“அதிமுக இறுதிவரை உறுதியாக இருக்குமானால்..” பாஜக, அதிமுக விரிசல்! சீமான் சொன்னதை கவனிச்சீங்களா!
சென்னை: பாஜகவுடன் அதிமுக கூட்டணி கிடையாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்திருந்த நிலையில், இந்த முடிவை முழுமையாக வரவேற்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
அதிமுகவின் மறைந்த தலைவர்கள் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்தது ஏற்கெனவே அதிமுக-பாஜக இடையே சலசலப்பை உண்டாக்கியது. இந்நிலையில், சமீபத்தில் அறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை பேசியிருந்தது இரு கட்சிகளுக்கிடையேயான மோதல் போக்கை தீவிரப்படுத்தியுள்ளது. இப்படி இருக்கையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜகவோடு கூட்டணி இல்லை என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் 2024 நாடாளுமன்ற தேர்தலை அதிமுகவோடு இணைந்து பாஜக எதிர்கொள்ள இருந்த நிலையில் இப்படியான அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை உருவாக்கியுள்ளது. இது குறித்து விரிவாக பேட்டியளித்த ஜெயக்குமார், "எங்களை பொறுத்த அளவில் கட்சியின் மறைந்த தலைவர்கள், மூத்த தலைவர்கள் குறித்து அவதூறாக பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவேதான் நாங்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். இது கட்சி முடிவு. கட்சி முடிவைதான் நான் அறிவிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
அதேபோல பாஜக மாநில தலைவரை மாற்றம் செய்தால் இந்த கூட்டணி இறுதியாகும்? நாடாளுமன்ற தேர்தலுக்கு என்ன செய்ய போகிறீர்கள்? என்று நிரூபர் எழுப்பிய கேள்விக்கு, "மறைந்த தலைவர்கள் குறித்து விமர்சிப்பதை தொண்டர்களால் ஏற்றுக்கொள்ள முடிவில்லை. இப்படியான விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு அவர்களோடு கூட்டணி தேவையா? என்று தொண்டர்கள் கேள்வியெழுப்புகிறார்கள். எனவே இந்த கூட்டணி தேவையில்லை என்பதுதான். தேர்தல் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்" என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் அதிமுகவின் இந்த முடிவை முழுமையாக வரவேற்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது குறித்து X சோஷியல் மீடியா தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, "பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டதாக அறிவித்திருக்கும் அதிமுகவின் முடிவை முழுமையாக வரவேற்கிறேன். மிகத் தாமதமான முடிவென்றாலும், சரியானதொரு முடிவு! காங்கிரசு, பாஜக எனும் இரு இந்திய ஒன்றியக் கட்சிகளுமே தமிழ்நாட்டுக்கும், தமிழினத்திற்கும் எதிரிகள்தான்.
அவை தமிழ்த்தேசிய இனத்தின் உரிமை, உணர்வு, உயிர், நிலம், வளம், அதனுடையப் பாதுகாப்பு, எதிர்கால நலவாழ்வு என எல்லாவற்றிற்கும் எதிரானவையே! பாஜகவுடனான உறவைத் துண்டித்திருக்கும் இந்நிலைப்பாட்டில் அதிமுக இறுதிவரை உறுதியாக இருக்குமானால் அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications