செப்டம்பர் 1 முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா?.. அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
சென்னை: செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகளை திறக்கலாம் என சுகாதாரத் துறை தமிழக முதல்வரிடம் தெரிவித்ததன் அடிப்படையில் பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித் துறை தயாராக இருப்பதாக அந்த துறையின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
Recommended Video
ஆகஸ்ட் 13 ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த முறை இ பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் இடம்பெறக் கூடிய முக்கிய அம்சங்கள் குறித்து எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் 27ஆம் தேதி பள்ளிக் கல்வித் துறை மானிய கோரிக்கை நடைபெறவுள்ளது. அதுகுறித்த ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.

நீட் தேர்வுக்கு விண்ணப்பம்
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அரசு மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. மாணவர்களிடம் விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம். விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.

2 லட்சம் மாணவர்கள்
இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் இருந்து 2 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர். அந்த மாணவர்கள் இடை நிற்காமல் அரசு பள்ளிகளில் தொடர்ந்து கல்வி பயில சிறப்பு கவனம் செலுத்தப்படும். பெரும்பாலான ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

செப்டம்பர் 1 ஆம் தேதி
பள்ளிகள் திறக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில் செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகளை திறக்கலாம் என சுகாதாரத் துறை தமிழக முதல்வரிடம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித் துறை தயாராக இருக்கிறது என்றார்.

செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு?
தமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கடந்த வாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பின் போது முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். கொரோனாவின் 3ஆவது அலையின் தொடக்க காலத்தில் இருக்கிறோம். இன்னும் 100 முதல் 120 நாட்கள் வரை நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 3ஆவது அலையானது குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என உறுதிப்படுத்தப்படாத யூகத்தின் அடிப்படையில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்படுவது ஏன் என்பது பெற்றோரின் கேள்வியாக உள்ளது.

குழந்தைகளுக்கான தடுப்பூசி
குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் வந்துவிட்டாலும் இன்னும் ஒரு மாதம் கூட முழுசாக இல்லாத நிலையில் எப்படி அனைத்து குழந்தைகளுக்கும் போட முடியும் என்ற கேள்வியும் எழுகிறது. பெரியவர்களுக்கே 100 சதவீதம் போடப்படாத நிலையில் குழந்தைகளுக்கு எப்படி 100 சதவீதம் தடுப்பூசி போட முடியும் என்றும் பெற்றோர்கள் கேட்கிறார்கள். ஒரு வேளை இதுகுறித்து பெற்றோரிடம் கருத்து கேட்பு நடத்தப்படுமா என தெரியவில்லை.

12 ஆம் வகுப்பு மாணவர்கள்
இது போல் கடந்த இரண்டாவது அலைக்கு முன்னர் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறந்து தமிழகத்தில் பெரும்பாலான மாணவர்களும் ஆசிரியர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது நினைவுக்கூரத்தக்கது. என்னத்தான் ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக சொல்லப்பட்டதாலும் மாணவர்கள் யாரும் தடுப்பூசி போடவில்லை. மாணவர்களின் வீட்டில் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டனரா என்பது கேள்வியாக உள்ளது. எனவே பள்ளிகள் திறப்பு குறித்து அரசு அவசரம் காட்டாமல் இருக்க வேண்டும் என்பதே பெரும்பாலான பெற்றோர்களின் கருத்தாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications