தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது?
சென்னை: தேர்தல் முடிந்ததும் தலைவர் பதவியிலிருந்து விலகுவேன் என அழுத்தமாகச் சூளுரைத்திருந்தார் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை. ஆனால், இப்போது வரை அவர் விலகவில்லை. சொன்ன சொல் என்னாச்சு ? எல்லாம் காற்றில் போயாச்சா? என்று அவருக்கே வாட்ஸ் ஆஃபில் கேள்வி எழுப்பி வருகிறார்கள் காங்கிரஸ் நிர்வாகிகள்.
இது மட்டுமல்லாமல், தேர்தலுக்கு முன்பாக தவெக-காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டும் என்கிற 90 சதவீத காங்கிரஸாரின் உணர்வுகளை மதித்து அந்த நிலைப்பாட்டை எடுக்க முன்வந்தவர் ராகுல் ஜி. அதனை தடுத்து, திமுகவுடன் கூட்டணியை நீட்டிக்க வைத்தார் செல்வப்பெருந்தகை. திமுகவின் தீவிர ஆதரவாளர் இவர். திமுகவில் பெற்ற லாப ஆதாயங்களுக்காக தலைமைக்கு எதிராக செயல்பட்டார். இதற்கு கார்கே, ப.சிதம்பரம் ஒத்துழைத்தனர்.

''தேர்தலுக்கு முன்பாக எடுக்க வேண்டிய முடிவை தேர்தலுக்குப் பிறகு இன்றைக்கு திமுக கூட்டணியை முறித்துக் கொண்டு தவெக ஆட்சியில் பங்கு பெற்றுள்ளோம். ராகுல்ஜியின் முடிவுக்கு எதிராக அரசியல் செய்த செல்வப் பெருந்தகையை ஏன் இன்னும் தலைவர் பதவியில் வைத்திருக்கிறீர்கள்? இது தான் 90 சதவீத காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளுக்கு தலைமை தரும் முக்கியத்துவமா? இப்படியே இருந்தால் தமிழகத்தில் காங்கிரஸ் எப்படி வளரும்? தலைமைக்கு எதிராக இயங்குபவர்களை, தவறு செய்பவர்களை, துரோகம் இழைப்பர்களை அப்பப்ப தண்டனை கொடுத்தால் தானே, அடுத்து பொறுப்புக்கு வருபவர்கள் உண்மையாக கட்சியின் வளர்ச்சியில் அக்கறை கொள்வார்கள்?
அதனால், தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, செல்வப்பெருந்தகையை தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு புதிய தலைவராக புது முகமாக ஒருவரை நியமியுங்கள்'' என்று காங்கிரஸ் கட்சியின் மேலிடத்தினை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்கள் கதர் சட்டையினர்.
இந்த நிலையில், இது குறித்த ஆலோசனை நேற்று டெல்லியில் நடந்துள்ளது. விரைவில் மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அறிந்த செல்வப்பெருந்தகை, ''என் மகளுக்கு 18-ந்தேதி திருமணம் வைத்துள்ளேன். அது வரையில் என்னை தலைவர் பதவியிலிருந்து நீக்கி விடாதீர்கள்'' என்று மல்லிகார்ஜுன கார்கேவிடம் கொஞ்சி வருகிறார். அவரை சற்று ஆறுதல் படுத்தியிருக்கிறாராம் கார்கே.
இதற்கிடையே, செல்வப்பெருந்தகையின் வலதுகரமாக இருக்கும் நால்வர் அணியினர், காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கும், முக்கிய நிர்வாகிகளுக்கும் ஃபோன் போட்டு, ''தலைவர் மாற்றம் இருக்காது. உள்ளாட்சித் தேர்தல் வரை செல்வப்பெருந்தகைதான் தலைவர். உள்ளாட்சி தேர்தலில் உங்களில் பலருக்கும் வாய்ப்புகளை வாங்கித் தரவிருக்கிறார். அதனால், அவரின் மகளின் திருமணத்துக்கு 10 லட்சம் மதிப்பிலான நகைகளை அன்பளிப்பாக பரிசளியுங்கள்.
தலைவர் ரொம்பவும் சந்தோசப்படுவார். உங்களுக்கான வாய்ப்புகளும் உங்களுக்கு உறுதி செய்யப்படும்'' என்று கேன்வாசும், ப்ரைன் வாசும் செய்து கொண்டிருக்கிறார்கள். சத்தியமூர்த்திபவனில் எதிரொலிக்கும் ஹாட் டாபிக் இப்போது இதுதான் !
-சிறப்பு நிருபர் எழில்












Click it and Unblock the Notifications