அதிமுக அதிருப்தியாளர்களை.. கையோடு தவெக அழைத்து செல்வார் செங்கோட்டையன்.. பத்திரிகையாளர் சுவாமிநாதன்!
சென்னை: அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் பல்வேறு நிர்வாகிகளையும் தவெக நோக்கி கொண்டு செல்ல அணியில் செங்கோட்டையன் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக பத்திரிகையாளர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். செங்கோட்டையனின் நகர்வு அதிமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவு என்று கூறிய சுவாமிநாதன், சட்டசபைத் தேர்தல் களேபரங்கள் தொடங்கிய பின் இதன் விபரீதம் தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதிமுக தொடங்கப்பட்டு முதல்முறையாக ஆட்சியமைத்த 1977ஆம் ஆண்டு அதே கட்சியில் எம்எல்ஏ-வாக இருந்தவர் செங்கோட்டையன். சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் பயணித்து வரும் செங்கோட்டையன், சில வாரங்களுக்கு முன் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதன்பின் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றிய அவர், தற்போது தவெகவில் இணைந்துள்ளார்.

தவெக தலைவர் விஜய்யின் பட்டினம்பாக்கம் இல்லத்தில் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் விஜய், செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே தவெகவில் செங்கோட்டையனுக்கு அமைப்புச் செயலாளர் பதவி கொடுக்கப்பட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பத்திரிகையாளர் சுவாமிநாதன் பேசுகையில், கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் முகமாக இருந்தவர் செங்கோட்டையன். அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் போன்ற மூத்த நிர்வாகி வெளியேறுவது அக்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு. ஏனென்றால் அதிமுகவின் கிளைச் செயலாளர் முதற்கொண்டு செங்கோட்டையனுக்கு நன்றாக தெரியும்.
இதனால் அதிமுக மீதும், எடப்பாடி பழனிசாமி மீதும் அதிருப்தியில் இருக்கும் பலரையும், செங்கோட்டையனால் தவெக நோக்கி அழைத்து செல்ல முடியும். இன்னும் சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல் முடிவாகவில்லை. அதிமுகவில் யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கவில்லையோ, அவர்களை செங்கோட்டையன் மூலமாக தவெக இழுக்க முயற்சிக்கும்.
செங்கோட்டையன் திமுக பக்கம் சென்றிருந்தால், துரோகம் செய்துவிட்டார் என்று அதிமுக கடந்து போயிருக்கும். ஆனால் தவெக புதிய இயக்கம் என்பதோடு, இளைஞர்கள் அதிகமுள்ள கட்சியாக இருக்கிறது. இனி வரும் காலம் அதிமுகவுக்கு சிக்கல்களை உருவாக்கும் காலமாக அமையும். சின்ன சின்ன சிக்கல்களை களையாததால், அதிமுகவுக்கு இந்த சிக்கல் எழுந்துள்ளது.
ஏற்கனவே விஜய் அண்ணா மற்றும் எம்ஜிஆர் ஆகியோரை ஒவ்வொரு மேடையிலும் பேசி வருகிறார். வரும் காலங்களில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரும் விஜய்யுடன் சேர்ந்து கொண்டால், எம்ஜிஆரை பயன்படுத்தும் உரிமை வந்தது போன்ற தோன்றம் வந்துவிடும். இந்த மூவர் அணி விஜய்யுடன் இணைந்தால், அது என்டிஏ கூட்டணிக்கு சிக்கலாகும்.
செங்கோட்டையனை தவெக எப்படி பயன்படுத்துகிறது என்பதை பொறுத்தே அக்கட்சி பலம்பெறும். விஜய்யை மட்டும் சுழன்று கட்சிப் பணிகளை செய்யாமல், செங்கோட்டையனுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டால் அது கூடுதல் பலத்தை கொடுக்கும். அதேபோல் செங்கோட்டையன் இந்த முடிவை விரக்தியின் விளிம்பில் எடுத்திருக்கலாம் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications