இன்று கைதாகும் சீமான்? போலீசில் ஆஜராகும் முன் சென்னையில் வழக்கறிஞர்களுடன் திடீர் ஆலோசனை.. பரபரப்பு
சென்னை: நடிகை கூறும் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் இன்று போலீஸ் நிலையத்தில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார். இந்த வேளையில் அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால் தர்மபுரியில் இருந்து இன்று சென்னை திரும்பிய சீமான், தனியார் ஓட்டலில் வழக்கறிஞர்களுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் உள்ளார். இவர் மீது நடிகை ஒருவர் பாலியல் புகாரை கூறி வருகிறார். இந்நிலையில் தான் நடிகையின் பலாத்கார வழக்கை ரத்து செய்ய கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். அதனை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கை போலீசார் விசாரிக்க அதிகாரம் உண்டு. போலீசார் விசாரித்து 12 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீசார் பெங்களூர் சென்று சீமான் மீது குற்றச்சாட்டை முன்வைத்த நடிகையிடம் 3 மணிநேரம் விசாரணை நடத்தினர். நடிகை கூறிய தகவலை போலீசார் பதிவு செய்து கொண்டனர். இதையடுத்து சீமானை விசாரணைக்கு அழைத்து அவரது வீட்டில் வளசரவாக்கம் போலீசார் சம்மன் ஒட்டினர்.
இது கிழித்து எறியப்பட்டது. சீமான் வீட்டு காவலாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே போலீசார் வழங்கிய சம்மனை தொடர்ந்து இன்று இரவு 8 மணிக்கு சீமான், வளசரவாக்கம் போலீசில் ஆஜராக உள்ளார். இதற்காக தர்மபுரியில் இருந்து இன்று மாலை நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை திரும்பினார்.
இன்று ஆஜராகும் சீமானை விசாரணைக்கு பிறகு போலீசார் கைது செய்யலாம் என்று கூறப்படுகிறது. இதனால் சீமான் சென்னை வடபழனியில் உள்ள தனியார் ஓட்டலில் வழக்கறிஞர்களுடன் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில் நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள், மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
நடிகை தொடர்பான வழக்கில் இதற்கு முன்பு சீமான் போலீசில் ஆஜராகி பதிலளித்து இருக்கிறார். இதனால் இப்போது எந்த மாதிரியான கேள்விகள் கேட்கப்படும். எந்த மாதிரியாக பதிலளிக்க வேண்டும். கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதா? அப்படி நடந்தால் அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அவர் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும் சீமான் ஆஜராவதை தொடர்ந்து வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு கவச உடைகளுடன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளும் அங்கு குவிந்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications