அரசை விமர்சிப்பது குற்றமா? அரசுப்பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி சஸ்பெண்ட்.. வலுக்கும் எதிர்ப்பு
சென்னை: அரசுக்கு எதிராக சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டதாக செங்கல்பட்டு மாவட்டம் நெல்லிக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அரசின் இந்த நடவடிக்கைக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், நெல்லிக்குப்பம் அரசுப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக உமா மகேஸ்வரி என்பவர் வேலை செய்து வருகிறார். இவர் தனது பேஸ்புக் பக்கத்தில், கல்வித்துறையில் நிகழும் குறைகளையும், மாணவர்களுக்கு தேவையான கல்வி முறை பற்றி தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார்.

குறிப்பாக கல்வி கொள்ளைகள் குறித்து புரிதலை ஏற்படுத்துவதற்காக அடிக்கடி கட்டுரைகளை எழுதி வருகிறார். மேலும் ஆசிரியர் சங்கங்கள் மூலம் அரசுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வந்தார. இந்நிலையில், பள்ளிக்கல்வி குறித்து பேஸ்புக் பக்கத்தில் சில கட்டுரைகளை எழுதி இருந்தார். இது அரசுக்கு எதிராக உள்ளதாக கூறி செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலரிடம் சிலர் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கற்பகம், நெல்லிக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை உமா மகேஸ்வரியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். முதன்மைக் கல்வி அலுவலர் கற்பகம் வெளியிட்ட அந்த உத்தரவில், "ஆசிரியை உமா மகேஸ்வரி வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அரசிற்கும், பள்ளிக்கல்வித்துறைக்கும் எதிராக கருத்துகளைப் பதிவு செய்து வந்திருக்கிறார்
மேலும், அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகளை மீறியும், பொது இடங்களிலும் அரசிற்கு எதிராகவும் கருத்துகளைத் தெரிவித்து வந்துள்ளார். இதனையடுத்து மார்ச் 6ஆம் தேதி முதல் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார் என்று கூறியிருந்தார்.
மேலும், அவர் முறையான அனுமதி பெறாமல் செங்கல்பட்டு மாவட்டத்தை விட்டு வெளியூர்களுக்குச் செல்லக் கூடாது என்றும் பணியிடை நீக்கம் காலத்தில் இருக்கும்போது அவருக்கு எந்தவிதமான பயணப்படியும் கொடுக்கக் கூடாது" என்றும் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே ஆசிரியை உமா மகேஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு, மக்கள் கல்வி கூட்டியக்கம், மக்கள் அதிகாரம் அமைப்பு , இடதுசாரி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கண்டித்துள்ளனர். இதேபோல் சமூக வலைதளங்களிலும் ஆசிரியை உமா மகேஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
ஆசிரியர் உமா மகேஸ்வரியை சஸ்பெண்ட் செய்ததற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்தார். நேற்று அவர் வெளியிட்ட பதிவில். ஆசிரியர் உமா மகேஸ்வரிமீது சட்டத்திற்கு புறம்பாக எடுத்துள்ள பணியிடை நீக்கத்தை ரத்த செய்ய வேண்டும். பள்ளிக்கல்வித்துறையில் செய்ய வேண்டிய மாறறறங்களை தெரிவித்ததற்காக உமா மகேஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். திமுக அரசை விமர்சிக்கக்கூடாதா? தவறான செயல்பாடுகளை எதிர்த்து யாரும் கேள்வி கேட்கக் கூடாதா? என்று சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட பதிவில், "தமிழக அரசின் கல்வித்துறையில் நிகழும் குறைகளையும் மாணவர்களுக்கு தேவையான கல்வி முறைகள் குறித்தும் தனது முகநூல் பக்கத்தில் எழுதி வரும் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் திரு. உமா மகேஸ்வரி அவர்களை அரசுக்கு எதிராக அவதூறு பதிவிட்டதாக கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சமவேலைக்கு சம ஊதியம் கோரி கடந்த பதினைந்து நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களை அழைத்துப் பேச முன்வராத திமுக அரசு, கல்வித்துறையில் நிகழும் குறைகளை சுட்டிக்காட்டிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்திருப்பது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானதாகும்.
எனவே, ஆசிரியர் திருமதி. உமா மகேஸ்வரி அவர்களின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து மீண்டும் பள்ளியில் பணியாற்ற அனுமதிப்பதோடு, மாணவர்களின் எதிர்காலத்திற்கு தொடக்கப் புள்ளியான ஆசிரியர்கள் சுட்டிக்காட்டும் குறைகளை நிவர்த்தி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications