என்ன ரத்த காவு எல்லாம் வாங்குது.. செங்கோட்டையன் வந்த சமயத்தில் விஜய் கட்சி அலுவலகத்தில் விபரீதம்
சென்னை: மூத்த அரசியல் தலைவரான செங்கோட்டையன் இன்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். இதற்கிடையே தவெக அலுவலகத்திற்கு செங்கோட்டையன் வருவதற்கு முன்பு அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பவுன்சர்கள் அங்கிருந்த செய்தியாளர்களைப் பிடித்துத் தள்ளிவிட்டுள்ளனர். இதில் ஒருவருக்கு ரத்த காயமும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதிமுக மூத்த தலைவராக இருந்த செங்கோட்டையனுக்கும் அக்கட்சியின் பொது செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே சில காலமாகவே மோதல் போக்கு நிலவி வந்தது. இதற்கிடையே சில வாரங்களுக்கு முன்பு செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இந்தச் சூழலில் தான் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார்.

செங்கோட்டையன்
நேற்றைய தினமே விஜய்யை தனியாகச் சந்தித்து செங்கோட்டையன் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தியிருந்தார். இந்தச் சூழலில் தான் இன்று தனது ஆதரவாளர்களுடன் சென்று செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். அவருக்கு 4 மேற்கு மாவட்டங்களுக்கான அமைப்புச் செயலாளர் பதவி தரப்பட்டுள்ளது. இது தவெகவுக்கு பலம் சேர்ப்பதாக இருக்கிறது.
இதற்கிடையே செங்கோட்டையன் இன்று தவெக கட்சி அலுவலகத்திற்கு வருவதற்கு முன்பு அங்கு ஒரு சம்பவம் நடந்தது. அங்குக் கட்சி அலுவலகத்தில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த பவுன்சர்கள் செய்தியாளர்களைத் தள்ளிவிட்டுள்ளனர். அதில் தடுமாறி விழுந்த செய்தியாளர் ஒருவருக்கு ரத்தம் கொட்டியுள்ளது.
பவுன்சர்கள்
அதேநேரம் விஜய் கட்சி அலுவலகத்தில் இதுபோல நடப்பது இது முதல்முறை இல்லை. மேலும், பவுன்சர்கள் மீதும் கூட கடுமையான விமர்சனங்கள் எழுந்து கொண்டே தான் இருக்கிறது. தவெக மாநாட்டில் கூட விஜய் ரசிகர்களை பவுன்சர்கள் தூக்கி வீசியது பேசுபொருளானது. அதேபோல முன்பு தவெக சார்பில் நடந்த சில நிகழ்ச்சிகளிலும் பவுன்சர்கள் ஓவர் ஆக்ரோஷமாக நடந்து கொள்வதாகப் புகார்கள் எழுந்தன.
அப்படியொரு சம்பவம் தான் மீண்டும் இன்று நடந்தது. இன்று தவெகவில் இணைய செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் பனையூர் அதிமுக அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். இது குறித்த செய்திகளைச் சேகரிக்கச் செய்தியாளர்களும் அங்குச் சென்றுள்ளனர். அப்போது கூட்டம் கொஞ்சம் அதிகரிக்கவே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பவுன்சர்கள் தள்ளிவிட்டுள்ளனர். அப்போது செய்தியாளர் ஒருவருக்கு அடிப்பட்டு ரத்த காயம் ஏற்பட்டுள்ளது.

மன்னிப்பு
இதனால் கோபமடைந்த செய்தியாளர்கள் இது குறித்துக் கேட்டுள்ளனர். மேலும், "அவர் பவுன்சரா..? இல்ல ரவுடியா..?" என்று ஆவேசமாகக் கேட்டனர். இதைப் பார்த்தவுடன் அருகே இருந்த தவெக பொதுச்செயலாளர்களில் ஒருவரான ஆதவ் அர்ஜுனா, செய்தியாளர்களைச் சமாதானம் செய்ய முயன்றுள்ளார். இருப்பினும், செய்தியாளர்களைத் தாக்கிய பவுன்சர் மன்னிப்பு கேட்டே தீர வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையடுத்து பவுன்சரை அழைத்த ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்கச் சொன்னார். அந்த பவுன்சரும் மன்னிப்பு கேட்டார். அப்போது ஏன் இப்படி மோசமாக நடந்து கொள்கிறீர்கள் எனச் செய்தியாளர்கள் கேட்டபோது, தற்கு பதிலளிக்காமல் பவுன்சர் நகர்ந்துவிட்டார். அதன் பிறகு ஆதவ் அர்ஜுனா சமாதானம் செய்த பிறகே, அங்கு சலசலப்பு குறைந்தது.
ரத்தக் காவு
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. அதற்கு நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளையும் பதிவிட்டு வருகிறார்கள். மூத்த தலைவர் ஒருவர் வரும்போது இன்னும் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம் என நெட்டிசன்கள் சிலர் பதிவிட்டுள்ளனர். இன்னும் சிலர் என்ன ரத்த காவுல்லாம் வாங்குது என்ற கவுண்டமணி வசனத்தையும் பதிவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications