பாஜகவுக்கு ஒரு பிரச்சனை..எடப்பாடிக்கு ஏகப்பட்ட பிரச்சனை! சேட்டைய ஆரம்பித்த சீனியர்கள்! அதகள அதிமுக
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், தமிழ்நாட்டு அரசியல் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. குறிப்பாக அதிமுக- பாஜக கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு தொடர்பான சிக்கல்கள் தீவிரமடைந்து வருவதாக தகவல்கள் வெளியானதால், இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், தற்போதே அதிமுக சீனியர்கள் சிலர் சீட்டு தொடர்பாக பேசுவது எடப்பாடிக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக சொல்கின்றனர் அதிமுகவினர்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் இப்போதே கூட்டணி மற்றும் தொகுதி ஒதுக்கீடு பேசுவதை தொடங்கியுள்ளன. கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக தனித்தனியாகப் போட்டியிட்டது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
ஆனால் பின்னர் திடீரென மீண்டும் கூட்டணி அமைப்பதாக மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இணைந்து அறிவித்தது, பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. அதுவரை பாஜகவை கடுமையாக விமர்சித்த அதிமுக, கூட்டணி அறிவிப்புக்குப் பிறகு பாஜகவுடன் இணைந்து செயல்படத் தொடங்கியது.

அதிமுக பாஜக கூட்டணி
ஆனால் இந்த கூட்டணியில் இன்னும் ஒற்றுமை இல்லை என அதிமுக தொண்டர்கள் மற்றும் சில தலைவர்கள் நினைக்கிறார்கள். குறிப்பாக, அமித் ஷா தொடர்ந்து "தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரும்" என்று கூறியபோதும், எடப்பாடிதான் முதலமைச்சர் வேட்பாளர் என்று வெளிப்படையாக அறிவிக்காதது அதிமுக தரப்பில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில், கடந்த டிசம்பர் 10ஆம் தேதி நடந்த அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், 2026 தேர்தலில் அமைக்கப்படும் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை தாங்கும் என்று தெளிவாக கூறப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி
மேலும், தேசிய அளவில் NDA-க்கு தலைமை தாங்கும் பாஜக கூட தமிழ்நாட்டில் அதிமுக தலைமையை ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டது. திமுக ஆட்சியை அகற்றுவதே கூட்டணியின் முக்கிய நோக்கம் என்றும் வலியுறுத்தப்பட்டது. அதே தீர்மானத்தில், கூட்டணியில் சேரும் கட்சிகள் அனைத்தும் அதிமுக தலைமையை ஏற்க வேண்டும் என்றும், யாருக்கு எத்தனை தொகுதிகள் வழங்க வேண்டும் என்பதையும் எடப்பாடி பழனிசாமிதான் முடிவு செய்வார் என்றும் கூறப்பட்டது. இதன் மூலம் கூட்டணி தொடர்பான முழு அதிகாரமும் எடப்பாடிக்கு வழங்கப்பட்டது.
ஓபிஎஸ் மற்றும் டிடிவி
ஆனால் கூட்டம் முடிந்த பிறகும், நிலைமை எடப்பாடி நினைத்தபடி அமையவில்லை என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் கூட்டணியில் இணைக்கலாம் என்ற பேச்சு நிலவி வந்தாலும், அவர்கள் தமிழகம் வெற்றிக் கழகத்துடன் (தவெக) இணைய விரும்புகிறார்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில், பாஜக அதிக தொகுதிகள் கோருவது, மேலும் தேமுதிகக்கு ஆறு சீட்டுகள் வழங்கலாம் என்ற தகவல் வெளியானதால், அந்த கட்சியிலும் அதிருப்தி அதிகரித்துள்ளது. பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக, தங்களுக்கு மரியாதையான தொகுதி எண்ணிக்கை கிடைக்க வேண்டுமென எதிர்பார்க்கிறது.
தொகுதி பங்கீடு
ஆனால் இதுவரை அதிமுக மற்றும் பாஜக தரப்பில் தெளிவான உறுதி எதுவும் வழங்கப்படாததால், அவர்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு, கூட்டணியை வலுப்படுத்த எடப்பாடி எடுத்த முயற்சிகள் அனைத்தும் இன்னும் பலன் அளிக்காத நிலையில், அடுத்த கட்ட முடிவுகளை எடுக்க குழப்பத்தில் உள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.
அதிமுக நெருக்கடி
ஏற்கனவே ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கட்சியை விட்டு சென்று இருக்கும் நிலையில் மேலும் சில சீனியர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். மேலும் லோக்கல் பாலிடிக்ஸ் செய்வதற்காக தங்களுக்கு மட்டுமல்லாமல், தங்கள் ஆதரவாளர்களுக்கும் சீட்டு வேண்டும் என தலைமையை தற்போது தொடர்பு கொள்ள ஆரம்பித்து விட்டார்களாம். மேலும் சில தொகுதிகளை கூட்டணிக்கு தள்ளிவிட வேண்டும், குறிப்பிட்ட தொகுதிகளில் அதிமுக தான் நிற்க வேண்டும் என பேசுகிறார்களாம். இன்னும் கூட்டணியே இறுதி செய்யப்படாத நிலையில் அதுக்குள் அதற்குள் தொகுதி பங்கீடா? என நெருக்கடியில் இருக்கிறார் எடப்பாடி என்றும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications