துணை முதல்வரை வீட்டில் தேடுவதுதான் சனாதனம்! விஜய்க்காக காத்திருக்கவில்லை: சீமான் சீற்றம்
சென்னை: திமுக ஒரே குடும்பத்திற்கு உள்ளாகவே துணை முதல்வரை தேடுவதுதான் மிகப்பெரிய சனாதனம் எனவும் விஜய் பெரியாருக்கு மாலை போட்டது சரியா என்பது பற்றியும் சீமான் கடுமையாகக் கருத்துகளை முன்வைத்துள்ளார்.
பெரியார் ஈ.வெ.ராமசாமி சிலைக்கு விஜய் மாலை மரியாதை செய்தது இப்போது மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது. பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் எல். முருகன், தமிழிசை செளந்தரராஜன் ஆகிய இருவரும் விஜய் ஏன் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை என்று கேள்வி எழுப்பி இருக்கின்றனர். அதேபோல இயக்குநர் மோகன்ஜி, 'விஜய் தவறான பாதையில் செல்கிறார்' எனக் கூறியுள்ளார்.

ஆனால், திராவிட இயக்க ஆதரவாளர்கள் மற்றும் திமுக ஆதரவாளர்கள் விஜய் பெரியாருக்கு மாலை போட்டதை மிகப்பெரிய விசயமாகக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில்தான் பெரியாருக்கு விஜய் மாலை போட்டது குறித்துப் பல விசயங்களை முன்வைத்துள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். சில வாரங்கள் முன்பு விஜய்யுடன் கூட்டணி இல்லை. 90 தொகுதிகளுக்கு மேல் வேட்பாளர்களைத் தேர்வு செய்துவிட்டேன் என்று சொன்ன சீமான், இப்போது அப்படியே மாற்றிப் பேசி இருக்கிறார்.
விஜய் விவகாரம் குறித்து சீமான் பேசுகையில், “விஜய் தமிழ்த் தேசியத்தை நோக்கி வருவார் என்று யாரும் எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை.இந்த அரசியல் களத்திற்கு வருவேன் என்பதை நானே எதிர்பார்த்தது இல்லை. நான் இதற்கு முன்பாக எதிலிருந்தேன் என்றால், திராவிட அரசியல் பக்கம் இருந்தேன். என் குடும்பம் தேசிய அரசியலிலிருந்தது. என்னைக் கொண்டுவந்து இந்த அரசியல் களத்தில் நிறுத்தியது யார் என்பது உங்களுக்குத் தெரியும். வரலாறு எந்த ஒரு தலைவனின் வருகைக்காகவும் காத்திருப்பதில்லை. அது இருப்பதில் ஒருவனைத் தேர்வு செய்து, அவன் விரலைப் பிடித்துக் கொண்டுவிடும் என்கிறார்கள். இதுதான் உலகம் முழுக்க இருக்கின்ற நீதி. இவர் வருவார் என்று யாருமே காத்திருப்பது இல்லை.
விஜய் முன்வைக்கப் போகும் கொள்கை, கோட்பாடு எல்லாம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்துவிட்டு தான் பிறகு கருத்துச் சொல்ல வேண்டும். அவர் வருவதற்கு முன்பே எங்களை அவரைப் பற்றி கருத்துச் சொல்லச் சொல்வது சரியல்ல. அவர் படங்களில் அவர்தானே டப்பிங் பேசுகிறார். அப்படி அவர் அரசியலுக்கு வந்திருக்கிறார். அவர் கருத்து என்ன என்று பேசட்டும். அதற்கு முன்பே நாங்கள் கருத்துச் சொல்வது தேவையற்றது.
விஜய் அம்பேத்கருக்கு மாலையிட்டதை நாங்கள் வரவேற்கிறோம். பெரியாருக்கு மாலையிட்டிருக்கிறார். அதையும் வரவேற்கிறோம். அதைப்போலவே எங்கள் தாத்தா திருவிகவுக்கும் அவர் மாலையிட வேண்டும். தனித்தமிழ் கருத்தை முன்வைத்த மறைமலையடிகளுக்கும் விஜய் மாலை போடவேண்டும். இதைப்போன்று இரட்டைமலை சீனிவாசனையும் விஜய் போற்ற வேண்டும். முத்துராமலிங்க தேவருக்கு வர வேண்டும், இமானுவேல் சேகரனுக்கும் வரவேண்டும். இப்படி தொடர்ச்சியாக அவர் பல தலைவர்களுக்கும் இதே மரியாதையைச் செய்ய முன்வரவேண்டும்.
நாம் தமிழர் கட்சி அம்பேத்கரை அறிவுலக ஆசானாக ஏற்கிறது. ஆனால், தலைவராக எங்கள் இரட்டைமலை சீனிவாசனையும், எம்.சி.ராஜாவையும்தான் ஏற்போம். இவர்கள்தான் எங்கள் ரத்த உறவுகள். ஆகவே விஜய் வருங்காலத்தில் பூலித்தேவன், அழகு முத்துக்கோன், தீரன் சின்னமலை எனத் தமிழ் அடையாளங்களாகக் கருதப்படும் தலைவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய முன்வர வேண்டும். தமிழர் அடையாளங்களை விஜய் வணங்க வேண்டும்.
நாங்கள் யாரையும் கூட்டணிக்கு அழைக்கவில்லை. எங்களுக்கு இலக்கு இருக்கிறது. இலட்சியம் இருக்கிறது. எங்கள் தலைவர் அதை வகுத்துக் கொடுத்திருக்கிறார். அதில் நாங்கள் பயணிப்போம். எனவே இந்திய, திராவிட கட்சிகளுடன் எங்களுக்குக் கூட்டணி இல்லை. அதைத் தவிர்த்து வருபவர்களைச் சேர்த்துக் கொள்வோம். விஜய் எங்கள் கொள்கையை ஏற்றுவந்தால் இணைந்து செயல்படுவோம். அப்படி இல்லை எனில் அவர் வேலையை அவர் பார்க்கவேண்டியதுதான். எங்கள் வேலையை நாங்கள் பார்ப்போம்.
அமெரிக்காவுக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்குள்ளவர்களைப் பார்த்து திராவிடர்கள் என்று சொல்லவில்லையே ஏன்? சாதி, மதங்களைக் கடந்து ஒன்றிணைக்கக்கூடிய வலிமை தமிழுக்குத் தான் உண்டு என்று ஏன் பேசினார்? 100 ஆண்டுகளைக் கடந்து திமுக இருக்கும் என்கிறார். அதுவரை தமிழ்நாடு இருக்குமா? அனைத்து வளங்களையும்தான் 75 ஆண்டுகளில் சுரண்டிவிட்டீர்களே? மதுக்கடைகளை ஒழிப்போம் என்கிறார்கள். பிறகு ஏன் மது ஆலைகளை நடத்துகிறார்கள்? மாநில சுயாட்சி என்கிறார்கள். சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வழியில்லை. கேட்டால், மத்திய அரசுதான் எடுக்க வேண்டும் என்கிறார் ஸ்டாலின். அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு கொடுத்தது யார்? மத்திய அரசா? திமுக அரசா? இஸ்லாமியர்களுக்கு 3.5% இடஒதுக்கீடு கொடுத்தது யார்? 10.5% இடஒதுக்கீடு வன்னியர்களுக்குக் கொடுத்தது யார்? இவற்றை எல்லாம் கொடுத்தது மாநில அரசுதானே? அதற்கு உரிமை இருந்ததா? இல்லையா?
இவற்றை எல்லாம் கொடுக்கின்ற உரிமையைப் பெற்றுள்ள மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்கும் உரிமையை மட்டும் பெறவில்லையா? நீங்கள் போடும் நாடகத்தை எல்லாம் எவ்வளவு காலத்திற்கு நம்பிக் கொண்டிருப்பது? ஒரே வசனம், ஒரே கதை. இதை எவ்வளவு காலத்திற்குச் சொல்வீர்கள்?
இதில் முப்பெரும் விழா கொண்டாட்டம் தேவையா? உங்களுக்கு ஒவ்வொரு நாளும் கொண்டாட்டம். நாட்டு மக்களுக்கு திண்டாட்டத்தை தவிர வேறு என்ன இருக்கிறது? கூட்டணிக்கட்சிகளின் ஓட்டுகளை எல்லாம் வாங்கிக் கொண்டு வெற்றி பெற்ற திமுக, தனித்து ஆட்சி அமைக்கும் என்று சொல்கிறது. ஒரு கட்சி ஆட்சிமுறைதான் தேவை என்கிறது. இதுதான் மிகப்பெரிய சனாதனம். எங்கள் வாக்குகளை வாங்கிக் கொண்டு ஆட்சியில் பங்கு தரமாட்டேன் என்பது சனாதனம் இல்லையா? வேண்டும் என்றால் தனித்து நில்லுங்கள் பார்ப்போம்.
இத்தனைக் கோடி மக்கள் உள்ள மாநிலத்தில் நாட்டை ஆள ஒரு துணை முதல்வர் கிடைக்கமாட்டாரா? உங்கள் குடும்பத்திலிருந்துதான் வரிசையாக வருவார்களா? சமூகநீதி, சனாதன ஒழிப்பு எல்லாம் பேசுகிறவர்கள் துணை முதல்வரை அவர்களின் வீட்டுக்குள்ளாகவே தேடுவார்களா? இதைக் கேட்கக் கூடாதா?” என்று ஆவேசமாக வெடித்துப் பேசி இருக்கின்றார்.
-
TVK Vijay in Trichy LIVE: மகளிருக்கு மாதம் ரூ.2,500.. சொன்ன மாதிரி கொடுப்போம்.. விஜய் பேச்சு -
“அந்த தகுதி மட்டும் போதுமா?.. ஸ்டாலினுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை?” விஜய் மீது சேரன் தாக்கு! -
பெரம்பூரில் மூடிக் கிடக்கும் விஜய் தேர்தல் அலுவலகம்.. இவ்வளவுதான் தவெக தேர்தல் ஏற்பாடு! -
Vijay Affidavit: குடும்பத்திற்கே கடன் கொடுத்த ஒருவரை பார்த்ததே இல்லை! விஜய் மீது முத்தரசன் தாக்கு! -
விஜய் வேட்பு மனு பெரம்பூரில் தள்ளுபடி செய்யப்படுமா? சட்ட ரீதியாக விஜய்க்கு உள்ள வாய்ப்பு என்ன? -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
கொங்கு மண்டல பிரச்சாரத்தின் போது செங்கோட்டையன் வீட்டில் தங்கும் விஜய்.. புலம்பும் ஆதவ் அர்ஜுனா! -
விஜய்க்கு பாதுகாப்பு கொடுங்க.. மத்திய அரசுக்கு பதில் மணிப்பூர் ஆளுநருக்கு கடிதம் எழுதிய தவெக! -
கேலிக்குள்ளான அமித்ஷாவுக்கு தவெக எழுதியதாக பரவும் கடிதம்.. ராஜ்மோகன் விளக்கம் -
விஜய்க்கு அதிகாலையே சிம்ம சொப்பனமாக வந்த ஸ்டாலின்.. திருச்சியில் 'டீ' பிரேக் பாலிடிக்ஸ்.. செம மூவ்! -
Election history: இந்திரா டூ மோடி.! ‘இரட்டைத் தொகுதிகள்’: யார்? எங்கே? நின்றார்கள்.. வென்றார்கள்? -
ஷாக்! விஜய் வேட்புமனுவிலேயே செய்த பெரிய பிழை! திருச்சி கிழக்கு, பெரம்பூரில் நிராகரிக்கப்பட வாய்ப்பு?












Click it and Unblock the Notifications