நாளை உதயநிதி பிறந்தநாள்.. இன்று செங்கோட்டையன் ராஜினாமா.. கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு புரியும்!
சென்னை: பல ஆண்டுகளாக அதிமுகவில் இருந்த அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியான செங்கோட்டையன் தனது கோபி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தவெகவில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர் திமுகவில் கூட இணைய வாய்ப்பு இருப்பதாக அரசியல் பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தமிழ்நாடு அரசியலில் உள்ள மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர் செங்கோட்டையன். எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அரசியலில் இருக்கும் செங்கோட்டையன் அதிமுகவில் மிக முக்கிய தலைவராக இருந்தவர். ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரங்களையும் கூட வடிவமைத்தவராக செங்கோட்டையன் இருந்தார்.

செங்கோட்டையன் ராஜினாமா
இருப்பினும், அவருக்கும் தற்போதைய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. எடப்பாடிக்கு எதிராக செங்கோட்டையன் செயல்பட்ட நிலையில், அவரை கட்சியில் இருந்தே எடப்பாடி பழனிசாமி நீக்கினார். இதற்கிடையே இன்றைய தினம் அவர் எதிர்பாராத வகையில் தனது கோபி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
அவர் தவெகவில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியானது. இன்று மாலை அவர் தவெக கட்சி தலைவர் விஜய்யையும் நேரில் சந்தித்தார். முன்னதாக அவருக்கு இரு ஆப்ஷன்கள் இருப்பதாகவும் அவர் திமுகவில் கூட இணையலாம் என்றும் பத்திரிக்கையாளர் சுவாமிநாதன் கூறியுள்ளார்.
திமுகவில் இணையலாம்
இது தொடர்பாக புதிய தலைமுறை செய்தி சேனலுக்கு பத்திரிக்கையாளர் சுவாமிநாதன் அளித்த பேட்டியில், "செங்கோட்டையனுக்கு இப்போது இரண்டு வாய்ப்புகள் உருவாகி உள்ளது. ஒன்று அவர் தவெகவில் இணையலாம். அப்படி இல்லை என்றால் அவர் திமுகவிலேயே கூட இணையலாம். நாளைய தினம் உதயநிதி பிறந்தநாள் வருகிறது. இதனால் ஒரு பெரும் கவனம் ஈர்ப்பு நிகழ்வாக அவர் திமுகவில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
இருப்பினும், அவர் நீண்ட காலமாக திமுகவுக்கு எதிராக அதிமுகவில் பிரச்சாரம் செய்தவர். 9 முறை அதிமுக எம்எல்ஏ! வாழ்நாள் முழுக்க திமுக அரசியல் செய்தவர். அதேநேரம் அவர் திமுக நோக்கி நகர்ந்தால் அதிமுகவுக்கான நெருக்கடி குறைந்துவிடும். ஏனென்றால் தமிழ்நாட்டில் எப்போதும் திமுக vs அதிமுக என்றே அரசியல் களம் இருக்கிறது.
பாதிப்பு இல்லை
அவர் திமுகவில் இணைந்தால் அதிமுகவுக்கு சேதாரம் பெரியளவில் இருக்காது. ஏனென்றால் கடந்த காலங்களில் பல அதிமுக தலைவர்கள் திமுகவில் ஐக்கியமாகியுள்ளனர். இன்று தமிழக அமைச்சரவையில் இருக்கும் 8 அமைச்சர்கள் அதிமுகவில் இருந்து வந்தவர்கள் தான். தூத்துக்குடி அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி பலரைச் சொல்லலாம். அதிமுகவுக்கு துரோகம் செய்துவிட்டார் என அக்கட்சியினர் முடித்துவிடுவார்கள்.

இத்தனை நாள் பொறுமையாக இருந்தவர் செங்கோட்டையன்.. ஓபிஎஸ் கூட டிசம்பர் 15 வரை கெடு விதித்திருந்தார். அப்படியிருக்கும்போது உதயநிதி பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்னதாக செங்கோட்டையன் ராஜினாமா செய்திருக்கிறார். நாளை அவர் திமுகவில் இணைந்தால் அது பெரும் செய்தியாக மாறும். அதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்!
தவெக
அதேநேரம் செங்கோட்டையன் தவெகவில் இணையவும் வாய்ப்பு இருக்கிறது. எடப்பாடிக்கு எதிராகச் செயல்பட வேண்டும் என அவர் நினைத்தால் தவெகவில் இணையலாம். செங்கோட்டையன் தவெகவில் இணைந்தால் தான் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் செங்கோட்டையன் திமுகவில் இணைந்தால் அது தொகுதியில் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தும்.
என்ன காரணம்!
அதேநேரம் தவெகவில் இணைந்தால் அது பெரிய பாதிப்பு. ஜெயலலிதா பிரச்சாரத்தையே வடிவமைத்தவர் செங்கோட்டையன். எந்த ஊரில் எப்போது பிரச்சாரம் செய்ய வேண்டும். எங்கு செய்ய வேண்டும் என்பதை வழிநடத்தியவர். விஜய்க்கும் இப்போது அந்த இடத்தில் தான் தொய்வு இருக்கிறது. மேலும், அவர் தவெகவில் இணைந்தால் அதிமுக- தவெக கூட்டணி நிச்சயம் இல்லாமல் போகும். அதிமுகவுக்கு சேதாரம் மோசமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications