தனிமரமாய் நிற்கப்போகிறாரா எடப்பாடி பழனிசாமி? செங்கோட்டையனை தவிர்த்துவிட முடியுமா? யதார்த்தம் இதுதான்
சென்னை: கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று அறிவித்தும், அதற்கு எதிராக செயல்பட்டார் என்று கூறி செங்கோட்டையனை அதிமுகவின் கட்சி உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் எடப்பாடி பழனிசாமி நீக்கியிருக்கிறார். இது எடப்பாடி பழனிசாமிக்குதான் பின்னடைவாக இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது, "ஈரோடு போன்ற இடங்களில் செங்கோட்டையன் வெளியேறுவதால் மிகப்பெரிய அளவு அண்ணா திமுகவுக்கு பாதிப்பு ஏற்படும். தொண்டர்களை பொறுத்தவரை அதிமுக தலைவர்களில் ஒருவராகத்தான் செங்கோட்டையன் தெரிவார்.

செங்கோட்டையன் வெளியேறி எதிர் நிலைக்கு போய்விட்டார் என்றாலும் அவரை கட்சி தொண்டர்கள் கைவிட மாட்டார்கள். ஏற்கெனவே செங்கோட்டையின் பொறுப்பு பறிக்கப்பட்டபோது, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு செங்கொட்டையனுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்கள்.
இப்படி செல்வாக்கு கொண்ட செங்கோட்டையனை எளிதில் ஒழித்துவிட முடியாது. இந்த சூழலை எதிர்கொண்டு செங்கோட்டையனும் நிற்பார். இது எடப்பாடிக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும். தற்போது எடப்பாடி எடுத்திருக்கும் நடவடிக்கை ஈரோடு, கோபி என 8-10 சட்டமன்ற தொகுதிகளில் எதிரொலிக்கும். தொண்டர்கள் கட்சியை அவ்வளவு சீக்கிரத்தில் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்" என்று கூறியிருக்கிறார்.
கட்சியை பலப்படுத்த வேண்டும், பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும், தொடர் தோல்வி கட்சியை காணாமல் போக செய்துவிடும் என்று செங்கோட்டையன் கூறி வந்தார். வெறுமென கருத்து மட்டும் தெரிவிக்காமல், அதிமுக தலைமை தனது கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்றும் இதற்காக 10 நாட்கள் கெடுவையும் விதித்தார். இதனையடுத்து செங்கோட்டையனின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டன. சூட்டுடன் சூடாக டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி அமித்ஷவை சந்தித்து பேச, பதிலுக்கு டெல்லிக்கு போய் நிர்மலா சீதாராமனை தனியாக சந்தித்து பேசினார் செங்கோட்டையன்.
இரு தரப்பும் தொடர்ந்து அமைதி காத்து வந்த நிலையில், தற்போது செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்திருந்த அறிக்கையில், "கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும்,
அவர்களுடன் ஒன்றிணைந்து, கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற காரணத்தினாலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த K.A.செங்கோட்டையன்(கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications