ஹய்யோ.. 'பரமாத்மா'வின் 10 ஆண்டு ஆட்சி எப்படி இருந்துருக்குன்னு பாருங்க..மோடி குறித்து சீமான்!
சென்னை: பிரதமர் மோடி ராமர், ராமர் என சொல்லிப் பார்த்தார் எடுபடவில்லை.. தற்போது நானே ராமர் என சொல்லிவிட்டார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக விமர்சித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசிய 'நானே பரமாத்மா' பேச்சுதான் இப்போது அதிகம் பேசுபொருளாகி இருக்கிறது. அதாவது தாம் உயிரியல் ரீதியாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை. நான் மனிதப் பிறவி அல்ல. என்னை பூமிக்கு அனுப்பியதே பரமாத்மாதான். ஏதோ ஒரு விஷயத்தை நடத்துவதற்காக என்னை கடவுள் பூமிக்கு அனுப்பினார். நான் பெற்றுள்ள ஆற்றல் சாதாரண மனிதர்கள் பெற்றிருப்பதைப் போல கிடையாது. கடவுள் ஒருவரால் மட்டுமே இந்த ஆற்றலைத் தர முடியும் என டிவி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

பிரதமர் மோடியின் இந்த பேச்சை அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றன. மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், மோடி கூறுகிறார்- தன்னை பரமாத்மா அனுப்பினார் என்று. அவருடைய ஜால்ராக்கள் சொல்கிறார்கள் - ஆஹா, வாவ், ஆஹா... எத்தனை அற்புதமான விஷயத்தைச் சொன்னீர்கள் என்று! கொரோனா பெருந்தோற்று காலத்தில் மருத்துவமனை வாசலில் மக்கள் உயிருக்காக போராடிய போது அனைவரையும் தட்டை அடிக்கவும், மொபைலில் டார்ச் அடிக்கச் சொன்னார். என விமர்சித்தார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சீமான் அளித்த பதில்: 10 வருஷம் எப்படிப்பட்டவரின் ஆட்சியின் கீழ் வாழ்ந்திருக்கிறோம் என பாருங்க.. இதை நினைத்து 'பெருமைப்படுங்க'... ராமர் ராமர்னு சொல்லிப் பார்த்தாரு எடுபடலை.. இப்ப நானே ராமர் என்கிறார். ராமருக்கு அவர் கோவில் கட்டவில்லை. அவர் ராமர் என்பதால் தனக்கு தானே வீடு கட்டிக் கொண்டார். அதாவது பரமாத்மா ஆட்சி எப்படி இருக்கிறது என பார்த்தீங்க இல்லையா? சொல்றாரு.. நானே பரமாத்மா என்கிறார் மோடி.. பரமாத்மா ஆட்சி 10 ஆண்டுகள் எப்படி இருந்துருக்குன்னு பாருங்க.. ஹய்யோ.. ஹய்யோ இப்படிப்பட்ட ஒரு பாவியை பரமாத்மா அனுப்பி வைத்திருக்கிறார் பாருங்க.. காலக் கொடுமைதான்.. இவ்வாறு சீமான் கூறினார்.












Click it and Unblock the Notifications