகளாகப் பிளவுபட்டுள்ளன..
தென்மண்டலம் வாக்குகள்
ஒருபுறம் ஓ.பன்னீர்செல்வம் தனது பலத்தைக் காட்ட முயல்கிறார், மறுபுறம் டிடிவி தினகரன் பாஜக கூட்டணியில் இணைந்து செயல்படுகிறார்.. இப்போது சசிகலாவும் தனிப்பாதையில் பயணிக்கத் தொடங்கினால், அதிமுகவின் பாரம்பரிய ஆதரவு தளம் சிதறுவதை யாராலும் தவிர்க்க முடியாது..
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கு இது மிகப்பெரிய தலைவலியாகவே அமையும்.. சசிகலா சுமார் 30 தொகுதிகளில் தனது பலத்தை நிரூபிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுவது, அதிமுகவின் வெற்றி வாய்ப்புகளை நேரடியாக பாதிக்கும் காரணியாகவும் பார்க்கப்படுகிறது..
சசிகலாவின் இந்த அறிவிப்பு வெறும் தேர்தலுக்கானது மட்டுமல்ல, அதிமுகவில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்ட எஞ்சியிருக்கும் கடைசி ஆயுதமாகவும் கருதப்படுகிறது..
சசிகலா குட் நியூஸ்?
பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்திருப்பது சசிகலாவிற்கு ஒருவித வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.. ஏனெனில், தன்னை மீறி தனது தம்பி மகன் எடுத்த இந்த முடிவு, அவரது அரசியல் முக்கியத்துவத்தை குறைப்பதாக அவர் கருதுகிறார்.. இதன் காரணமாகவே, யாரிடமும் தஞ்சம் அடையாமல் தனது தனித்துவத்தை நிரூபிக்க சசிகலா முற்படுவதாக தெரிகிறது..
வரும் தேர்தலானது திமுக, அதிமுக, தவெக எனப் பல முனைப் போட்டிகளாக மாறிக் கொண்டிருக்கும் வேளையில், சசிகலாவின் வருகை ஒரு புதிய பரிமாணத்தை ஓரளவு தரக்கூடும்.. அதனால்தான், இன்று அவர் வெளியிடப்போகும் அந்த குட்நியூஸ்? என்ன என்பதை அறிந்து கொள்வதில் தென்மாவட்டங்கள் பெருத்த ஆர்வத்தில் காத்துள்ளன... பொறுத்திருந்து பார்ப்போம்...!!












Click it and Unblock the Notifications