செங்கல்பட்டு அருகே அதிர்ச்சி! பள்ளியை விட்டு வெளியே வந்த சிறுவன், சிறுமி கடத்தல்.. போலீசார் விசாரணை
சென்னை: செங்கல்பட்டு அருகே ஓமலூரில் பள்ளி வளாகத்தில் நின்று கொண்டிருந்த மாணவி மற்றும் மாணவரை உறவினர்கள் என சொல்லி ஆண் மற்று பெண் இருவர் காரில் கடத்தி சென்றுள்ளனர். இது தொடர்பாக செங்கல்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டு மாவட்டம் ஒழலூர் பகுதியை சேர்ந்தவர் வேலன் (வயது 31). ஆட்டோ டிரைவர். வேலனுக்கு திருமணமாகி ஆர்த்தி (30) என்ற மனைவியும், ரக்சிதா (11) என்ற மகளும், நித்தின் (7) என்கிற மகனும் உள்ளனர். ஆர்த்தி செங்கல்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். இதையடுத்து வேலனின் அரவணைப்பில் தான் குழந்தைகள் இருவரும் இருந்தனர். ரக்சிதாவும், நித்தினும் ஒழலூர் பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் படித்து வந்தனர். வழக்கம் போல் இன்றும் அவர்கள் காலையில் பள்ளிக்கு சென்றனர்.
மதிய உணவு இடைவேளையின் போது, காரில் வந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என 2 பேர் பள்ளியின் தலைமை ஆசிரியர் எழிலரசியை சந்தித்தனர். அப்போது அவர் தான் வேலனின் தங்கை என்றும், நீண்ட நாட்களுக்கு பிறகு ஊருக்கு வந்துள்ளதால் குழந்தைகளை பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரக்சிதா, நித்தினை பார்ப்பதற்கு அனுமதி அளித்துள்ளார்.
அப்போது அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த அவர்கள் திடீரென வேலனின் குழந்தைகளான ரக்சிதா, நித்தின் ஆகிய இருவர் காரில் கடத்தி சென்றனர். இதனையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் வேலன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் போலீசுக்கும் தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் பள்ளிக்கு வந்த போலீசார் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவ மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது பள்ளிக்கு வந்த வேலனின் உறவினர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, வேலனின் மனைவி ஆர்த்தி தனது குழந்தைகளை அழைத்துச் சென்றாரா? அல்லது வேறு யாராவது கடத்திச் சென்றார்களா என தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குடும்ப பிரச்சனை அல்லது பணத்தகராறு காரணமாக யாராவது அழைத்துச் சென்றிருக்கலாம் என முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த வகையான விஷயங்கள் எதுவும் இல்லை என போலீசார் தெரிவித்து உள்ளனர். குழந்தைகளை கடத்திச் சென்றது யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். உறவினர்கள் என சொல்லி பள்ளியில் இருந்து குழந்தைகளை இருவர் காரில் கடத்தி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications