"அ " எழுத்தில் எடப்பாடி விமர்சனம்! "சா" எழுத்தில் சேகர் பாபு பதிலடி! "பொ" பழசானதால் புது ரைமிங்
சென்னை: அரக்கோணம் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை, அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். இதற்கு அமைச்சர் சேகர்பாபு, "கடந்த காலங்களில் நடந்தது சாத்தான்களின் ஆட்சி.. அதற்கு சாத்தான்குளமே சாட்சி" என்று ரைமிங்காக பதில் அளித்துள்ளார். இரு கட்சியினரும் மாறி மாறி ரைமிங்காக சண்டை போட்டு வருவது மக்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
2016 - 2021ஆம் ஆண்டு வரையிலான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை விமர்சிக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி" என்று அடிக்கடி சொல்லுவார். கடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது கூட, பொள்ளாச்சி சம்பவம் தொடர்பான விவாதத்தில், இதே வாக்கியத்தை பயன்படுத்தி விமர்சித்திருந்தார்.

பொல்லாத ஆட்சி
தொடர்ந்து பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை கொடூர வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வந்தபோது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி என்று கூறி தனது கருத்தை பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் அரக்கோணம் பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி வருகிறது.
அலங்கோல ஆட்சி
திமுக நிர்வாகி தெய்வச்செயல் என்பவன் கல்லூரி மாணவியை ஏமாற்றி பிற திமுக சார்களுக்கு இரையாக்க முயற்சித்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருந்தார். அதேபோல் பாதிக்கப்பட்ட மாணவி வெளியிட்டுள்ள வீடியோவும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை எடப்பாடி பழனிசாமி, "அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி" என்று விமர்சித்தார்.
சேகர்பாபு பேட்டி
இப்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இருவரும் ரைமிங்காக விமர்சித்து வருகின்றனர். இந்த பட்டியலில் 3வதாக அமைச்சர் சேகர்பாபு இணைந்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சேகர்பாபு பேசிய போது, அரக்கோணம் சம்பவம் தொடர்பான எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
பாகுபாடு இல்லை
அதற்கு அமைச்சர் சேகர்பாபு, துப்புக்கெட்ட ஆட்சிக்கு தூக்குக்குடியே சாட்சி என்று சொல்லி இருக்கிறோம்.. பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி என்று சொல்லி இருக்கிறோம். ஆட்சியை பொறுத்தவரை தவறு நடக்கும் போது, அதன்மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்தான் குற்றம்சாட்ட வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எந்த பாகுபாடும் கிடையாது.
சாத்தான்களின் ஆட்சி
தவறு யார் இழைத்திருந்தாலும், சொந்த கட்சிக்காரரே தவறு செய்திருந்தாலும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே முதல்வர் ஸ்டாலினின் நிலைப்பாடு. இது நீதியின் ஆட்சி, சட்டத்தின் ஆட்சி.. கடந்த காலங்களில் நடந்தது சாத்தான்களின் ஆட்சி.. அதற்கு சாத்தான்குளம் சம்பவமே சாட்சி என்று பதில் அளித்துள்ளார். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சியினரும் இப்போது ரைமிங்காக சண்டை போட தொடங்கி இருக்கிறார்கள்.
ரைமிங் சண்டை
பொள்ளாசி சம்பவம் முடிந்துவிட்ட நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமி அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி என்று அ எழுத்தில் பதிலடி கொடுத்து வந்தார். தற்போது, அமைச்சர் சேகர்பாபு சா எழுத்தில் தொடங்கும் சாத்தான்களின் ஆட்சிக்கு சாத்தான்குளமே சாட்சி என்று பதில் அளித்திருக்கிறார். 2 முக்கிய கட்சிகள் மாறி மாறி சண்டை போட்டு வருவது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.












Click it and Unblock the Notifications