சின்னம் தொடர்பாக செய்தியாளர்களை சந்திக்கும் சீமான்.. யார் யாரையெல்லாம் கிழித்து தொங்க விட போறாரோ!
சின்னம் பிரச்சனை தொடர்பாக நாளை பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் சீமான்
சென்னை: நாளைக்கு யார் யாரையெல்லாம் சீமான் கிழித்து தொங்க விட போகிறார் என்று தெரியவில்லை.. சின்னம் பிரச்சனை சம்பந்தமாக பத்திரிகையாளர்களை சந்திக்க போகிறாராம்!
சட்டமன்ற இடைத் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. போனமுறை போட்டியிட்ட அதே மெழுகுவர்த்தி சின்னத்தை இப்போது தருமாறு தேர்தல் ஆணையத்திடம் கேட்டது கட்சி!
ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த ஆணையம், கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியது! இருந்தாலும் மிக குறைந்த நாளில் அந்த சின்னத்தை சீமானும், அவர் கட்சி வேட்பாளர்களும் மக்களிடையே கொண்டு போய் சேர்த்து விட்டனர்!

சின்னம்
இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் ஆகியவை அச்சிடப்பட்ட பேப்பர்கள் ஒட்டுவது வழக்கம். அப்படி ஒட்டியதில் கரும்பு விவசாயி சின்னம் தெளிவாக இல்லை என்று கூறப்பட்டது.

துணிவு இல்லையா?
இதை பற்றி பேசிய சீமான், "என் சின்னம் தவிர மத்த எல்லாத்தையும் பளிச்சினு வெச்சிருக்கிறே. சுயேச்சை சின்னம்கூட பளிச்னு தெரியுது. நான் ஒரு சாதாரண பையன் என்னை பார்த்து நீ எவ்ளோ நடுங்குறே! நல்ல ஆத்தாளுக்கும், அப்பனுக்கும் பிறந்திருந்தா நின்னு விளையாட விடணும்டா. என்னை விளையாட விட்டுட்டு பாரு. அந்த துணிவு இல்லையா உனக்கு?" என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

சுப்ரீம் கோர்ட்
இதுமட்டுமில்லாமல், தங்களின் சின்னம் தெளிவாக இருக்குமாறு செய்ய தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் என்று ஹைகோர்ட்டிலும் மனு செய்தது. ஆனால் இந்த வழக்கையே கோர்ட் டிஸ்மிஸ் செய்துவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளனர். ஆனால் அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் கூறி விட்டது.

பத்திரிகையாளர்கள்
தங்கள் கோரிக்கையை தேர்தல் ஆணையமும் கண்டுகொள்ளாமல், ஹைகோர்ட்டும் கைவிட்ட நிலையில் கொதித்து போயுள்ளது நாம் தமிழர் கட்சி! இதனால் இந்த பிரச்சனை தொடர்பாக பத்திரிகையாளர்களை நாளை சந்திக்க உள்ளார் சீமான். பத்திரிகையாளர்கள் வாயிலாகவே மக்களிடம் சின்னத்தை கொண்டு சேர்க்கவும் முயலப் போவதாக சீமான் கட்சியின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இது நியாயமா?
சிறியதாகவும், தெளிவற்றும், மங்கலாகவும், கண்ணுக்கே தெரியாத வகையில் கரும்பு விவசாயி சின்னம் அச்சடித்திருப்பது நியாயமா என்ற கேள்வியையும் சீமான் நாளை முன்வைப்பார் என்று தெரிகிறது. அதேபோல, நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க விரும்பும் முதியவர்கள், படிக்காத பாமரர்கள், கண்பார்வை குறைபாடு உடையவர்கள் விவசாயி சின்னத்தைக் கண்டறிந்து எப்படி வாக்களிப்பார்கள் என்றும் கேள்வி எழுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.. நாளை சீமான் என்ன செய்ய போகிறார் என்று!












Click it and Unblock the Notifications