மோடியை திடீரென பாராட்டி தள்ளிய செங்கோட்டையன்.. பாஜக செல்கிறாரா?
சென்னை: அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. இப்படியான சூழலில் தான் செங்கோட்டையன் திடீரென்று பிரதமர் மோடியை புகழ்ந்து பேசி உள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடும் பாஜக பக்கம் செங்கோட்டையன் செல்கிறாரா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளரான முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், அந்த கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் சென்னை ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா 6ம் ஆண்டு விழா சென்னையில் இன்று நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.
இந்த விழாவில் செங்கோட்டையன், பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி பேசி உள்ளார். இதுதொடர்பாக செங்கோட்டையன் பேசியதாவது: ‛‛நான் நல்லதை பாராட்டுவேன். ஒருவரின் ஆளுமை திறமை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். அவர் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் சரி. எங்களின் மனதில் இருப்பதை நான் வெளிப்படையாக கூற விரும்புகிறேன். இன்று காலை செய்தியில் பார்த்தேன். இந்தியாவில் சிறந்த பிரதமர் இருக்கிறார் என்று நரேந்திர மோடி வரலாற்றை படைத்துள்ளார்.
எதற்காக இதை சொல்கிறேன் என்றால் ரஷ்யாவின் அதிபர் புதின் சொன்னார். உக்ரைனுடன் போர் நடந்து கொண்டிருக்கிறது. இந்த போரை நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்தி சுமூக உறவை கொண்டு வருவதற்காக இரண்டு தலைவர்கள் முயற்சி மேற்கொண்டனர் என்று கூறி அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பாரத பிரதமர் பெருமதிப்பிற்குரிய நரேந்திர மோடியை பாராட்டி உள்ளார். இதை எதற்காக சொல்கிறேன் என்றால் யார்நல்லது செய்தாலும் பாராட்ட வேண்டும்'' என்றார்.
ஒன்றை நான் நினைவுப்படுத்த விரும்புகிறேன். கோவிட் தொற்று வந்தபோது உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நம் நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போட்ட வரலாறு இந்த மண்ணிலேயே உள்ளது. இதுமட்டுமில்லை. இந்தியாவின் எல்லைக்கோடு என்று சொல்வார்கள். அந்த எல்லைக்கோட்டில் நம் மக்கள் பாதுகாப்பாக வாழ்கிறார்கள் என்று சொன்னோமேயானால் அதற்கு அவர்கள் தான் காரணம் என்பதை கோடிட்டு காட்ட விரும்புகிறேன்.
நான் நல்லதை பாராட்டுவேன். எதிர்க்கட்சியாக இருந்தாலும் கூட ஒரு வரி கூட தவறாக பேசியது இல்லை. நான் முகம் சுளிக்கும் வார்த்தைகளை அள்ளி வீசியது இல்லை. சிலபேர் கூட என்னிடம் கேட்டார்கள். கடுமையான வார்த்தைகளை ஏன் பேசுவது இல்லை என்று. பேசுங்கள் அதற்கு தனியாக இரண்டு பேர் உள்ளனர் என்று கூறினேன். அவர்களின் பெயரை நான் கூற விரும்புவது இல்லை. எனக்கு அந்த வேலை இல்லை.
இந்தியாவின் எல்லை கோட்டில் உள்ள வங்கதேசத்தில் தீவிரவாதம் எப்படி இருக்கிறது? என்று நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். இதைத்தான் ஜெயலலிதா கூறினார். கார்கில் யுத்தம் வருவதற்கு முன்பாகவே இந்தியாவில் உள்ள உளவுத்துறையை கண்காணிப்புக்கு முன்பாகவே அங்கு தீவிரவாதிகள் நுழைந்துவிட்டனர் என்று மத்திய அரசுக்கு எடுத்து கூறியவர் ஜெயலலிதா. அப்படி தேசப்பக்தி உள்ளவர் ஜெயலலிதா.
நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள். ஆனால் நான் ஒன்றும் செய்யப்போவது இல்லை. எந்த பாதை சரியாக இருக்கிறதோ அந்த பாதையில் சென்று கொண்டிருக்கிறேன். என் லட்சியம் உயர்வானது. என்பாதை தெளிவானது. வெற்றி முடிவானது என்பதை இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். மகாகவி பாரதியார் சொன்னது போல், ‛‛சில வேடிக்கை மனிதர்களை போல் வீழ்ந்து விடமாட்டேன்'' என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்'' என்றார்.
செங்கோட்டையன் இப்படி பேசி அமரும்போது ரங்கராஜ் பாண்டே, ‛‛எதையும் சொல்லமாட்டேன்.. எதையும் சொல்லமாட்டேன் என்று கூறி எல்லாத்தையும் சொல்லிவிட்டீர்களே அண்ணன்’’ என்று கமெண்ட் செய்தார். இதனால் செங்கோட்டையன் விரைவில் பாஜகவில் இணைகிறாரா? என்ற கேள்விகள் எழ தொடங்கி உள்ளன.












Click it and Unblock the Notifications