திமுகவில் கடும் புகைச்சலை கிளப்பிவிட்ட ராஜ்யசபா தேர்தல் வேட்பாளர்கள்.. ஆளுக்கொரு திசையில் ஆதங்கம்!
சென்னை: திமுகவில் ராஜ்யசபா தேர்தலுக்கான அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் தொடர்பாக அந்த கட்சிக்குள் மிக கடுமையாக ஆதங்கமும் ஆற்றாமையும் வெளிப்படுகிறது என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.
அதிமுகவின் எம்.பி.க்களாக இருந்த கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ராஜினாமா செய்தனர். இதையடுத்து அந்த 2 இடங்களும் காலியாகின. இந்த இடங்களுக்கு அக்டோபர் 4-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த 2 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தலில் டாக்டர் கனிமொழி, நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் ஆகிய இருவரை களத்தில் நிறுத்தியிருக்கிறது திமுக. இருவரும் போட்டியின்றி வெற்றிப்பெறுவது உறுதியாகியிருக்கிறது.

அவருக்கே ஏன் வாய்ப்பு?
ஆனால், இவர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு, திமுகவில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. டாக்டர் கனிமொழிக்கு பல முறை வாய்ப்பு தந்தாயிற்று. இருந்தும் அவருக்கே கொடுப்பது எதற்காக? என்கிற கேள்வி மூத்த நிர்வாகிகளிடம் எதிரொலித்தபடி இருக்கிறது. கட்சியில் மட்டுமல்ல திமுக மகளிர் அணியில் இது மிக பெரிய அதிருப்தியை உருவாக்கி வருகிறது.

ஆதங்கத்தில் மகளிர் அணி
பெண்களுக்கான கோட்டாவில் கொடுப்பதாக இருந்தால் கட்சியின் மகளிர் அணியிலிருந்து ஒருவரை தேர்ந்தெடுக்கலாமே? இளைஞரணியைப் போல கட்சியின் வெற்றிக்காக தேர்தல் களத்தில் கடுமையாக உழைப்பது மகளிர் அணிதான். அப்படியிருக்கையில் மகளிர் அணிக்கான உழைப்பை அங்கீகரிக்கவே மாட்டீர்களா? என்று மகளிர் அணியில் கொந்தளிப்பு அதிகரித்துக் கிடைக்கிறது.
Recommended Video

ராஜேஷ்குமாருக்கும் எதிர்ப்பு
டாக்டர் கனிமொழிக்கு எதிர்ப்பு கிளம்பியிருப்பது போல நாமக்கல் ராஜேஷ்குமாருக்கும் எதிர்ப்பு வலுத்துள்ளது. மு.க.ஸ்டாலின் குடும்பத்தினரின் பலத்த ஆதரவு என்கிற தகுதிதான் ராஜேஷ்குமாரை தேர்வு செய்ய வைத்திருக்கிறது என்பது திமுகவின் அடிப்படை தொண்டருக்கும் தெரியும். இவர்களைப் போன்ற பணபலம் படைத்தவர்கள், தலைமைக்கு மிக நெருக்கமானவர்கள் ஏன் மக்களை சந்திக்கும் தேர்தல்களில் போட்டியிடக் கூடாது? என்கிற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.

வழக்கமான பார்முலா எங்கே?
பொதுவாக திமுகவில் ராஜ்யசபா, மேல்சபைக்கு கொள்கையாளர்கள், பணபலமில்லாத காரணத்தால் தேர்தலை எதிர்கொள்ள வாய்ப்பில்லாதவர்களுக்குதானே சீட் வழஙகப்பட்டு வந்தது, இப்போது எல்லாமே தலைகீழ்... பணமும் லாபி செய்கிறவர்களும்தான் சீட் பெற முடியும் என்கிற அதிருப்தி கடுமையாக எழுந்துள்ளது. மேலும் அதிமுகவில் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த முகமது ஜான் மறைவை அடுத்து காலியான இடத்துக்கு ஒரு முஸ்லிம்களுக்கு வாய்ப்புத் தந்தது திமுக தலைமை.

ஜாதி அடிப்படையிலும் கோபம்
அப்படியானால் வன்னியர் முனுசாமியும், முக்குலத்தோர் வைத்தியலிங்கமும் ராஜினாமா செய்ததால் காலியான இடத்துக்கு முறையே வன்னியருக்கும் முக்குலத்தோருக்கும் தானே வாய்ப்பைத் தந்திருக்க வேண்டும்? ஏன், தரவில்லை? என்றும் திமுக சீனியர் வன்னியர் தலைவர்கள் கேள்வி எழுப்பியபடி இருக்கிறார்கள்.

கொங்கு மண்டலத்துக்கு ஏன் வாய்ப்பு?
மேலும், கொங்கு மண்டலத்தில் திமுகவை தோற்கடித்தவர்கள் கொங்கு வேளாளர்கள். முக்குலத்தோர் எப்படி திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்களோ அந்த வரிசையில் கொங்கு வேளாளர் சமூகமும் சேர்ந்துள்ளது. இனி எந்த சூழலிலும் கொங்கு வேளாளர்கள் திமுகவை ஆதரிக்கப் போவதில்லை. அப்படியிருக்க, திமுகவை தோற்கடித்த கொங்கு வேளாளர் சமூகத்திற்கே முக்கியத்துவம் கொடுத்தால் மற்ற சமூகத்தினர் எல்லாம் கிள்ளுக்கீரைகளா? என்கிற ரீதியில் அவர்களது கோபம் வெடித்தபடி இருக்கிறது












Click it and Unblock the Notifications