வீடு தேடி வரும் பள்ளி... வீதி வகுப்பறை - அசத்தும் தமிழக பள்ளிக்கல்வித்துறை
தொடக்கக் கல்வி மாணவர்களின் கற்றல் இடைவெளியைப் போக்கும் வகையில் வீடு தேடி பள்ளிகள் என்ற புதிய திட்டத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்த உள்ளது. கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு அக்டோப
சென்னை: வீடு தேடி பள்ளிகள் என்ற புதிய திட்டத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்த உள்ளது. வீதி வகுப்பறை என்ற பெயரில் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் திட்டத்தை செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கைஎடுத்து வருகிறது.
கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிலையங்கள் ஓராண்டுக்கும் மேலாக திறக்கப்படாமல் இருந்தது. தற்போது தொற்று குறையத் தொடங்கியதையடுத்து கல்வி நிலையங்கள் படிப்படியாக செயல்பட தொடங்கியுள்ளன.
கடந்த 1ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

இதனிடையே கற்றல் இடைவெளியைப் போக்க எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணாக்கர்களுக்கு, பாடம் ஆசிரியர்கள்வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் வகையில் இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த திட்டத்தை முதற்கட்டமாக சென்னையில் அமல்படுத்த திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி, ஒவ்வொரு ஆசிரியரும், தங்களது பள்ளியில் படிக்கும் மாணாக்கர்களின் பகுதிக்கு சென்று, அங்குள்ள மாணாக்கர்களை ஒருங்கிணைத்து, தினசரி 2 மணி நேரம் பாடங்கள் நடத்தவும், கற்றல் குறைபாட்டை போக்க பல்வேறு செயல்முறை நிகழ்ச்சிகள் நடத்தவும் அறிவுறுத்தப்பட உள்ளனர்.
ஆசிரியர்கள் பணி செய்வதை தொடக்கக் கல்வி அலுவலர்கள் கண்காணிப்பார்கள் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.அத்துடன், வீதி வகுப்பறை என்ற பெயரில் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் திட்டத்தை செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. பள்ளிக்கல்வித்துறையின் இந்த புதிய அறிவிப்பு பெற்றோர்கள் மற்றும் கல்வியளார்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

முதலாண்டு கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள்
கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு முதல் பயிலும் மாணவர்களுக்கு முதுகலை பயிலும் அனைத்து மாணவர்களுக்கு செப்டம்பர் ஒன்றாம் தேதி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 4ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை முடிவடைந்து உள்ளது. உரிய வழி காட்டு நெறிமுறைகளுடன் அக்.,4 ம் தேதி முதல் நேரிடையாக வகுப்புகளை துவங்க வேண்டும். மாணவர்கள் தடுப்பசி செலுத்தி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட தகுதியுள்ள மாணவர்கள் அனைத்து மாணாக்கர்களும் தடுப்பூசி செலுத்துக்கொள்ள அறிவுறுத்துமாறும் கல்லூரி வளாகங்களில் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியை தவறாது பின்பற்ற வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கல்லூரி முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications