சவுக்கு சங்கரின் தாயார் காலமானார்.. மகன் புழல் சிறையில் இருக்கும்போது பிரிந்த உயிர்
சென்னை: பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் நீதிமன்ற நிபந்தனைகளை பின்பற்றாததால் கைதுசெய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் அவரது தாய் கமலா இன்று மதியம் காலமானார்.

யூடியூப் பிரபலமும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்களை தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார்.
மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வந்தார். சென்னை, திருச்சி, கோவை, தேனி உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் சவுக்கு சங்கர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது சவுக்கு சங்கர் புழல் சிறையில் உள்ளார்.
நிபந்தனையை மீறிய சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர் மீது ஆதம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை போலீசார் 2 மோசடி வழக்குகளை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பதிவு செய்தனர். இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. அவரது உடல்நலனை கரத்தில் கொண்டு மார்ச் 25 வரை அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் நிபந்தனை ஜாமீன் முடிந்தும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் அவரை தீவிரமாக போலீசார் தேடிவந்தனர்.
ஆந்திராவில் கைது - குண்டர் சட்டம்
இந்நிலையில் தான் கடந்த 8 ம் தேதி சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். ஆந்திராவில் தனியார் விடுதியில் அவர் பதுங்கியிருந்தபோது அவரை சென்னை போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு சென்னை கொண்டு வந்து புழல் சிறையில் அடைத்தனர். நேற்று முன்தினம் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இது சவுக்கு சங்கருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
காலமான தாய் கமலா
இதற்கிடையே தான் சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னையில் வசித்து வந்தார். மீண்டும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதால் அவர் மனவருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே தான் இன்று மதியம் கமலா காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக அவரது உயிர் பிரிந்துள்ளது. மகன் சவுக்கு சங்கர் புழல் சிறையில் இருக்கும் நிலையில் அவரை பார்க்க முடியாமல் கமலா காலமாகி உள்ளார்.
சவுக்கு சங்கருக்கு பலமாக இருந்த தாய்
சவுக்கு சங்கர் பல்வேறு வழக்குகளில் சிக்கிய போதும் கூட அவரை மீட்க பல்வேறு சட்ட போராட்டங்களை கமலா மேற்கொண்டார். குறிப்பாக அவரை போலீசார் கைது செய்த போது ஆட்கொணர்வு மனு, முன்பு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டபோது அதில் இருந்து விடுவிக்க நீதிமன்றத்தை நாடியது என்று தொடர்ந்து மகன் சவுக்கு சங்கருக்காக, தாய் கமலா சட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தார்.
இறுதி சடங்கில் சவுக்கு சங்கர்?
பொதுவாக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஒருவரின் தாய் அல்லது தந்தை காலமானால் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக ஜாமீன் வழங்கப்படும். சிறை தண்டனையில் இருந்தால் பரோல் வழங்கப்படும். ஆனால் தற்போது சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதனால் அவர் தனது தாயாரின் இறுதி சடங்கில் பங்கேற்பாரா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை போலீசாரின் அனுமதியுடன் அவர் இறுதி சடங்கில் பங்கேற்று செல்லலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications