புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவை மீறி.. விஜய்யுடன் நேரடியாக செங்கோட்டையன் பேசியது எப்படி?
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கும் நிலையில், நாளை தவெகவில் இணைய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தவெக தொடங்கப்பட்ட காலம் முதலே மாற்றுக் கட்சியில் இருந்து சேர விரும்பியவர்கள் பலரும் விஜய்யை நெருங்க முடியாமல் இருந்த சூழலில், செங்கோட்டையன் மட்டும் எப்படி விஜய்யை அணுக முடிந்தது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்பட்டது முதல், டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோருடன் இணைந்து பணியாற்றி வந்தார். திடீரென செங்கோட்டையன் தவெகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் தலைமைச் செயலகம் வந்த செங்கோட்டையன், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

இதன் மூலமாக செங்கோட்டையன் தவெகவில் இணையப் போவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. செங்கோட்டையனின் இந்த முடிவுக்கு பின்னணியில் என்ன காரணம் என்பது பலருக்கும் கேள்வியாக இருந்திருக்கிறது. இதனிடையே விஜய்யை செங்கோட்டையன் அணுகியது எப்படி என்ற குழப்பமும் தவெகவினர் மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது.
ஏனென்றால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த பலரும், ஓபிஎஸ் அணியில் உள்ள நிர்வாகிகள் சிலரும் தவெகவில் இணைய முயற்சித்து வந்தனர். அண்மையில் திமுகவில் இணைந்த மருது அழகுராஜ் கூட விஜய்க்கு ஆதரவாகவே பல்வேறு கருத்துக்களை பேசி வந்தார். ஆனால் விஜய்யுடன் இருப்பவர்கள் சிலர், விஜய்யை யாரும் அணுக முடியாத அளவிற்கு ஒரு வட்டத்தை உருவாக்கி வைத்திருந்தனர்.
இதனால் தவெக பக்கம் செல்வதற்கு பதில் திமுகவில் இணையலாம் என்று முடிவு எடுத்தனர். ஆனால் செங்கோட்டையன் நேரடியாக விஜய்யை அணுகியது சில முன்னாள் காவல்துறை அதிகாரிகள் மூலமாக என்று கூறப்படுகிறது. கரூர் சம்பவத்திற்கு பின் புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது விஜய் கடுமையான அதிருப்தியில் இருந்ததாக தெரிகிறது.
இதனால் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் வழிகாட்டுதல் குழுவை விஜய் அமைத்தார். வழிகாட்டுதல் குழுவில் இருந்த சில முன்னாள் காவல் அதிகாரிகள் ஜான் ஆரோக்கியசாமிக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பின் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் செங்கோட்டையன் இடையிலான சந்திப்பு நடந்திருக்கிறது. இதன்பின்னரே செங்கோட்டையன் தவெகவில் இணையும் முடிவுக்கு வந்துள்ளார்.
ஏற்கனவே தவெக கோவையில் கொஞ்சம் வலிமையோடு இருப்பதாக பார்க்கப்படுகிறது. தற்போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முக்கிய அதிமுகவின் அடையாளமான செங்கோட்டையன் இணைவது கூடுதல் பலம் என்று விஜய் கணக்கு போட்டுள்ளார். அதேபோல் செங்கோட்டையனுக்கு உரிய மரியாதையும், பதவியும் அளிக்கப்படும் என்று விஜய் உறுதி கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications