புலிகள் நுழைந்தவுடன் அணில்கள் கண்ணில் படவில்லை.. தவெகவை மீண்டும் சீண்டிய சீமான்
திருவள்ளூர்: 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக மோதல் பரபரப்பாக உள்ள நிலையில், மறுபக்கம் நாம் தமிழர் தவெக இடையே கடும் மோதல், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. விஜய் மீது சீமான் நேரடியாக விமர்சனங்களை வைத்து வருகிறார். அந்த வகையில் நாம் தமிழர் நடத்திய மரங்களின் மாநாட்டிலும் அணில் கதை சொல்லி விஜய் மற்றும் தவெகவினரை சீமான் கலாய்த்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன. அரசியல் கட்சிகள் இப்போதே காரகார விவாதங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். திமுக, கூட்டணி, அதிமுக கூட்டணி ஆகியோருடன் நாம் தமிழர், தவெக கட்சிகளும் போட்டியில் உள்ளன. நாம் தமிழர் தனித்து போட்டி என்று அறிவித்துவிட்டார்கள். தவெக கூட்டணி ஆட்சி என்று சொல்லி காத்திருக்கிறார்கள்.

விஜய்யுடன் மோதும் சீமான்
தவெக சார்பில் கடந்த வாரம் மதுரையில் மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய அக்கட்சி தலைவர் விஜய் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், அதிமுக என்று அனைத்து பிரதான கட்சிகளையும் விமர்சித்தார். விஜய்யை பல்வேறு கட்சிகள் விமர்சித்தாலும், அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு தம்பி என்று பாச போராட்டம் நடத்திய சீமான், விஜய் அரசியலுக்கு வந்த பிறகு அவரை மிகவும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
தவெக மற்றும் விஜய்யை சீமான் அணில் என்று விமர்சித்து கொண்டிருக்கிறார். இதற்கு தவெக மாநாட்டில் பேசிய விஜய், "சிங்கம் வேட்டைக்கு மட்டுமே வெளியில் வரும். வேடிக்கை பார்க்க எல்லாம் வெளியில் வராது" என்று பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் மரங்கள் மாநாட்டில் விஜய்யை சீமான் மீண்டும் சீண்டியுள்ளார்.
அணில்கள் கண்ணில் படவில்லை
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மரங்களின் மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், "அந்த காட்டிற்குள் புலிகள் நுழைந்தவுடனே ஒரு அணில் கூட கண்ணில் படவில்லை. அணில்களுக்கும் சேர்த்துதான் காடு வளர்க்க நாம் பாடுபடுகிறோம். மரங்களுக்கு என்ன மாநாடு, இவர்களுக்கு என்ன மறை கழன்றுவிட்டதா என்று சிலர் கேட்பார்கள். மறை கழன்றதால் அல்ல மறையை கற்றதால் இந்த மாநாடு நடத்தியுள்ளோம்.
நாட்டிற்காக நிற்பவர்கள் தான் இந்த மாநாட்டை நடத்த முடியும். அற்ப ஓட்டிற்காக நிற்போர் இதைப்பற்றி சிந்திக்க மாட்டார்கள். ஓட்டுக்காக நிற்பவர்கள் இதை நினைத்து கூட சிந்திக்க மாட்டார்கள். மக்களின் வாழ்க்கைக்காக நிற்பவர்களால் தான் இந்த மாநாட்டை நடத்துவார்கள். நடத்த முடியும். அரசு மரம் நடுவோம், மழை பெறுவோம் என்ற வாசகத்துடன் தங்கள் பொறுப்பு முடிந்துவிடுவதாக நினைக்கிறார்கள்.
எது செல்வம்
செயல் அரசியல், சேவை அரசியல் செய்பவர்கள் தான் இந்த வேலையை செய்வார்கள். செய்திகளுக்காக அரசியல் செய்வோர் இந்த அரசியலை செய்ய மாட்டார்கள். கட்சி அரசியல், தேர்தல் அரசியல் செய்வோர் இந்த வேலையை செய்ய மாட்டார்கள். மக்களுக்கான அரசியல் எவன் செய்கிறானோ அவன் தான் இந்தப் பணிகளை செய்வான். அப்படித்தான் மாநாடுகளின் மாநாடு, மரங்களுக்கான மாநாடு நடத்தப்படுகிறது.
மலைகளின் மாநாடு, தண்ணீர் மாநாடும் நடைபெறவுள்ளது. செல்வம் என்றால் என்ன காடு தான் செல்வம். கடல், மலை, மணல் இதுதான் செல்வம். காந்தி படம் மட்டுமே செல்வம் அல்ல. அது வெறும் தாள். அந்த தாளை தந்தவனே இவன் தான். இவன் தானடா செல்வம். இவன் தான் நம் செல்வம். அதனால் அவன் பின் செல்வோம்.
காற்றுக்கும் காசு
நிதிநிலை அறிக்கையில் தூய காற்றிற்காக ரூ.4,500 கோடி ஒதுக்கியுள்ளனர். இதை எந்த நாட்டில் இருந்து வாங்க முடியும். அதை எப்படி நம் குடி மக்களுக்கு விநியோகம் செய்வார்கள். மழை நீரை சேமிக்காமல், அதை கடல் நீரில் கலக்க வைத்து பிறகு அதை சுத்திகரிக்கிறோம் என்று சொல்லி ரூ.50,000 கோடி சம்பாதிக்கும் அரசாங்கம் இருக்கிறது. தண்ணீரை போல காற்றையும் விற்பார்கள்." என்றார்.












Click it and Unblock the Notifications