சீமான் கேஸ்: விஜயலட்சுமி தற்கொலை மிரட்டல்- பதறிப் போன வீரலட்சுமி- பாதுகாப்பு கோரி போலீசில் மனு!
சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விவகாரத்தில் நடிகை விஜயலட்சுமி தற்கொலை செய்துகொள்ள நேரிடும் அல்லது சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவேன் என அறிவித்திருந்தார். இதனையடுத்து விஜயலட்சுமிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை போலீசில் மனு கொடுத்துள்ளார்.
சீமான் மீது திருமண மோசடி புகார் கொடுத்துள்ளார் நடிகை விஜயலட்சுமி. இந்த புகாரின் அடிப்படையில் முதலில் விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர். பின்னர் 7 முறை கருக்கலைப்பு செய்த புகாருக்காக விஜயலட்சுமி மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டார்.

இதனடிப்படையில் சீமானை போலீசார் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி அழைத்தனர். ஆனால் சீமான் போலீஸ் விசாரணைக்கு 2 முறையும் ஆஜராகவில்லை. சீமானின் வழக்கறிஞர்கள் மட்டுமே போலீசாரை சந்தித்தனர்.
இதனைத் தொடர்ந்து நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோ பதிவு ஒன்றில் தாம் தற்கொலை செய்து கொள்ள நேரிடும்; சொட்டு நீரும் அருந்தாமல் சாகும் வரை உணாவிரதம் இருப்பேன் என மிரட்டல் விடுத்திருந்தார். ஆனால் விஜயலட்சுமியின் இந்த புகார்களை நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் நிராகரித்தனர். மேலும் நடிகை விஜயலட்சுமி மீது பல புகார்களையும் நாம் தமிழர் தரப்பு முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் விஜயலட்சுமிக்கு ஆதரவாக இருக்கும் தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமி சென்னை போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில், விஜயலட்சுமி தற்கொலை செய்து கொள்வதாக கூறுகிறார். அவரைப் பாதுகாக்க வேண்டும். விஜயலட்சுமிக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றார்.
மேலும் செய்தியாளர்களிடம் பேசிய வீரலட்சுமி, விஜயலட்சுமிக்கு 7 முறை சாப்பாட்டில் கருக்கலைப்பு மாத்திரையை சீமான் கலந்து கொடுத்திருக்கிறார். இந்த வழக்கில் உதவி கமிஷனர் ஒருவர் தலையிட்டு வழக்கை திசை திருப்புகிறார். அவரது தலையீடு தவிர்க்கப்பட வேண்டும் எனவும் வீரலட்சுமி தெரிவித்தார்.
இதனிடையே நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியினரை கடுமையாக ஒருமையில் பேசி புதிய வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதில் தம் மீதான அவதூறுகளுக்கு தக்க பதிலடி கிடைக்கும் எனவும் விஜயலட்சுமி மிரட்டல் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications