ஸ்டிரிக்ட்.. தனியார் பள்ளிகளுக்கு கடிவாளம் போட்ட தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை.. மிக முக்கிய உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் இருக்கும் தனியார் பள்ளிகளுக்கு முக்கியமான உத்தரவு ஒன்றை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு தேர்வுகள் நடந்து முடிந்துவிட்டன. ஏப்ரல் 3ம் தேதியோடு தேர்வுகள் முடிந்துவிட்டன.
இன்னொரு பக்கம் 10ம் வகுப்பு தேர்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கின்றன. நாளை மறுநாள் கடைசி தேர்வு நடக்கும் நிலையில், அதன்பின் 10ம் வகுப்பு தேர்வுகளும் முடிவிற்கு வரும்.
இதையடுத்து தேர்வு தாள்கள் மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு திருத்துவதற்காக எடுத்து செல்லப்படும். அதன்பின் தேர்வு தாள்களை திருத்தும் பணிகள் நடக்கும். இந்த நிலையில்தான், தமிழ்நாட்டில் இருக்கும் தனியார் பள்ளிகளுக்கு முக்கியமான உத்தரவு ஒன்றை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.

அதன்படி, தனியார் பள்ளிகள் தங்களது ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் பணிக்கு கண்டிப்பாக அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் கண்டிப்பாக வர வேண்டும்.
அவர்கள் வந்தால்தான் அப்பள்ளியின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் போதுமான அளவில் வராததால் விடைத்தாள் திருத்தும் பணிகளில் நிறைய சிக்கல்கள் ஏற்பட்டன. இதன் காரணமாக தற்போது தேர்வுத்துறை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எத்தனை ஆசிரியர்கள் பள்ளிகளில் இருக்கிறார்களோ அத்தனை பேரும் வர வேண்டும். மதிப்பீட்டு பணிக்கு வராவிட்டால் சம்பந்தப்பட்ட பள்ளி தேர்வு முடிவுகள் வெளியிடப்படாது. ஆசிரியர்களை அனுப்ப தவறினால் அந்த பள்ளி மாணவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது.
தமிழ் பிரிவு ஆசிரியர்கள் தமிழ் வழி மாணவர்களுக்கும், ஆங்கில வழி ஆசிரியர்கள் ஆங்கில பிரிவு மாணவர்களுக்கு விடை திருத்தும் பணிகளை செய்ய வேண்டும், என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆசிரியர்களுக்கு 18.04.2023-க்குள் நியமன ஆணையினை வழங்க வேண்டும் என்றும் இவர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிக்கை வெளியிட்டு உள்ளது.

அறிக்கை: அதில், அரசு பள்ளிகள் / அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகள் / தனியார் (மெட்ரிக் / ஆங்கிலோ இந்தியன்) பள்ளிகள் அனைத்திலிருந்தும் பத்தாம் வகுப்பு போதிக்கும் தகுதி வாய்ந்த பள்ளி ஆசிரியர்களை தவறாமல் பணியிலிருந்து விடுவித்து தேர்வாளர்களாக நியமனம் செய்து மதிப்பீட்டுப் பணியினை மேற்கொள்ள அறிவுறுத்தி அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எந்தவொரு பள்ளியிலிருந்தும் ஆசிரியர்கள் விடுபடாது கண்காணித்தல் வேண்டும்.
தனியார் பள்ளிகள் தங்களது ஆசிரியர்களை முகாம் பணிக்கு முழு எண்ணிக்கையில் அனுப்பி வைத்தால் மட்டுமே அப்பள்ளிக்கான தேர்வு முடிவு வெளியிடப்படும். எனவே ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கைப் பட்டியலை (Teachers Profile) தவறாது சரிபார்த்து ஆசிரியர்கள் விடுபடாமல் வரவழைத்தல் வேண்டும்.
மேலும் ஒரு கல்வி மாவட்டத்தில் இரு முகாம்கள், மூன்று முகாம்கள் அமைக்கப்பெற்றிருப்பின் முகாம்களின் தேவைக்கேற்ப விடைத்தாள் மதிப்பீட்டும் பணிக்கு எவ்வித குந்தகமும் ஏற்படாமல் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை (CE AE, SO & MVO) சரிவர பிரித்து ஒதுக்கீடு செய்திடுமாறு தெரிவித்துக் கொள்கிறோம்.
மதிப்பீட்டுப் பணிக்கு நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு 18.04.2023-க்குள் நியமன ஆணையினை தவறாமல் வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறோம், என்று குறிப்பிட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications