இந்த டைமிங் தான் ஹைலைட்! முக்கிய நேரத்தில் விஜய் பக்கம் வந்த செங்கோட்டையன்.. அதில்தான் ஸ்பெஷலிஸ்டே!
சென்னை: செங்கோட்டையன், தவெகவில் இணைந்துள்ள தருணம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. விஜய்யின் கரூர் பிரச்சார கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவம் தவெகவுக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்தச் சூழலில் தான் பிரச்சார வியூக மேலாண்மையில் பெயர் பெற்ற செங்கோட்டையன் தவெகவில் இணைந்திருக்கிறார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இதனைத் தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலக்கப்பட்டவர்களை கட்சியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்தார் செங்கோட்டையன். அதனால் கட்சியில் வகித்து வந்த பொறுப்புகள் அனைத்திலிருந்தும் செங்கோட்டையனை நீக்கி உத்தரவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

அதன்பிறகு அதிமுக அடிப்படை உறுப்பினராக மட்டுமே இருந்த செங்கோட்டையன், கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனுடன் இணைந்து பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குருபூஜையில் கலந்துகொண்ட நிலையில், அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கினார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணையப் போவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. அதனை உறுதிசெய்யும் விதமாக நேற்று சென்னை சென்ற அவர், சபாநாயகரை சந்தித்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து நேற்று மாலை சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள தவெக தலைவர் விஜய்யின் இல்லத்திற்கு சென்று ஆலோசித்தார்.
இன்று காலை 10 மணியளவில் பனையூரில் உள்ள தவெக அலுவலத்தில் வைத்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். தமிழக வெற்றிக் கழக அலுவலகத்திற்கு வருகை புரிந்த செங்கோட்டையன் விஜய்யை சந்தித்து பேசினார். பின்னர் அனைத்து நிர்வாகிகள் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். அவருக்கு தவெக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் என்ற முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்ட அமைப்பு செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
செங்கோட்டையன் ஆதரவாளர்களான அதிமுக முன்னாள் எம்.பி சத்யபாமா மற்றும் ஈரோடு மாவட்டடத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரும் தவெகவில் இணைந்தனர். சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் பயணித்த செங்கோட்டையன், தற்போது தனது அரசியல் பயணத்தில் புதிய பாதையை தேர்ந்தெடுத்திருக்கிறார்.
அரை நூற்றாண்டு காலம் அதிமுகவில் இருந்த செங்கோட்டையனுக்கு, தவெக நிர்வாக குழுவை வழிநடத்தும் ஒருங்கிணைப்பாளர் பதவியை வழங்கி இருக்கிறார் விஜய். கட்சி சார்ந்த விஷயங்கள் தொடர்பாக இரண்டாம் கட்ட நிர்வாகிகளை தொடர்பு கொள்ளாமல், நேரடியாக விஜய்யிடம் செங்கோட்டையன் ரிப்போர்ட் செய்யும் வகையில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் முக்கிய நிர்வாகியாக செயலாற்றி வருகிறார் செங்கோட்டையன். தமிழக அரசியலில் ஒரே தொகுதியில் நின்று அதிக முறை வென்ற வேட்பாளர் செங்கோட்டையன் தான். இவர் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 8 முறை வெற்றி பெற்று இருக்கிறார். 38 ஆண்டுகாலம் எம்.எல்.ஏவாக இருந்துள்ளார்.
பல்வேறு துறைகளில் அமைச்சராக பணிபுரிந்த அனுபவம் கொண்டவர் செங்கோட்டையன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த காலத்தில், அவரின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவர் கே.ஏ.செங்கோட்டையன். அப்போதெல்லாம் ஜெயலலிதாவின் பிரச்சார கூட்டங்களைத் திட்டமிடுபவரும் செங்கோட்டையன் தான். சிறப்பாக பணிகளைச் செய்து ஜெயலலிதாவிடம் பாராட்டுகளைப் பெற்றவர் செங்கோட்டையன்.
அண்மையில் விஜய்யின் கரூர் பிரச்சார கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவம் தவெகவுக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்தச் சூழலில் தான் பிரச்சார வியூக மேலாண்மையில் பெயர் பெற்ற செங்கோட்டையன் தவெகவில் இணைந்திருக்கிறார். எனவே, செங்கோட்டையனின் வரவு, தமிழக வெற்றிக் கழகத்திற்கு பலம் சேர்க்கும் என தவெகவினர் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications