சீமான் வீட்டில் நடந்தது என்ன? சம்மனை கிழித்தது ஏன்- கயல்விழி விளக்கம்
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் நடந்தது என்ன என்பது குறித்து அவருடைய மனைவி கயல்விழி செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: எங்கள் வீட்டிற்கு வளசரவாக்கம் காவல் நிலைய போலீஸார் சம்மன் கொடுக்க வந்தனர். அப்போது காவலாளியிடம் விசாரித்துக் கொண்டிருந்தனர்.

அவரிடம் சம்மன் கொண்டு வந்ததாக கூறியிருந்தனர். அப்போது அவர் "சீமான் வீட்டில் இல்லை, அவர் கிருஷ்ணகிரி சென்றிருக்கிறார்" என்றார். வீட்டில் நான் இருக்கிறேன். என்னிடம் சம்மனை கொடுத்திருக்கலாம்.
போலீஸார் சம்மன்
என்னிடம் வந்து கட்சி நிர்வாகி ஒருவர் போலீஸார் சம்மனுடன் வந்திருக்கிறார்கள் என்றார். நானும் அவர்கள் உள்ளே வந்து சம்மனை தந்தால் அதை வாங்கிக் கொள்ளலாம் என்றிருந்தேன். ஆனால் ஏதோ ஆள் இல்லாத வீடு போல் சம்மனை ஒட்டிவிட்டுச் சென்றுவிட்டனர்.
சம்மன் கிழிந்துவிட்டது
அப்போது என்னிடம் சம்மனை கேட்டில் ஒட்டிவிட்டனர் என அந்த நிர்வாகி கூறினார். நான்தான் அதை கிழித்துக் கொண்டு வாங்க, படிக்கலாம் என்றேன். அதன்பேரில்தான் அந்த தம்பி அதை கிழித்தார். அவர் கிழித்தது 2, 3 பகுதிகளாகிவிட்டது.
முன்னாள் ராணுவ வீரர்
அதை எடுத்து வைத்து படித்துக் கொண்டிருந்த போது திடீரென எங்கள் வீட்டு காவலாளி அண்ணனின் குரல் கேட்டது. உடனே காவல் ஆய்வாளர் பிரவீன்- "என்னையே தள்ளுகிறாயா" என கேட்டார். நான் வந்து பார்த்த போது அவரை நீலாங்கரை போலீஸார் இழுத்துச் சென்றனர். அவர் ஒரு முன்னாள் ராணுவ வீரர், அவரை ஏதோ குப்பை போல் இழுத்து வண்டியில் போடுகிறார்கள்.
இழுத்து சென்ற போலீஸார்
இந்த தைரியத்தை அவர்களுக்கு யார் கொடுத்தது, நான் கூட காவலாளிதான் போலீஸிடம் ஏதோ பேசிவிட்டார் என அழைத்து சாரி சார் என கூறியபடியே வந்தேன். ஆனால் அவர்கள் கேட்காமல் இழுத்துச் சென்று இன்று ரிமாண்ட் செய்துவிட்டனர்.
ரிமாண்ட்
அவர்களை விட்டுவிடுவார்கள் என நினைத்தால் ரிமாண்ட் செய்தனர். அந்த காவலாளியிடம் ஒரு துப்பாக்கி இருக்கிறது. அது அனுமதி பெற்றுதான் அவர் வைத்திருக்கிறார். அதை அவர்தான் போலீஸிடம் கொடுத்தார். காவலாளி அதை வைத்து மிரட்டவில்லை. சீமான் எங்கிருக்கிறார் என்பது எல்லாருக்கும் தெரியும். அப்படி இருக்கும் போது அவர் வீட்டில் இல்லாத நேரமாக பார்த்து வந்ததும் இல்லாமல் குடும்பம் போல் இருக்கும் எங்கள் கட்சியினரை அடிக்கிறார்கள்.
நீலாங்கரை போலீஸார்
எங்களை எதை செய்தாலும் பொறுமையாக இருப்போம். ஆனால் கட்சியினர் மீது கை வைத்தால் தாங்க மாட்டோம் என்று தெரிந்தே அவர்கள் அப்படி செய்கிறார்கள். வளசரவாக்கம் போலீஸார் வந்துவிட்டு சென்ற பிறகு உடனே நீலாங்கரை போலீஸார் வருவதற்கான தேவை என்ன? சம்மன் என்புது நாங்கள் தகவல்களை தெரிந்துக் கொள்வதற்காகத்தானே, அதை ஏன் கேட்டில் ஒட்டுகிறீர்கள். நான்தான் வீட்டில் இருக்கிறேனே. எனவே இதையெல்லாம் வேண்டுமென்றே திட்டமிட்டு செய்திருக்கிறார்கள்.
சீமான் கைதுக்கு பயமில்லை
சீமான் கைதுக்காக நாங்கள் பயப்படவில்லை. நான் கல்யாணம் ஆன புதிது முதல் சீமான் கைது சீமான் கைது என சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். சம்மனை நான்தான் கிழிக்கச் சொன்னேன் என பிரவீணிடம் கூறியும் அவர் அதை கேட்கவில்லை. நான் நைட்டியில் இருந்ததாலும் வெளியே பத்திரிகையாளர்கள் இருந்ததாலும் எனக்கு சங்கடமாக இருந்ததால் அதை வெளியே வந்து படிக்க முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications