இந்தி தான் தெரியும்.. வடமாநில கேட்கீப்பரின் அலட்சியம்! அநியாயமாய் பறிபோன உயிர்கள்.. பறந்த கண்டனம்!
கடலூர்: கடலூரில் வடமாநிலத்தைச் சேர்ந்த தொடர்வண்டி காவலரண் ஊழியரின் அலட்சியத்தால் பள்ளி வாகனம் மீது திருச்செந்தூரிலிருந்து வந்து கொண்டிருந்த தொடர்வண்டி மோதிய விபத்தில் ஏதுமறியா மூன்று பள்ளிக் குழந்தைகள் பலியான பெருந்துயர நிகழ்வு அதிர்ச்சியும், மனவலியும் தருகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
கடலூர் தனியார் பள்ளி வேன் இன்று (ஜூலை 8) காலை 4 மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்றது. வேனை கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சங்கர் என்பவர் ஓட்டிச் சென்றார். காலை சுமார் 8 மணி அளவில் வேன் கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் ரயில்வே கேட்டை கடக்க முயன்றது.
அப்போது எதிரே வந்த விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் எதிர்பாராத விதமாக பள்ளி வேனில் மோதியது. ரயில் மோதிய

இந்த விபத்தில் தொண்டமாநத்தம் பகுதியைச் சேர்ந்த நிமலேஷ் , சின்ன காட்டுசாகையை சேர்ந்த சாருமதி ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த சின்னகாட்டுசாகையை சேர்ந்த செழியன் , தொண்டமாநத்தத்தை சேர்ந்த விஷ்வேஸ், வேன் ஓட்டுநர் சங்கர் ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால், படுகாயம் அடைந்த சின்னகாட்டுசாகையை சேர்ந்த செழியன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்துக்கு காரணம் ரயில்வே கேட்டில் பணியாற்றி வந்த உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கேட் கீப்பர் பங்கத் சர்மா என்றும் அவரது அலட்சியம் காரணமாகத்தான் விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், கடலூரில் வடமாநிலத்தைச் சேர்ந்த தொடர்வண்டி காவலரண் ஊழியரின் அலட்சியத்தால் விபத்து ஏற்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," வடமாநிலத்தைச் சேர்ந்த தொடர்வண்டி ஊழியரின் கவனக்குறைவு எத்தனை பேரிழப்பை ஏற்படுத்திவிட்டது என்பதை எண்ணும்போது நெஞ்சம் பதைபதைக்கிறது.
ஈடுசெய்யவே முடியாத பேரிழப்பை சந்தித்து பெருந்துயரக்கடலில் சிக்கித்தவிக்கும் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, பெருந்துயரை பகிர்ந்து கொள்கிறேன். படுகாயமடைந்தவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன். மொழி புரியாத வடமாநிலத்தவரை தமிழ்நாட்டில் காவலரண் ஊழியராக பணிபுரிய அனுமதித்ததன் விளைவே 3 குழந்தைகள் பலியாக முதன்மைக் காரணமாகும்.
தமிழர்களை இந்தி கற்கச்சொல்லி திணிப்பதில் காட்டும் அதிகாரத்தையும், ஆர்வத்தையும் தமிழ்நாட்டில் பணிபுரிய வரும் வடமாநிலத்தவருக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதில் ஏன் இந்திய ஒன்றிய அரசு காட்டுவதில்லை? தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ்நாட்டில் பணிவாய்ப்பு என்பது உரிமை பாதுகாப்பு முழக்கம் மட்டுமன்று; உயிர் பாதுகாப்பு முழக்கமுமாகும். அதனை கடைப்பிடிக்கத் தவறியதன் விளைவே தற்போது 3 குழந்தைகள் பலியான துயரம் நிகழ்ந்தேறியுள்ளது. இதற்கு முழுக்க முழுக்க ஒன்றிய அரசே பொறுப்பேற்க வேண்டும்.
இதுபோன்ற கொடுமைகள் இனி எங்கும் நிகழாதவாறு தடுக்க இனியேனும் அந்தந்த மாநிலங்களில் அம்மண்ணின் மக்களை மட்டுமே பணியமர்த்த ஒன்றிய அரசு உடனடியாக உத்தரவிட வேண்டுமென இந்திய ஒன்றிய அரசினை வலியுறுத்துகிறேன். உயிரிழந்த 3 குழந்தைகளுக்கும் என்னுடைய கண்ணீர் வணக்கத்தை செலுத்துகிறேன்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications