ஆளுநர் ரவி சர்ச்சை.. கே.டி.ஷா சொன்ன மதச்சார்பின்மை ஏற்க மறுத்தாரா அம்பேத்கர் ? 1948ல் நடந்தது என்ன?
சென்னை: மதச்சார்பின்மை என்பது ஐரோப்பாவின் கருத்தாக்கம் என்று ஆளுநர் ரவி பேசிய கருத்திற்கு நாடு முழுவதும் இருந்து பலத்த கண்டனங்கள் எழுந்துவருகின்றன. எதிர்க்கட்சியினரைத்தாண்டி ஊடகவியலாளர்கள் கூட இவரது பேச்சைக் கண்டித்துள்ளனர்.
மதச்சார்பின்மை என்பது ஐரோப்பாவில் இருக்கும் சர்ச்சுக்கும் மன்னருக்கும் இடையே ஏற்பட்ட மோதலிலிருந்து உருவான ஒரு கருத்தாகும். இது 'பாதுகாப்பற்ற பிரதமரால்' இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது என்று ஆளுநர் ஆர்.என். ரவி கடந்த இரண்டு நாட்கள் முன்னதாக பேசிய கருத்து நாடு முழுதும் பெரிய அதிர்வலையைக் கிளப்பி வருகிறது. இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளது. ரவியைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரியில் நடைபெற்ற விழாவில் பேசிய ஆர் என் ரவி, "மதச்சார்பின்மை என்றால் என்ன? மதச்சார்பின்மை என்பது ஒரு ஐரோப்பியக் கருத்தாக்கம். அது இந்தியாவின் கருத்தல்ல. ஐரோப்பாவில், சர்ச்சுக்கும் மன்னருக்கும் இடையே உருவான சண்டையால் மதச்சார்பின்மை என்பது வந்தது. இந்தியா எப்படி 'தர்மத்திலிருந்து' விலகி இருக்க முடியும்? மதச்சார்பின்மை என்பது இந்திய அரசியலமைப்பின் ஒரு பகுதியாக இல்லை. இந்திரா காந்தியைப் பற்றி வெளிப்படையாகக் குறிப்பிடும் வகையில், 'சில பிரிவு மக்களைத் திருப்திப்படுத்துவதற்காக' 'ஒரு பாதுகாப்பற்ற பிரதமரால்' அவசரநிலை காலகட்டத்தின்போது இது சேர்க்கப்பட்டது" என்று பேசி இருந்தார்.
ஆளுநரின் இந்தப் பேச்சுக்கு ஜெய்ராம் ரமேஷ், "அரசியலமைப்புச் சட்டத்தின் மீது சத்திரியப்பிரமாணம் செய்து, பதவி ஏற்ற ஒருவர் எப்படி இதைப்போன்று பேச முடியும்? அரசியலமைப்புச் சட்டப் பொறுப்பாளராக இருக்கும் இவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். இவர் ஒரு அவமான சின்னம்" என்று எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர்,"ரவியின் வரிகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், காந்தி, அம்பேத்கர், நேரு, படேல் ஆகியோரின் கருத்துக்கு எதிராக உள்ளன" என்று காணொளிப் பதிவு மூலம் விளக்கம் அளித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ்கூட இதைக் கண்டித்துள்ளது.
இந்த மதச்சார்பின்மை என்ற சொல் இப்போது அல்ல இந்திய அரசியல் நிர்ணய சபை விவாதம் 1948 இல் தொடங்கிய போதே ஒரு பிரச்சினைக்குரிய விசயமாக இருந்துள்ளது. அதனையொட்டி அம்பேத்கர் 'மதச்சார்பின்மை' என்ற சொல்லை ஏற்க மறுத்தார் என்று ஒருவாதம் திட்டமிட்டு ஒருதரப்பினரால் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்த வார்த்தையைச் சேர்க்க அம்பேத்கர் எதிர்த்தார் எனச் சிலர் வாதிட்டு வருகின்றனர். இதற்கு துணையாக அரசியல் நிர்ணய சபை விவாதங்களின் உரையை மேற்கோள் காட்டுகின்றனர்.
உண்மைகள் என்ன? நவம்பர் 15, 1948 அன்று நடந்த அரசியல் நிர்ணய சபை விவாதங்களின் ஏழாம் தொகுதி மூலம் சில விளக்கங்கள் கிடைக்கின்றன. பேராசிரியர் கே.டி.ஷா, 'மதச்சார்பின்மை, கூட்டாட்சி, சோசலிஸ்ட்' எனச் சொற்களை உள்ளடக்கிய ஒரு திருத்தத்தைச் சட்டப்பிரிவு 1இல் கொண்டுவந்தார். அதற்கான முன்மொழிவில் அவர், எங்கள் நாடு ஒரு மதச்சார்பற்ற அரசு என்று ஒவ்வொரு கட்டத்திலும் நாஙள் மீண்டும் மீண்டும் கூறியுள்ளோம். அப்படி எனில் இந்த மதச்சார்பின்மை என்ற பதம் ஏன் சேர்க்க முடியாது என்பது எனக்கு விளங்கவில்லை. நமது அரசியலமைப்புச் சட்டங்களில் மதச்சார்பற்ற என்ற சொல் இல்லை என்பதை நான் ஏற்கிறேன். நாம் முந்தைய காலங்களில் கற்ற, அல்லது அனுபவித்த வகுப்புவாத, மதவாத பாடங்களிலிருந்து மதச்சார்பின்மை என்பது வலியுறுத்தப்பட வேண்டும்' என்று பேசி இருந்தார்.
இந்த விவாதத்திற்குப் பதிலளித்த அம்பேத்கர் மதச்சார்பின்மை என்ற சொல் குறித்தும் எதையும் பேசவில்லை என்றே சொல்லப்படுகிறது. அம்பேத்கர் 'சோசலிச குடியரசு' என்ற திருத்தத்தைத்தான் ஏற்க முடியாது என்று கூறினார். பேராசிரியர் கே.டி.ஷாவின் கருத்தைப் பற்றி தீர்மானிக்க வேண்டியவர்கள் எதிர்காலத்தில் மக்கள்தான் என்றும் அவர் சொன்னார். வரலாற்றுப் பக்கங்களைத் தேடுகையில் கிடைக்கும் ஆதாரம் இவைதான்.
அடுத்து இந்திய அரசியலமைப்பின் 42வது திருத்தத்தின்போது, அதாவது 1976 ஆம் ஆண்டில் 'மதச்சார்பின்மை' என்ற சொல் அறிமுகப்படுத்தப்பட்டது. மதச்சார்பின்மை என்பது மதத்திலிருந்து அரசாங்கத்தை தனியே பிரிப்பதாகும். அதாவது, இந்திய அரசாங்கம் எந்தவொரு குறிப்பிட்ட மதத்தையும் பின்பற்றவோ அல்லது ஆதரிக்கவோ கூடாது. மாறாக ஒவ்வொரு மதமும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று மாற்றம் கொண்டுவரப்பட்டது. இது இந்திராகாந்தியின் ஆட்சியில் நடந்தது. இவரைத்தான் ஆளுநர் ரவி 'பாதுகாப்பற்ற பிரதமர்' என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் மீதான விமர்சனத்தை மக்கள் வெளிப்படுத்தலாம். ஆட்சியின் ஒரு அங்கமாக உள்ள ஆளுநர் எப்படி வெளிப்படுத்த முடியும் என்பதுதான் இங்கே கேள்வி. அவர் இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்ட ஆளுநராக இருக்கிறார். பதவிப் பிரமாணத்தின்போதும் ரகசியக் காப்பு பிரமாணத்தின்போது வாக்குறுதி அளித்துப் பதவியேற்றுக் கொண்டுள்ளார். அவர் எப்படி சட்டத்தை விமர்சிக்க முடியும்? முன்னாள் பிரதமரை விமர்சிக்க முடியும்?

ரவியின் பேச்சு குறித்து ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், "இந்த நிலத்தின் அழகு மதச்சார்பின்மை மீதான பற்றில்தான் உள்ளது. யாரேனும் அதை வெளிநாட்டுக் கருத்தாக்கம் என்று சொன்னால் அந்த நபரின் நோக்கம் சந்தேகத்திற்குரியது" என்று கூறியிருக்கிறார். இவர் எந்தக் கட்சியும் சாராதவர். இவரைப் போலவே ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய், "ஆளுநர் ரவி மதச்சார்பின்மை இந்தியாவுக்குத் தேவையற்றது எனப் பேசியிருக்கிறார். அரசியல் சாசன பொறுப்பில் இருக்கும் ஒருவர் எப்படி அரசியல் சாசனத்தைக் குறித்து இதுபோல பொறுப்பற்று பேச முடியும்? இந்தியாவுக்கு ஆளுநர்கள் கூட தேவையற்ற பதவிதான்" என்று பேசி இருக்கிறார்.
காங். மூத்த தலைவர் ப.சிதம்பரம் பேசுகையில், "வழக்கம் போல ஆளுநர் உளறிக் கொண்டியிருக்கிறார். கூட்டாட்சி கூட ஐரோப்பியக் கருத்தாக்கம்தான். அதை மறுத்துவிட முடியுமா? வாக்குரிமைகூட ஐரோப்பாவின் இருந்து வந்ததுதான். ஜனநாயகம் கூட ஐரோப்பாவைச் சேர்ந்ததுதான். இங்கு ராஜாக்களும் மகாராஜாக்களும்தான் ஆண்டு கொண்டிருந்தனர். ஜனநாயகத்தையும் தூர எறிந்து விடலாமா? அலங்காரப் பதவியில் அமர்ந்துகொண்டு கண்டதைப் பேசக்கூடாது" என்று கூறியுள்ளார். எம்பி பிரியங்கா சதுர்வேதி, "பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து வந்ததுதான் ஆளுநர் பதவி. அதை முதலில் ஒழித்துவிடுவோமா?' என்று கேட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications