சிபிஐ கைக்கு போன கரூர் கேஸ்.. தமிழ்நாடு போலீஸ் மேல நம்பிக்கை இல்லையா? சீமானுக்கு வந்த கோபம்!
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை கண்காணிக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கரூரில் 41 உயிரிழந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி இருப்பது காவல்துறையை அவமதிக்கும் செயல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் பிரச்சாரப் பிரிவு மேலாண்மைச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நிறைவு பெற்ற நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டதோடு, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கண்காணிப்புக் குழுவை அமைத்தது உத்தரவிட்டது. இந்நிலையில், கரூரில் 41 உயிரிழந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி இருப்பது காவல்துறையை அவமதிக்கும் செயல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்," கரூர் நெரிசல் தொடர்பான வழக்கை சிபிஐக்கு ஒப்படைத்திருப்பது ஏற்புடையது இல்லை.
இது ஒரு மாநிலத்தின் உரிமைக்கு எதிரானதாகவே பார்க்க வேண்டும். இதுவரை நடந்த காவல்துறை விசாரணையில் என்ன குறையை கண்டுபிடித்து விட்டார்கள். நீதிமன்றம், தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை இவை எல்லாம் தன்னாட்சி அமைப்புகள் இல்லை. இவை அனைத்தும் ஆட்சியாளர்களின் விரல்களைப் போல செயல்படுகிறது. அவர்கள் சொல்வதைப் போல தான் செயல்படும். சிபிஐ விசாரணை என்பது இதனை மடைமாற்ற மட்டுமே உதவும்.
ஒருவேளை சிபிஐ விசாரித்தாலும் நாளைக்கே விசாரணையை தொடங்கி இரண்டே மாதத்தில் முழுமையான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்து விடுவார்களா? கரூர் விவகாரத்தில் இன்னும் காவல்துறை விசாரணை தொடங்கவே இல்லை. அதற்குள் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. அஸ்ரா கார்க் தலைமையிலான விசாரணை வேண்டாம் என்று நீதிமன்றத்தில் தவெக கூறுகிறது.
சிறுநீரக முறைகேடு வழக்கில் நீதிமன்றம் அமைத்த விசாரணை குழுவை தமிழக அரசு வேண்டாம் என்று கூறுகிறது. இதிலிருந்தே மாநிலத்தில் எப்படிப்பட்ட ஆட்சி நடைபெறுகிறது என்பது அனைவருக்கும் தெரியும்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications