கட்சியே தொடங்காத ரஜினி திமுகவிற்கு மாற்றா நல்ல காமெடி... சீமான் கேலி!
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்க தகுதி இல்லாதவர் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மதஉணர்வு இல்லாதவர்களே மன்றத்தில் இருக்க வேண்டுமென்றால் ஆன்மிக அரசியல் என்பதும் மதஉணர்வு தான் அப்படியானால் ரஜினிக்கே கட்சித் தொடங்க தகுதி இல்லை என்று சீமான் விமர்சித்துள்ளார்.
மருதுபாண்டியர் நினைவுநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் மாமன்னர்கள் மருதுபாண்டியன் படத்திற்கு சீமான் மலர்தூவி மரியாதை செலுத்தினார் பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்: இலங்கையின் பிரதமராக ராஜபக்சே வந்தாலும் சிறிசேனா பிரதமராக வந்தாலும் ரணில் அதிபராக ஆனால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை. உயிரிழந்த தமிழர்கள் யாரும் இவர்கள் பதவிக்கு வருவதால் திரும்பி வரப்போவதில்லை. இது ஒரு வகை விளையாட்டு, வல்லாதிக்க நாடுகளின் நில ஆக்கிரமிப்பு விளையாட்டு.
சீனா அங்கு ஆக்கிரமிப்பு செய்து அதிகாரத்தை கைப்பற்றப் பார்க்கிறது. இந்தியா சிறிசேனாவையும், ரணிலையும் அழைத்து தன்னுடைய அரசியல் ஆதிக்கத்தை அங்கே காட்டப்பார்க்கிறது. அதன் ஒரு அம்சமாகவே ராஜகப்சே பிரதமராகி இருக்கிறார், இதனால் எங்களுக்கு ஒரு பயனும் இல்லை. நில உரிமை, நிதி, நிர்வாகம் செய்ய முடியாதவர்களாகவே இலங்கைத் தமிழர்கள் இருக்கின்றனர். இந்தியாவின் தலையீடு இல்லாமல் இலங்கையில் எதுவும் நடக்காது.

வந்த உடனே ஆட்சியை பிடித்துவிடுவாரா
ரஜினி அரசியலுக்கு வந்தால் ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது என்று ஏ.சி.சண்முகம் கூறுவதைப் பற்றி கேட்கிறீர்கள். அப்பப்ப சில நகைச்சுவையான செய்தி வரும் போது நாம் கேட்டுக் கொள்ள வேண்டும். ரஜினி கட்சி அறிவிக்கவில்லை, கொடி அறிவிக்கவில்லை, கொள்கையை அறிவிக்கவில்லை. ஆனால் வந்தஉடனே இவர்கள் ஆட்சியை பிடித்துவிடுவார்களா?

அபிமானத்தால் சொல்கிறார்
இதெல்லாம் பைத்தியக்காரன் கனவிலும் கூட நடக்காது. ரஜினி மீதுள்ள அபிமானத்தால் ஏ.சி.சண்முகம் சொல்வதை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு சிரித்துவிட்டுச் சென்றுவிட வேண்டும்.

ரஜினி கட்சி தொடங்க தகுதியில்லாதவர்
ரஜினி முதலில் ஆன்மிக அரசியல் என்றார் பின்னர் சாதி, மத உணர்வு இருப்பவர்கள் மன்றத்தில் இருக்க வாய்ப்பு இல்லாதவர்கள் என்று சொல்கிறார். அப்படியானால் ரஜினியே கட்சி தொடங்க தகுதியற்றவர். ரஜினியே ஒவ்வொரு முறையும் இமயமலைக்கு ஓடிவிட்டு வருபவர் ஆன்மிக அரசியலே மத உணர்வு தான் அப்படியானால் ரஜினியும் கட்சி தொடங்க தகுதி இல்லாதவர். ரஜினியின் நிலைப்பாடு, கொள்கை முடிவுகள் எதுவுமே சரியாக இல்லை.

தனித்தே போட்டி
இடைத்தேர்தல், சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என எந்த தேர்தல் வந்தாலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும். ஊழல், வரமையை ஒழிக்கும் மாற்று அரசியல் கட்சி என்று சொல்லிவிட்டு எப்படி இந்த கொள்கைகளே இல்லாத கட்சியுடன் கூட்டணி அமைப்பது. எங்களை பார்த்து எத்தனை பேர் கேலி செய்தாலும், வளர்ச்சி பாதித்தாலும், வீழ்ச்சி கண்டாலும் நாங்கள் தனித்தே போட்டியிடுவோம் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications