ஸீனுக்குள் வந்த சீமான் மகன்கள்.. நாம் தமிழர் கட்சிக்கு "பங்களிப்பு!" ஐடி விங்கே வெளியிட்ட அறிவிப்பு
சென்னை: நாம் தமிழர் கட்சியில் லோக்சபா தேர்தலுக்கான திரள்நிதி திரட்டலில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வளர்ப்பு மகன் அகில்யான், மகன் மாவீரன் பிரபாகரன் ஆகியோர் "பங்களிப்பு" செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே களமிறங்குகிறது. இதுவரை நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டு ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு சதவீதத்தை அதிகரித்து வருகிறது.

லோக்சபா தேர்தல்: சட்டசபை, லோக்சபா தேர்தல்களில் தனித்து போட்டிதான் என்பதை கொள்கையாகவே கடைபிடித்து வருகிறார் சீமான். நாம் தமிழர் கட்சியுடன் அதிமுக கூட்டணி அமைக்க முயற்சித்த போதும் கூட, தாம் அதை நிராகரித்துவிட்டதாக சீமான் வெளிப்படையாகவே தெரிவித்தும் இருக்கிறார். தற்போதைய லோக்சபா தேர்தலையும் நாம் தமிழர் கட்சி தனித்தே எதிர்கொள்கிறது. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தீவிர பிரசாரம் முன்னெடுக்கப்பட்டும் வருகிறது.
திரள்நிதி தாருங்கள் உறவுகளே: மேலும் லோக்சபா தேர்தல் செலவுக்காக "திரள் நிதி திரட்டல்" திட்டத்தையும் நாம் தமிழர் கட்சி அறிவித்தது. இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டிருந்த அறிவிப்பில், அறத்தை அடிப்படையாகக் கொண்டு நேர்மையுடன் களத்தில் நிற்கும் நாம் தமிழர் கட்சி, படித்த, பொருளாதார நிறைவைக் கண்டவர்கள் மட்டுமல்லாது, வறுமை கோட்டுக்குக் கீழுள்ளவர்கள், உழவர் குடிகள், எளிய பின்புலம் கொண்ட இளைஞர்கள், பெண்கள் ஆகியோரை நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக முன்னிறுத்துகிறது. தேர்தல் செலவாக ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு 95 இலட்சம் வரை செலவு செய்து கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அனுமதியளித்துள்ளது. ஆனால், நாம் தமிழர் கட்சி மிகக் குறைந்த பொருளாதார நிலையிலேயே தொடர்ந்து தேர்தல் களம் கண்டு, பெரும் வளர்ச்சியை ஈட்டியுள்ளது அனைத்துத் தரப்பினரையும் வியக்க வைத்துள்ளது.தேர்தல் செலவுகளுக்காக மக்களிடம் திரள்நிதி (Crowd Funding) மூலம் பொருளாதாரத்தைத் திரட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் வரவு - செலவு கணக்குகள் வெளிப்படையாக இணையத்தில் வெளியிடப்படும். எனவே இத்திட்டத்திற்குப் பேராதரவு தந்து பொருளுதவி செய்து வலிமை சேர்க்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம் என வேண்டுகோள் விடுத்திருந்தது.

சீமானின் இரு மகன்கள் பங்களிப்பு: இதனைத் தொடர்ந்து தேர்தல் திரள் நிதி திரட்டலில் பங்களிப்பு செய்தோர் விவரங்களை நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில் நுட்ப பிரிவு (ஐடி விங்) தமது சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு வருகிறது. இன்றைய அறிவிப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் மகன் அகில்யான் திரள் நிதி திட்டத்தில் பங்களிப்பு என @_ITWingNTK அதிகாரப்பூர்வ பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவர் @Sunandha_TS தமது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், அண்ணன் சீமான் மற்றும் அவரது இரு மகன்களின் (ஆகில்யன், மாவீரன் பிரபாகரன்) பங்களிப்பு! என இருவரும் தலா ரூ5,000 நிதி அளித்ததாக தெரிவித்துள்ளனர்.
வளர்ப்பு மகன் ஆகில்யன்: சீமான் - கயல்விழி தம்பதியினருக்கு பிறந்த மகன் பெயர் மாவீரன் பிரபாகரன். சீமானின் மனைவி கயல்விழியின் சகோதரி மகன் ஆகில்யன். கயல்விழி சகோதரி மறைந்துவிட்ட நிலையில் அவரது மகன் ஆகில்யனை சீமான் வளர்த்து வருகிறார். வளர்ப்பு மகன் என சொல்லாமல் எப்போது தன் மகன் என்றும் தனது இரு பிள்ளைகள் என்றும்தான் சீமான் குறிப்பிடுவது வழக்கம்.












Click it and Unblock the Notifications