இஸ்ரேல் ஈரானில் தவிக்கும் தமிழர்கள்.. கண்ணீர் சிந்தும் மீனவச் சொந்தங்கள்! அரசுக்கு பறந்த கோரிக்கை!
சென்னை: இஸ்ரேல் - ஈரான் நாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கடும் போர் மூண்டுள்ள ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளில் பல்வேறு பணிகளுக்காகச் சென்றுள்ள தமிழர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கித்தவித்து வருவது மிகுந்த மனவேதனை அளிக்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"அரசுகளுக்கு இடையே நடக்கும் அதிகாரப் போரில் அதிகம் பாதிக்கப்படுவதும், பலியாவதும் அங்கு வாழும் அப்பாவி மக்கள்தான். ஏற்கனவே பாலஸ்தீனத்தின் காசாவிலும், உக்ரைனிலும் நடைபெறும் போரில் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும், பல இலட்சம் மக்கள் பசியிலும் வறுமையிலும் உணவுக்காக அலைகின்ற காட்சிகள் நெஞ்சை உலுக்குகின்றது.
இந்நிலையில் ஈரான்-இஸ்ரேல் இடையே தற்போது மூண்டுள்ள போரால் மேலும் பல இலட்சக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்படும் துயரமும் நிகழ்ந்தேறுகின்றது.

அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டிலிருந்து குடும்ப வறுமைச்சூழல் காரணமாகப் பொருளாதாரம் தேடி, இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்குப் பணிக்குச் சென்றுள்ள தங்கள் உறவினர் நிலையறியாது அவர்களுடைய குடும்பத்தினர் செய்வதறியாது தவித்து வருகின்றனர். குறிப்பாக ஈரான் நாட்டிற்கு மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற பல நூறு தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் அங்கிருந்து தாயகம் திரும்ப போதிய பணமின்றி தவித்து வருகின்றனர்.
இத்தனை பெரிய கடற்பரப்பு இருந்தும் தமிழ்நாட்டு மீனவர்கள் வாழ வழியின்றி கடல்கடந்து அயல்நாடுகளுக்குச் சென்று மீன்பிடித் தொழில் செய்ய வேண்டிய அவலநிலை நிலவுவது வரலாற்றுப்பெருந்துயரம். தங்கள் குடும்ப உறவுகளைத் தொடர்புகொள்ள முடியாது கண்ணீர் சிந்தும் மீனவச் சொந்தங்களின் நிலை மிகுந்த பரிதாபகரமானதாகும். ஆகவே, ஈரான் இஸ்ரேல் நாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழ் மக்களைப் பாதுகாப்பாகத் தாயகம் மீட்டுவந்து அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க இந்திய ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாடு அரசும் அயலக அமைச்சகத்தின் மூலமும், இந்திய ஒன்றிய அரசின் தூதரகங்கள் மூலமும் தமிழர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டுமெனவும், பயணச்செலவை ஒன்றிய - மாநில அரசுகளே முழுமையாக ஏற்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்." என கூறியுள்ளார்.
இஸ்ரேல் ஈரான் போர்: ஹமாஸ் இயக்கத்துக்கு ஆதரவாக இருந்ததாக கூறி இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை ஈரான் மீது ஏவுகணைகள், அதிநவீன ட்ரோன்கள் மூலம் கடுமையாக தாக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இரு நாடுகள் இடையேயான போரில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு இருக்கின்றனர். ஈரான் தரப்பில் 600 பேரும், இஸ்ரேல் தரப்பில் 20 பேரும் உயிரிழந்ததாகவும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் ஈரானில் இருக்கும் இந்தியர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதற்காக இந்தியாவும் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்களை மீட்டு வருகிறது. இதற்காக தனது வான் வழியை பயன்படுத்திக் கொள்ள ஈரான் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களை மீட்டுள்ள நிலையில், மீன் பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள தமிழர்களை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications