ஆசிரியர்கள் பதவி உயர்வு.. தமிழக அரசு எடுத்த முடிவு.. பள்ளி கல்வித்துறையில் இருந்து பறந்த உத்தரவு
சென்னை: ஒழுங்கு நடவடிக்கையில் சிக்கிய ஆசிரியர்களை தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு பரிந்துரைக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ள பள்ளிக்கல்வித்துறை, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு, தகுதி வாய்ந்த முதுகலை ஆசிரியர்கள் பட்டியல் தயாரிப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. பதவி உயர்வுக்கு தகுதியுடைய ஆசிரியர்களின் விவரங்களை எப்படி அனுப்ப வேண்டும் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் தொடக்கக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 31,336 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 25.50 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். 1.07 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். மாநில முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இடைநிலை பள்ளி ஆசிரியர்கள் நேரடியாக தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறுகிறார்கள்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, கலந்தாய்வு இரண்டு ஆண்டுகளாக நீதிமன்ற வழக்கு காரணமாக நடைபெறவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால், அரசு தொடக்கப்பள்ளிகளில் 2,200 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்து வந்தன.
இதுதவிர, ஆயிரக்கணக்கான ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கடந்த ஆண்டு நிலவரப்படி 3,058 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தது. இந்த பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப கல்வித் துறை திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறுகையில், "அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் செல்ல விரும்பும் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கருத்துருக்களை மட்டும் முதன்மைக்கல்வி அலுவலரின் பரிந்துரையுடன் அனுப்ப வேண்டும். அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களில் மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வில் செல்ல விருப்பம் உடையவர்கள் சார்பான கருத்துகளை, பள்ளிக்கல்வி இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்பட வேண்டியதில்லை.
தமிழ்நாடு குடிமைப்பணி விதிகளில் 17 (பி) விதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர்களை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கு பரிந்துரைக்க கூடாது. 17 (பி) கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தண்டனை பெற்று தண்டனை காலம் முடிவடையாத முதுகலை ஆசிரியர்களை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கு பரிந்துரைக்கக்கூடாது.
தண்டனை பெற்ற ஆசிரியர்களை பரிந்துரைக்கும் முதன்மைக்கல்வி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியுடைய ஆசிரியர்களின் விவரங்களை, கவனத்துடன் செயல்பட்டு ஆய்வு செய்து அனுப்ப முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications