ஜோதிமணி என்னை இதற்காகத்தான் திட்டுகிறார்... சீறிய சீமான்.. கையோடு திமுகவை பற்றி பேசியதுதான் ஹைலைட்!
சென்னை : எம்.பி.ஜோதிமணிக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி கிடைக்கும் என்ற தகவல் இருக்கிறது. என்னைப் பற்றி பேசினால் அது உறுதியாகும் என அவர் நினைக்கிறார் என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
Recommended Video
பாஜகவின் மாநில பொதுச்செயலாளராக இருந்த கே.டி.ராகவன் தொடர்பாக பாலியல் வீடியோவை யூடியூபர் மதன் என்பவர் வெளியிட்டார். இதனையடுத்து பாஜக பொதுச்செயலாளர் பதவியை கே.டி.ராகவன் ராஜினாமா செய்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த சீமான், யாரும் செய்யாததையா கே.டி.ராகவன் செய்துவிட்டார்.. அவரை வீடியோ எடுத்ததுதான் குற்றம்.. அந்த நபரைத்தான் கைது செய்திருக்க வேண்டும் என்றார்.

ஜோதிமணி பேச்சு
சீமானின் இந்த நிலைப்பாட்டுக்கு காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். ஜோதிமணி தமது அறிக்கையில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை,சுரண்டலை கேள்வி கேட்கும் சமூகம் சரியாகத்தான் இருக்கிறது. பாஜக ராகவனின் பாலியல் குற்றத்தை,சுரண்டலை சிறிதும் வெட்கம் இல்லாமல் அப்பட்டமாக ஆதரிக்கும் சீமானின் செயல்பாடுதான் வெட்கக்கேடானது.

ஆபத்தான பேச்சு
சீமான் ஒரு அரசியல் கட்சியின் தலைவர்.இவர் இப்படிப் பொறுப்பில்லாமல், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை, சுரண்டலை ஆதரிப்பது அதிர்ச்சியளிக்கிறது. நாம் தமிழர் கட்சியில் இருக்கும் கள்ளமில்லாத இளைஞர்களின் மனதில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சரியென்ற மனநிலையை சீமான் உருவாக்குகிறார். இது ஒட்டுமொத்த பெண்களுக்கும், தமிழ் சமூகத்திற்கும் ஆபத்தாகிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது என ஜோதிமணி எம்பி கூறினார்.

சீமான் தாக்கு
ஜோதிமணியின் இந்த கண்டனம் குறித்து கருத்து தெரிவித்த சீமான், ஜோதிமணி இவ்வளவு பேச வேண்டியது இல்லை.. ரொம்ப கஷ்டமா இருந்தா விஷம் குடிச்சு செத்துப் போ என ஒருமையில் பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த ஜோதிமணி, பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ள, அப்பட்டமாக கே.டி ராகவன் போன்ற பாலியல் குற்றவாளிகளை ஆதரிக்கின்ற சீமானெல்லாம் தலைநிமிர்ந்து வாழ்கிறபோது, பெண்களின் பாதுகாப்பிற்கு போராடுகிற நான் எதற்கு விஷம் குடிக்க வேண்டும்? பாஜகவைச் சொன்னால் சீமானுக்கு ஏன் வலிக்கிறது? என்று கேள்வி எழுப்பினார். அத்துடன ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சீமான் வக்கிரமானவர் என்று கடுமையாக விமர்சித்தார்.

என்னை பற்றி பேசினால்
இந்நிலையில் எம்.பி.ஜோதிமணிக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி கிடைக்கும் என்ற தகவல் இருக்கிறது. என்னைப் பற்றி பேசினால் அது உறுதியாகும் என அவர் நினைக்கிறார் என சீமான் பதிலடி கொடுத்துள்ளார். தொடர்ந்து பேசிய சீமான், நான் திமுகவில் தொடர்ந்து இருந்திருந்தால் அமைச்சராக கூட இப்போது ஆகியிருப்பேன், பிரபாகரனை சந்தித்த பிறகுதான் எனக்குள் ஒரு வெளிச்சம் பாய்ந்தது என்று தெரிவித்தார்.

திமுக அரசு
நாம் தமிழர் கட்சி என்ன சொல்லியிருக்கிறதோ, என்ன எழுதி அறிக்கை விடுக்கிறதோ அதையெல்லாம் பார்த்துதான் திமுக அரசு செயல்படுத்துகிறது, நான் பேசுவதற்கு எதையும் மிச்சம் வைத்துவிடக்கூடாது என்று திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன ; அதில் எனக்கு மகிழ்ச்சி தான் என்று செய்தியாளர் சந்திப்பில் சீமான் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications