பட்ஜெட்டிற்கு கூட விஜயதாரணி சட்டசபைக்கு வராதது ஏன்?.. செல்வப்பெருந்தகை சொன்ன விளக்கம்
சென்னை: தமிழக பட்ஜெட் தாக்கலுக்கு விளவங்கோடு எம்எல்ஏ விஜயதாரணி ஏன் வரவில்லை என்பது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கமளித்துள்ளார்.
விஜயதாரணி இன்று சட்டசபைக்கு வருவார் என நம்புவதாக அவர் தெரிவித்திருந்த நிலையில் இன்று சட்டசபைக்கு பட்ஜெட்டிற்கு கூட அவர் வராதது பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விஜயதாரணிக்கு கன்னியாகுமரி தொகுதி ஒதுக்கீடு செய்ய மறுப்பதால் விஜயதாரணி எம்எல்ஏ பாஜகவுக்கு செல்கிறார் என தகவல்கள் வெளியாகின. இதை விஜயதாரணியே மறுத்துவிட்டார். நான் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு செல்வதாக கூறப்படுவது வதந்தி, அதற்கு வாய்ப்பே இல்லை என கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்றைய தினம் சட்டசபைக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் வரவில்லை. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரும் எம்எல்ஏவுமான செல்வப்பெருந்தகை தமிழக தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: விஜயதாரணி 3 முறை சட்டசபை உறுப்பினராக இருந்து வருகிறார். வழக்கறிஞர்.
கிராமங்களில் புள்ளை பிடிப்பவர்களை வந்தாலே குழந்தைகளை வெளியே அனுப்ப மாட்டார்கள். அது போல் பாஜகவும் வேறு கட்சிகளில் யார் யார் எல்லாம் திறமையாக இருக்கிறார்களோ, யார் யார் எல்லாம் விவரமாக இருக்கிறார்களோ அவர்களை பிடிக்க வலை வீசுவார்கள்.
அவர்கள் வீசும் வலைக்கு எங்களுடைய சட்டசபை உறுப்பினர் விஜயதாரணி சிக்க மாட்டார். விவரமானவர், புத்திசாலி, அவருடைய வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கை நடத்தவே விஜயதாரணி புதுடெல்லியில் 5 நாட்களாக முகாமிட்டுள்ளார்.
இதனால் பாஜகவினர், விஜயதாரணியை தங்கள் அணியில் சேர்த்துக் கொள்ளலாமா என துடிக்கிறார்கள். அது நடக்காது. விஜயதாரணிக்கு என்ன அதிருப்தி இருக்க போவது, 3 முறை எம்எல்ஏவாக இருந்து வருகிறார், சட்டசபை காங்கிரஸ் எம்பிக்களின் கொறடாவாக இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சி அவருக்கு நிறைய செய்துள்ளார்கள். இன்னும் அவருக்கு நிறைய செய்வோம். தமிழக அரசு பள்ளிகளுக்கு மட்டுமில்லை, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் மாதம் ரூ 1000 திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது.
திமுக அரசு பொறுப்பேற்று இரண்டே முக்கால் ஆண்டுகள் ஆனது போல் தெரியும். ஆனால் கொரோனா பெருந்தொற்று, பேரிடர் காலத்திலேயே ஒன்றரை ஆண்டுகால ஆட்சி முடிந்துவிட்டது. எனவே திமுக ஆட்சி செய்தது ஒன்னே கால் ஆண்டுகள்தான். திமுக அரசு திறமையாக ஆங்காங்கே பணிகளை செய்து வருகிறது

எஞ்சிய நாட்களில் தமிழகம் ஒரு முழுமைபெற்ற மாநிலமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் மாற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்தியாவில் பல மாநிலங்களுக்கு வழிகாட்டியாக உள்ளது தமிழகம்தான். ஏற்றுமதியில் கூட முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் உள்ளது போல் குளறுபடி வேறு எந்த மத்திய அரசு திட்டத்திலும் கிடையாது.
2011 ஆம் ஆண்டு ஒரு கணக்கெடுப்பு செய்த போது இறந்தவர்கள் பெயரை அவர்களால் நீக்க முடியவில்லை. புதிய பயனாளிகளை சேர்க்க முடியவில்லை. இதை எப்படி மத்திய அரசின் திட்டம் என சொல்ல முடியும். இந்த திட்டத்தை கொண்டு வந்தது வேண்டுமானால் மத்திய அரசாக இருக்கலாம். ஆனால் அதற்கு நிதியுதவியை 65 சதவீதம் வரை தமிழகம்தான் கொடுக்கிறது. எனவே பிரதமர் ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தை பெயர் மாற்றுமாறு நாங்கள் சொல்லியிருக்கிறோம். இவ்வாறு செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications