"கடலை முத்து ரொம்ப ஸ்ட்ரிக்ட்.." 4 நொடி வாய்ஸ் நோட்டிற்கு.. ரூ.7 லட்சம் அபராதம் விதித்த கோர்ட்
துபாய்: அமீரகத்தில் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு கடுமையான சட்டங்கள் இருக்கிறது. அப்படி தான் வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மெசேஜ் மூலம் முன்னாள் சக ஊழியரை அவதூறாகவும் ஆபாசமாகவும் திட்டிய பெண்ணுக்கு 30,000 திர்ஹம், அதாவது சுமார் ரூ.7 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வளைகுடா நாடுகளில் ஒன்றான அமீரகத்தில் பொதுவாகவே பல்வேறு கடுமையான விதிகள் இருக்கும். சிறிய தவறு செய்தாலும் கூட மிக பெரிய தண்டனையை நாம் அனுபவிக்க வேண்டி இருக்கும். இந்தியர்கள் பலரும் அமீரகத்திற்கு செல்லும் நிலையில், இதுபோன்ற விதிகளை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

நீதிமன்றம்
அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. முன்னாள் சக ஊழியரை வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ் மூலம் அவதூறாகவும், ஆபாச வார்த்தைகளாலும் திட்டிய பெண்ணுக்கு 30,000 திர்ஹம் (சுமார் ரூ.7 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவருக்கு 21,000 திர்ஹம் (சுமார் ரூ.4.9 லட்சம்) இடைக்கால இழப்பீடு வழங்கவும் அபுதாபி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூக வலைத்தளங்கள் மற்றும் மெசேஜிங் செயலிகளில் பிறரை அவமதிப்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் சைபர் குற்றச் சட்டத்தின்படி கடுமையான குற்றம் என்பதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
என்ன நடந்தது!
புகார்தாரர் தனது தோழியின் செல்போன் அழைப்புகளை எடுக்கவில்லையாம். சில காரணங்களால் அவரால் அழைப்புகளை எடுக்க முடியாமல் போனதாம். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், வாட்ஸ்அப் மூலம் கடுமையான மற்றும் ஆபாச வார்த்தைகள் அடங்கிய வாய்ஸ் மெசேஜை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. சில விநாடிகள் மட்டுமே நீடித்த அந்த வாய்ஸ் மெசேஜே பின்னர் நீதிமன்றத்தில் முக்கிய ஆதாரமாக மாறியது. பல ஆண்டுகளாக நீடித்த நட்பு மற்றும் தொழில்முறை உறவும் இந்தச் சம்பவத்தால் முறிந்துள்ளது.
இது தொடர்பான விசாரணையின்போது அந்த பெண், "நான் பல முறை கால் செய்தும் எடுக்கவில்லை. இதைக் கண்டிப்பதற்காகத்தான் அந்த வாய்ஸ் மெசேஜை அனுப்பினேன். அவரை அவமதிக்கும் நோக்கம் இல்லை. நாங்கள் நீண்ட கால நண்பர்கள்" என்று அந்த பெண் விளக்கம் அளித்தார். ஆனால், அந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை.
அபராதம்
தனிப்பட்ட உறவு இருந்தாலும், டிஜிட்டல் தளங்களில் அவதூறான மற்றும் இழிவான வார்த்தைகளுக்குச் சட்டத்தில் எந்த விதிவிலக்கும் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, அந்த பெண்ணுக்கு 30,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்டவருக்கு 21,000 திர்ஹம் இடைக்கால இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மற்றும் மெசேஜிங் செயலிகளில் கோபத்தில் அனுப்பப்படும் சில நொடிகள் வாய்ஸ் நோட் அல்லது வீடியோவுக்கும் கூட நீங்கள் அமீரகத்தில் பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்பதையே இந்த தீர்ப்பு காட்டுகிறது. ஆன்லைன் உரையாடல்களும் சட்டத்தின் கண்காணிப்பில் தான் உள்ளன என்பதால், நாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகள் பொதுமக்களுக்கு மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர்.














Click it and Unblock the Notifications