வாரிசு யோகம் தரும் ரகசியம்! புதுமண தம்பதிகளுக்கு மாசி கருவாடு கொடுக்கப்படும் ரகசியம் என்ன தெரியுமா?
சென்னை: இயற்கை நமக்கு அளித்த கொடைகளில் கடல் உணவுகளுக்கு எப்போதும் தனி சிறப்பு இடம் உண்டு. அதிலும் குறிப்பாக, மருத்துவ குணங்கள் நிறைந்த மாசி கருவாடு என்பது வெறும் உணவு மட்டுமல்ல, அது ஒரு சிறந்த மருந்தாகவும் கருதப்படுகிறது. அந்தவகையில் மாசி கருவாடு மனித குலத்துக்கு தரும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி பார்ப்போம்.
பொதுவாகவே கருவாடு என்றாலே பலருக்கு அனீமியா எனப்படும் ரத்த சோகை வராமல் தடுக்கும் இரும்புச்சத்து நினைவுக்கு வரும். ஆனால், மாசி கருவாடு என்பது மற்ற கருவாடுகளை விட பல மடங்கு சத்துக்களையும், தனித்துவமான மருத்துவப் பண்புகளையும் கொண்டிருக்கிறது.

மாசி கருவாடு மகத்துவம்
கால்சியம் சத்து இதில் அபரிமிதமாக இருப்பதால், வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் எலும்புகள் மற்றும் பற்களின் உறுதிக்கு இது பெரும் பக்கபலமாக அமைகிறது.
இந்த மாசி கருவாடு தயாரிக்கப்படும் விதமே மிகவும் நுட்பமானது... சூரை மீன்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த வகை கருவாடு, உப்பு சேர்க்காமல் அவிக்கப்பட்ட பிறகு, நிழலிலேயே நீண்ட நாட்கள் காயவைக்கப்பட்டு கல் போன்ற உறுதித்தன்மையை அடைகிறது. இதில் முட்கள் இருக்காது என்பது கூடுதல் ஸ்பெஷலாகும்..
தாம்பத்தியம் சிறக்க
இரண்டு ஆண்டுகள் வரை கெடாமல் இருக்கும் இதன் வாசமும் குணமும் மாறாமல் அப்படியே இருக்கும். வாதம், பித்தம் போன்ற உடல் உபாதைகளைச் சமநிலைப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு. குறிப்பாக, மனித உடலின் மிக முக்கிய உள்ளுறுப்புகளான இதயம், நுரையீரல், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்றவற்றை வலுப்படுத்துவதில் மாசி கருவாடு இணையற்றது.
திருமணமான தம்பதிகளுக்கு மாசி கருவாடு உணவில் சேர்க்கப்படுவதன் பின்னணியில் ஆழமான அறிவியல் காரணங்கள் ஒளிந்துள்ளன. ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், விந்து திரவத்தைச் சீராக்கவும் இது உதவுகிறது.
புது மணத்தம்பதிகள்
அதேபோல் பெண்களுக்குக் கருப்பை சார்ந்த பிரச்சனைகளைத் தீர்ப்பதோடு, நீர்ப்பை மற்றும் சினைப்பையின் செயல்பாடுகளை ஆரோக்கியமாக வைக்கிறது. வாத மற்றும் ரத்த ஓட்டத்தைச் சீராக்குவதன் மூலம் தம்பதிகளின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது. கர்ப்பிணி பெண்களும் மருத்துவரின் முறையான ஆலோசனையின் பேரில் இதை உட்கொள்ளும்போது, கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சி சீராக இருப்பதோடு தாயின் உடல் வலிமையும் பாதுகாக்கப்படுகிறது.
இன்றைய நவீன காலத்தில் நாம் பல செயற்கை மருந்துகளைத் தேடி அலைகிறோம். ஆனால், நம் முன்னோர்கள் பயன்படுத்திய இந்த மாசி கருவாடு போன்ற பாரம்பரிய உணவுகள், பக்கவிளைவுகள் இல்லாத ஒரு சிறந்த நிவாரணியாகத் திகழ்கின்றன.
மாசி கருவாடு மருத்துவ குணம்
நீண்ட நாள் உடல் நலம் குன்றி பலவீனமாக இருப்பவர்கள் இழந்த சக்தியை மீண்டும் பெறுவதற்கு மாசி கருவாடு ஒரு வரப்பிரசாதமாகும். ஆனால் இதய நோயாளிகள், இரத்த அழுத்தம் பாதிப்பு, உடல் பருமன் உள்ளிட்ட பாதிப்பு உடையவர்கள் கருவாடு தவிர்ப்பது நன்மை தரும்.. அல்லது மருத்துவரின் ஆலோசனையின் பேரில் குறைந்த அளவு எடுத்துக் கொள்ளலாம்..
மொத்தத்தில், உடலின் தசை மண்டலத்தையும், நரம்பு மண்டலத்தையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும் இந்த மாசி கருவாட்டை, முறையான அளவில் உணவில் சேர்த்துக்கொள்வது நீண்ட கால ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் என்று அன்றே சொல்லி வைத்துள்ளனர் நம்முடைய முன்னோர்கள்...!!












Click it and Unblock the Notifications