தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் என்றார்களே.. இன்று தர்மமே வென்றது.. ஓபிஎஸ்ஸை சாடிய செங்கோட்டையன்
சென்னை: தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் என்றார்களே இன்று தர்மமே வென்றுவிட்டது என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
Recommended Video
அதிமுகவில் ஒற்றைத் தலைமை தேவை என எடப்பாடி பழனிச்சாமி தீவிரம் காட்டி வந்தது. இதை ஓபிஎஸ் எதிர்த்தார். இரட்டை தலைமையே சரி வரும் என்றார். இந்த நிலையில் கடந்த 8 நாட்களாக ஓபிஎஸ் - எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களிடையே சலசலப்பு காணப்பட்டது.
இந்த நிலையில்தான் அதிமுக பொதுக் குழு கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் அவரோ கூட்டத்தை தள்ளி வைக்கும் அளவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. திட்டமிட்டபடி கூட்டம் நடைபெறும் என பதில் கடிதம் எழுதினார்.

காவல்துறை
இதையடுத்து ஆவடி காவல் துறைக்கும் ஓபிஎஸ் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் உள்அரங்கில் நடைபெறும் கூட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என கைவிரித்துவிட்டது. இந்த நிலையில்தான் ஜெயலலிதா நினைவிடத்தில் வேளச்சேரியை சேர்ந்த கேசவன் எனும் தொண்டர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயற்சித்தார்.

ட்விட்டர் பக்கம்
இதை அறிந்த ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்" என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கு விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

3 மணி நேரம்
சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு - இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் காரசார விவாதத்தை முன் வைத்தனர். இந்த நிலையில் அதிமுக பொதுக் குழு கூட்டம் நடத்த தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது. மேலும் அதிமுக சட்டவிதிகளில் திருத்தம் மேற்கொள்ளவும் தடை விதிக்க முடியாது என தீர்ப்பளிக்கப்பட்டது.

தர்மம் வென்றது
இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் என்றார்கள். இன்று தர்மம் மறுபடியும் வென்றுள்ளது. நாளை திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றார்.












Click it and Unblock the Notifications