தம்பி விஜய் என்னை மறந்திருக்கலாம்! அதுக்கும் இதுக்கும் முடிச்சு போட கூடாது! சீமான் சப்பைக்கட்டு
சென்னை: தவெக தலைவர் விஜய்யை நான் திட்டினேன் என யார் சொன்னது? விஜய் என்னை மறந்திருக்கலாம். அதனால் எனது பிறந்தநாளுக்கு அவர் வாழ்த்து கூறவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. அதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்திற்கு பிறகு சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "நான் விஜய்யை திட்டினேன் என யார் சொன்னது? ஒன்று திராவிடத்தில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழ் தேசியத்தில் இருக்க வேண்டும். இரண்டும் ஒன்று என நடுநிலை வகித்தால் என்ன அர்த்தம்? என்று கேள்வி கேட்டேன். இந்த முறை எனக்கு வாழ்த்து கூற அவர் மறந்திருக்கலாம்" என சீமான் தெரிவித்தார்.
டெல்லி கார் வெடிப்பு குறித்து கேட்டதற்கு, "பீகாரில் தேர்தல் நடந்ததால் டெல்லியில் கார் வெடிப்பு விபத்து ஏற்பட்டிருக்கலாம்" என்றார். பின்னர் அவர் பேசுகையில், "அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றும் மசோதாவை மறுபரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும்.
2008ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்ட இந்த சட்டம், பேராசிரியர்கள், மாணவர்கள் போராட்டத்தால் திரும்பப் பெறப்பட்டது. இந்த சட்ட முன்வடிவை மீண்டும் கொண்டு வருவது ஆட்சி அதிகாரத்தின் திமிர்" என சீமான் பேசினார்.
அது போல் முன்னர் சீமான் அளித்த பேட்டியில், "விஜய்யை நான் கேள்விதான் கேட்கிறேன். நான் எந்த தவறும் செய்யவில்லை. முதல் மாநாட்டில் விஜய் எங்களை பேசியதற்கு அடுத்த நாளே கேள்வி கேட்டேன். திமுகவை எதிர்த்தால் ஆர்எஸ்எஸ் கைக்கூலி, பாஜக பணம் கொடுத்துவிட்டதாக சொல்வார்கள்.
பாஜகவை எதிர்த்தால் நான் கிறிஸ்துவ கைக்கூலி என்பார்கள். அதை விட்டுவிட்டு திமுகவிடம் பணம் வாங்கிவிட்டார் என பேசக் கூடாது. நீங்கள் பாஜக மற்றும் திமுகவை எதிர்க்கிறீர்கள். அதனால் காங்கிரஸ் மற்றும் அதிமுகவிடம் பெட்டி வாங்கிவிட்டீர்களா?
தமிழ்நாடு தேர்வு ஆணையத்தில் நடைபெறும் குளறுபடிகளை படித்துப் பார்த்தால் உங்களுக்குத் தெரியவரும். அவ்வளவு சிக்கல் இருக்கிறது. குறைந்தது 75 லட்சம் பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். 55 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளார்கள். அதில் 29 லட்சம் பேர் பெண்கள், 284 மாற்று பாலினத்தவர்கள். 3937 வேலைகளுக்கு 15 லட்சத்திற்கு மேற்பட்டோர் தேர்வு எழுதுகிறார்கள்.
இந்த வேலையும் முறையாக தகுதி உள்ளவர்களுக்கு கிடைப்பதில்லை. திமுகவிற்கும் தவெகவிற்கும் எந்த அடிப்படையில் போட்டி என்பதை சொல்ல வேண்டும். 60 ஆண்டுகளாக கோட்பாடு கொண்ட ஒரு கட்சியை சினிமா கவர்ச்சி மூலம் தகர்க்க முடியாது. மற்றொரு வலுவான கொள்கை கோட்பாடு கொண்ட கட்சியால்தான் முடியும். அதற்கான மாற்றத்தை முன் வைத்து அரசியல் செய்கிறோம் என்றார்.











Click it and Unblock the Notifications