தீபாவளி வாழ்த்துச் செய்தியில் அதிமுக ஆட்டம் காணும் அளவுக்கு ஆட்டம்பாம் வைத்த சசிகலா
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் என்ற பெயரில் சசிகலா தீபாவளி வாழ்த்து அனுப்பியுள்ளது அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து சசிகலா விடுதலையாகி வந்த சிறிது நாட்களில் அரசியலிலிருந்து விலகியிருப்பதாக அறிவித்தார். அவர் அதிமுகவை கைப்பற்றும் நடவடிக்கைகளை எடுத்தால் தமிழக சட்டசபை தேர்தலின் போது தேவையில்லாத பிரச்சினைகள் வரும் என அதிமுக நிர்வாகிகள் எதிர்பார்த்திருந்த வேளையில் அவரது அறிவிப்பை அதிமுக மூத்த நிர்வாகிகள் வரவேற்றனர்.
சசிகலாவும் தன்னால் அதிமுகவுக்கு பாதகமான தேர்தல் முடிவுகள் வரக் கூடாது என்பதால் அத்தகைய முடிவை எடுத்ததாகவும் விளக்கியிருந்தார். இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் அதிமுக ஆட்சியை தக்க வைத்து கொள்ளவில்லை.

அதிமுக
இதையடுத்து சசிகலா அதிமுகவின் சில நிர்வாகிகள், அமமுக நிர்வாகிகளுடன் தொலைபேசியில் பேசி வந்த ஆடியோ ரிலீஸானது. அதில் பேசியவர்கள் அதிமுகவுக்கு தலைமையேற்க வருமாறு சசிகலாவை அழைத்தார்கள். இதையடுத்து சசிகலாவும் அதற்கான முயற்சிகளில் இறங்கிவிட்டதாகவே தெரிகிறது. இதற்கு முத்தாய்ப்பாக அதிமுக கொடி கட்டிய காரில் அவைத் தலைவராக இருந்த மதுசூதனனின் இறப்புக்கு சென்றிருந்தார்.

முன்னாள் முதல்வர்
அது போல் அதிமுக கொடி கட்டிய காரில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸின் மனைவி விஜயலட்சுமியின் இறப்புக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மனைவிக்கு அஞ்சலி செலுத்த வந்த சசிகலாவை பார்த்ததும் துக்கம் தாளாமல் ஓபிஎஸ் கண்ணீர்விட்டார். உடனே தாயுள்ளத்துடன் அவரது கைகளை பிடித்துக் கொண்டும் தோள்களை தட்டி கொடுத்தும் சசிகலா ஆறுதல் கூறினார்.

அதிமுக பொன் விழா
இதையடுத்து அதிமுகவின் பொன் விழா ஆண்டையொட்டி ஜெயலலிதா சமாதி, எம்ஜிஆர் நினைவில்லம், எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டம் ஆகியவற்றுக்கு அவர் சென்றார். அப்போது அதிமுக கொடி கட்டிய காரிலேயே வலம் வந்தார். இதை அதிமுக நிர்வாகிகள் பலர் எதிர்த்தனர். இந்த நிலையில் தேவர் ஜெயந்திக்கு பாதுகாப்பு கோரிய கடிதத்தில் கூட அதிமுக பொதுச் செயலாளர் என்றே கூறியிருந்தார் சசிகலா.

ஓபிஎஸ்ஸிடம் கேட்ட தலைமை கழகம்
இந்த நிலையில் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பீர்களா என மதுரையில் ஓபிஎஸ்ஸிடம் கேட்டதற்கு தலைமைக் கழக நிர்வாகிகள் முடிவெடுப்பர் என கூறிவிட்டார். இது சசிகலாவுக்கு ஒரு பிடிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 10 க்கும் மேற்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்க போவதாகவும் ஒரு உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி வருகிறது.

வாழ்த்துச் செய்தி
இந்த நிலையில் தீபாவளிக்கு வழக்கமாக தலைவர்கள் வாழ்த்து செய்தி அனுப்புவர். அது போல் சசிகலாவும் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் கொண்ட லெட்டர் பேடில் விகே சசிகலா பொதுச் செயலாளர், அஇஅதிமுக என்று குறிப்பிட்டுள்ளார். அது போல் வாழ்த்துச் செய்தி முடியும் போதும் கழக பொதுச் செயலாளர் அஇஅதிமுக என்ற இடத்தில்தான் அவர் கையெழுத்திட்டுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் பதவி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் நீக்கப்பட்ட போதிலும் அவர் அத்தகைய பதவியை பயன்படுத்தியுள்ளார். மேலும் அதிமுகவில் பொதுச் செயலாளர் என்ற பதவி மிகவும் அதிகாரமிக்க பதவி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications